நரேந்திர மோடியின் வெற்றி இலங்கைக்கு
பெரும் பாதகமாகவே அமையும். அத்துடன் இலங்கைக்கு எதிரான மேற்குலக நாடுகளின்
அழுத்தங்கள் இனி மோடியூடாகவே வருமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர்
கே.எம்.வசந்த பண்டார தெரிவித்தார். இந்திய பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதா
கட்சித் தலைவர் நரேந்திர மோடி வெற்றியீட்டியுள்ளதுடன் இந்தியாவின்
பிரதமராக ஆட்சிபீடமேறவுள்ளார். இது தொடர்பில் தேசப்பற்றுள்ள தேசிய
இயக்கத்தின் செயலாளர் கே.எம். வசந்த பண்டாரவை தொடர்பு கொண்டு கேட்ட போது
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ;
அத்துடன் அமெரிக்காவினூடாக இந்தியாவுக்குக்
கிடைக்கும் அதீத பலம் இலங்கைக்கு எதிரான மேற்குலக நாடுகளின்
அழுத்தத்திற்கு போஷாக்களிக்கக்கூடும். அதாவது இலங்கைக்கெதிரான மேற்குலக
நாடுகளின் அழுத்தங்கள் இனிமேல் பலமான நரேந்திர மோடியின் அரசாங்கத்தினூடாகவே
வரக்கூடும்.
அதேவேளை நரேந்திர மோடி தனது தேர்தல்
விஞ்ஞாபனத்தில் தமிழருக்கான சம அதிகார பலம் குறித்து ஆதரவான கருத்துகளை
தெரிவித்திருப்பதால் நரேந்திர மோடியின் அரசாங்கம் காங்கிரஸ்
அரசாங்கத்தைவிட இலங்கையின் 13 ஆம் திருத்தச் சட்டத்தில் அதிக கவனம்
செலுத்துவதுடன் , 13 ஆம் திருத்தத்தில் காணப்படும் அதிகாரங்களை
அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முயற்சிக்கும்.
அத்துடன் நரேந்திர மோடியின் இந்துத்துவ
கொள்கையும் இனவாதப் போக்கும் இலங்கையின் அரசியல் விவகாரங்களில் தாக்கத்தை
ஏற்படுத்தும். குறிப்பாக இலங்கையில் பிரிவினைவாத நடவடிக்கைக்கு நரேந்திர
மோடியின் அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊக்கமளிக்கும்.
அதேவேளை ஜெயலலிதாவின் கட்சி
பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோதும் அக்கட்சி தனது அபிலாஷைகளைப்
பூர்த்தி செய்வதற்காக நரேந்திர மோடியுடன் இணைந்து செயற்படும். இதனூடாக
இலங்கைக்கு எதிரான தமிழ்நாட்டின் செயற்றிட்டங்கள் நரேந்திர மோடியின்
ஆதரவுடனேயே நிறைவேற்றப்படும். நரேந்திர மோடியின் வெற்றி இலங்கைக்கு பெரும்
பாதகமாகவே அமையுமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.-GTN
0 comments:
Post a Comment