சஹாப்தீன் -
மேல் மாகாண சபை மற்றும் தென் மாகாண சபைகளின் அதிகாரங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் கைப்பற்றியுள்ளது. ஆயினும், இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செல்வாக்கு 2009ம் ஆண்டு இவ்விரு மாகாணங்களுக்கும் நடைபெற்ற தேர்தலில் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடும் போது குறைவடைந்துள்ளது. இதே வேளை, சிறு கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்துள்ளன.
மேல் மாகாண சபை மற்றும் தென் மாகாண சபைகளின் அதிகாரங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் கைப்பற்றியுள்ளது. ஆயினும், இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செல்வாக்கு 2009ம் ஆண்டு இவ்விரு மாகாணங்களுக்கும் நடைபெற்ற தேர்தலில் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடும் போது குறைவடைந்துள்ளது. இதே வேளை, சிறு கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்துள்ளன.
இத்தேர்தலில் மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 56 ஆசனங்களையும், ஐ.தே.க 28 ஆசனங்களையும், முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி 09 ஆசனங்களையும், ஜே.வி.பி 06 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 02 ஆசனங்களையும், ஜனநாயக மக்கள் முன்னணி 02 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 01 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
இக்கட்சிகள் பெற்றுக் கொண்ட ஆசனங்களை 2009ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்குகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு மேல் மாகாண சபைக்கு நடைபெற்ற தேர்தலில் 68 ஆசனங்களையும், தென் மாகாண சபைத் தேர்தலில் 38 ஆசனங்களையும் பெற்றது. இதன்படி, 2009ம் ஆண்டை விடவும் மேல் மாகாண சபையில் 12 ஆசனங்களையும், தென் மாகாண சபையில் 05 ஆசனங்களை குறைவாகவும் ஆளுங் கட்சி இழந்துள்ளது.
ஐ.தே.க மேல் மாகாண சபையில் 28 ஆசனங்களையும், தென் மாகாண சபையில் 14 ஆசனங்களையும் வெற்றியீட்டியுள்ளது. 2009ம் ஆண்டு மேல் மாகாண சபையில் 30 ஆசனங்களையும், தென் மாகாண சபையில் 14 ஆனசங்களையும் பெற்றது. இதன் படி மேல் மாகாண சபையில் 02 ஆசனங்ளை இழந்துள்ளது. அதே வேளை, தென்மாகாண சபையில் 14 ஆசனங்களையும் தக்க வைத்தள்ளது. என்றாலும், ஐ.தே.கவின் செல்வாக்கு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜே.வி.பியின் செல்வாக்கு இரு மாகாணங்களிலும் 2009ம் ஆண்டை விடவும் (2014இல்) இம்முறை அதிகரித்துள்ளது. முதற் தடவையாக போட்டியிட்ட ஜனநாயக கட்சி ஆட்சியாளர்களையும், ஏனைய கட்சிகளையும் மூக்கில் விரல் வைக்கச் செய்துள்ளது.
மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி மேல் மாகாணத்தில் தமிழ் மக்களின் தனிப் பெரும் கட்சி என்பதை தேர்தல் முடிவுகளின் மூலமாக காட்டியுள்ளது.
முஸ்லிம் கட்சிகளையும், முஸ்லிம் வாக்காளர்களையும் இவ்விரு மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகளுடன் அவதானிக்கும் போது, முஸ்லிம் வாக்காளர்கள் முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள். அக்கட்சிகளின் செல்வாக்கும் பாதுகாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் வாக்காளர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் வாக்குகளை அளிக்கவில்லை.
மேல் மாகாண சபைத் தேர்தலில் மு.கா இம்முறை 49515 (01.95 வீதம்) வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது. கொழும்பு மாவட்டத்திலும், கம்பஹா மாவட்டத்திலும் தலா ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 12056 வாக்குகளைப் பெற்ற போதிலும், ஓரு ஆசனத்தையேனும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. 2009ம் ஆண்டு மேல் மாகாண சபைத் தேர்தலில் மு.கா 49388 (02.12 வீதம்) வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களைப் பெற்றிருந்தது. 127 வாக்குகள் அதிகரித்துள்ளது. ஆதலால், மு.காவின் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்படவில்லை எனலாம்.
மு.காவின் இந்த நிலையை பாதுகாத்துக் கொள்வதற்கு தலைவர் ரவூப் ஹக்கிம் மிகப் பெரிய பிரச்சாரங்களை மேற் கொண்டார். அரசாங்த்தையும், பொது பல சேன போன்றவைகளையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இவரின் பிரச்சாரப் பணிக்கு மு.காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகம் பேர் பக்க துணையாக நிற்கவில்லை. தேர்தல் பிரச்சாரங்களை தவிர்த்துக் கொண்டும், ஓரிரு கூட்டங்களில் முகங்களை காட்டி விட்டு, தேர்தல் பெறுபேறுகளின் பின்னர், வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் வாக்கு வேட்டையில் ஈடுபட்டவர்களைப் போன்று தங்களை காண்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியின் தோல்வியை விடவும், அரசாங்கத்தினர் தங்களை கோபித்துக் கொள்ளக் கூடாதென்பதற்கு முன்னுரிமை கொடுத்து, தங்களுக்கு முகவரிகளையும், சொகுசுகளையும் பெற்றுக் கொடுத்த கட்சியின் வெற்றிக்கு உழைக்கவில்லை. ஆதலால், மேல் மாகாண சபைத் தேர்தலில் மு.கா அடைந்துள்ள வெற்றி தனியே ரவூப் ஹக்கிமையே சாரும்.
இதே வேளை, தமது பிரச்சாரத்திற்கு திரண்டு வருகை தந்திருந்த மக்கள் தொகையை வைத்து தங்களுக்கு 04 ஆசனங்கள் கிடைக்குமென்று ரவூப் ஹக்கிம் கணிப்பிட்டிருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. களுத்துறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை எதிர் பார்த்து ஏமாந்துள்ள ரவூப் ஹக்கிம், களுத்துறை மாவட்டத்திற்கு கட்சியின் பொறுப்;பாளராக உள்ள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மீது சீறிப்பாய்ந்ததாகவும், கட்சியை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கடிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென் மாகாண சபைத் தேர்தலில் 2009ம் ஆண்டு காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மு.கா போட்டியிட்டு முறையே 2273, 4280 (6553) வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. ஆனால், இம்முறை மாத்தறை மாவட்டத்தில் மட்டும் போட்டியிட்டு 1419 வாக்குகளையே பெற்றுள்ளது. மாத்தறை மாவட்டத்தில் மு.காவின் செல்வாக்கு பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
ரவூப் ஹக்கிம் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு, கட்சியின் வெற்றியை 2009ம் ஆண்டை விடவும் அதிகரிப்பதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டார். ஆனால், முஸ்லிம் வாக்காளர்கள் முஸ்லிம், உரிமை, அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களை தேர்தல் கால நாடகமாகவே எண்ணிக் கொண்டார்கள். மறு புறத்தில் ரவூப் ஹக்கிம் அவ்வாறு பிரச்சாரம் செய்திருக்கா விட்டால், மு.கா இன்று தக்கவைத்துக் கொண்ட வெற்றியைக் கூட அடைந்திருக்க முடியாது. மண் கவ்வல் நிலையை அடைந்து கொள்ள வேண்டிருக்கும்.
மேல் மாகாண சபையில் முதற் தடவையாக தனித்துப் போட்டியிட்ட அமைச்சர் றிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 15491 வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப் கைப்பற்றிக் கொண்டது. இந்த வெற்றி அக்கட்சிக்கு உச்சாகத்தை கொடுப்பதாக அமைந்துள்ளது. அத்தோடு, இக்கட்சி மு.காவிற்கு நாட்டின் பல பாகங்களிலும் சவாலாக மாறிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, மேற்படி இரு மாகாணங்களிலும் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் எவரும் வெற்றி பெறவில்லை. மேல் மாகாண சபையில் கடந்த 14 வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலமாக பெற்று வந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் இம்முறை இல்லாமல் போயுள்ளது. சிரேஸ்ட அமைச்சர் பௌஸின் மகன் நௌசர் பௌஸியும் தோல்வி அடைந்துள்ளார். இவருக்கு தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போனஸ் ஆசனத்தை வழங்கியுள்ளது.
ஆளுந் தரப்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் எவரும் வெற்றி பெறாதிருப்பது, 2013இல் நடைபெற்ற மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஆளுந் தரப்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்தமையை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது.
மத்திய மாகாண சபை, வடமேல் மாகாண சபை, மேல் மாகாண சபை மற்றும் தென் மாகாண சபை ஆகியவற்றின் தேர்தல் முடிவுகளை அவதானிக்கையில், முஸ்லிம் வாக்காளர்களில் பெரும்பான்மையினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிப்பதனை தவிர்;த்து வருகின்றார்கள் எனலாம். தங்களின் மீது பௌத்த இனவாதம் அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற எதிர் நடவடிக்கைகளை அரசாங்கம் கட்டுப்படுத்த தவறிவிட்டதென்பதன் வெளிப்பாடாகவே அரசாங்கக் கட்சிக்கு முஸ்லிம்களில் பெருந் தொகையினர் வாக்களிக்கவில்லை. இதனால்தான், முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளார்கள்.
இதே வேளை, மேல் மாகாண சபை தேர்தலில் 07 முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஐ.தே.கவில் போட்டியிட்ட 04 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
ஜே.வி.பிக்கு மேல் மாகாண சபை மற்றும் தென் மாகாண சபையில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமான தொகையினர் வாக்களித்துள்ளார்கள். இதனால், முஸ்லிம்கள் தங்கள் சார்பாக உள்ள கட்சிகளில் நம்பிக்கை இழந்துள்ளார்கள் என்பது நிருபணமாகின்றது.
Virakesari weekly 06.04.2014
0 comments:
Post a Comment