• Latest News

    April 07, 2014

    வறட்சியால் இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் விவசாயம் பாதிப்பு

    இலங்கையின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்திருக்கின்றது.

    வட மாகாணத்தில் வவுனியாவில் அதிகூடிய வெப்ப நிலைமையாக 40 டிகிரி வெப்பம் பதிவாகியிருப்பதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜயசேகர கூறியிருக்கிறார்.

    இந்த வருடம் பல விவசாய மாவட்டங்கள் கூடுதலான வறட்சியை எதிர்நோக்கியிருப்பாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

    வவுனியா, மன்னார், அனுராதபுரம், பொலன்னறுவை, குருணாகலை, புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்கள் வறட்சியினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதேவேளை, இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட பல இடங்களில் இம்மாதம் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையில் சூரியன் கடும் வெப்பத்துடன் உச்சம் கொண்டிருக்கும் என்று காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் ஜயசேகர தெரிவித்திருக்கின்றார்.

    விவசாயம் பாதிப்பு
    குடிநீர்ப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது
    குடிநீர்ப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது
    தற்போதைய வறட்சி காரணமாக வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் விவசாயம் ஸ்தம்பித நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக கொழும்பு பல்கலைக்கழக பூகோள பிரிவு பேராசிரியர் எஸ்.அன்ரனி நோபர்ட் அவர்கள் கூறியிருக்கின்றார்.

    பூகோளம் வெப்பமடைவதாலும், சூரியனில் இருந்து திடீரென வெப்ப ஒளிவட்டம் தோன்றி வெப்பத்தை அதிக அளவில் வெளியிட்டிருப்பதனாலும், கூடிய வெப்ப நிலைமை அடுத்த சில வருடங்களுக்குத் தொடர்ந்து நிலவும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    வடபகுதி நிலைமை குறித்து கருத்து வெளியிட்ட வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வட மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற வகையில், உட்கட்டமைப்புக்கள் சிதைவடைந்துள்ளதுடன், நிதியூட்டம் குறைந்த பிரதேசமாகவும் திகழும் நிலையில் இயற்கையின் பாதிப்பாக கடும் வறட்சியையும் எதிர் நேக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

    "இம்முறை வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 91 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், வறட்சி காரணமாக 64 ஆயிரம் ஹெக்டேரில் மாத்திரமே நெல் பயிரிடப்பட்டது. அதிலும் வறட்சியினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அரைவாசியிலேயே நெல் உற்பத்தியைப் பெற முடிந்தது. இரணைமடு குளத்தின் கீழ் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சிறுபோகம் செய்வதுண்டு. ஆனால் குறத்தில் நீர் இல்லாத காரணத்தினால் அதன் பத்தில் ஒரு பங்காகிய 800 ஏக்கரில் மாத்திரமே சிறுபோகத்தில் நெற்செய்கைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. அடுத்த கால போகத்திற்குத் தேவையான விதைநெல் உற்பத்திக்காகவே இந்த முயற்சி முக்கியமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது" என்று அவர் தெரிவித்தார்.

    வறட்சியினால் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதற்கென அரசாங்கம் மாவட்டம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபா நிதியை அரசு ஒதுக்கியிருப்பதாகவும், இந்த நிதியைப் பயன்படுத்தி வினைத்திறன் மிக்க வகையில் குடிநீர் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு மாகாண சபையை அதிகாரிகள் கலந்து ஆலோசிக்கவோ இணைந்து செயற்படவோ இதுவரையில் முன்வரவில்லை என்றும் மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.
    BBC-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வறட்சியால் இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் விவசாயம் பாதிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top