• Latest News

    May 29, 2014

    பாக்குவெட்டிக்குள் அகப்பட்ட பொருளை போன்று முஸ்லிம்கள்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா:
    இலங்கை தொடர்பிலும்,இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பிலும் பல் வேறுபட்ட பேச்சுக்கள் நாட்டுக்குள்ளும்,சர்வதேச புலம் பெயர் சமூகங்கள் மத்தியிலும் பேசப்பட்டுவருகின்றன.கடந்த பல மாதங்களாக இலங்கையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் முதல் உரிமை மறுக்கப்படுகின்றமை தொடர்பிலும்,அவை முற்றுப் பெறாத தொடர் கதையாகத்தான் இருந்து வருகின்றது. 

    குறிப்பாக இலங்கை தேசம் என்பது தனிச்சிங்கள சமூகத்திற்கு மட்டும் உரித்தானது என்று கூக்குரலிட்டுக் கொண்டு திரிந்த காவியுடை தரித்த சிலர் அதற்கு அனுசரனையாளர்களையும் பெற்றுள்ளது தொடர்பில் கடந்த கால செய்திகளும்,போதுமான ஆதரங்களுடனான ஆக்கங்களும் வாசகர் உள்ளத்தில் தைத்திருக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

    எமது நாட்டில் எழுத்து ரீதியான சகல உரிமைகளும் இருந்த போதும்,துரதிஷ்டம் அவற்றை முன்னெடுப்பதற்கு போதுமான பலம் இன்மை என்பது உண்மையாகும்.கசப்பாயினும் உண்மையினை பேசுங்கள் என்ற நபிமொழிக்கொப்ப சில யதார்த்தமான விடயங்களை நாம் பகிர்ந்து ஆகவேண்டும்.

    முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இனவாத தாக்குதல் தொடர்பில் அதனை எதிர் கொள்ளுவதற்கு எமக்கிடையில் ஒற்றுமியின்மை என்பது வேதனைப்பட வேண்டியதொன்றாகும்.தேர்தல் காலங்கள் வந்துவிட்டால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் யார் பெரியவர்,யாரால் மக்களுக்கு பணி செய்ய முடியும் என்ற வேதவசனங்களுடன் சந்தைக்கு வந்து தமது செயற்பாடுகளை முன்னெடுப்பது இலங்கையினை பொருத்த வரையில் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த ஒரு வகையான கலாச்சார நாகரீகம் என்று கூறினால் அது மிகையாகாது.உண்மைகளை செல்லுகின்ற போது வலி எடுக்கும் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.இந்த அரசியலுக்கு காய் நகர்த்தல் மற்றும் பேரம் பேசும் சக்தியினை தக்க வைத்தல் போன்ற அளுத்து சலித்துப் போன வீர வசனங்களையே அரசியல்வாதிகள் கூவி வருகின்றனர்.இறுதியில் தேர்தல் முடிந்ததும்,அடுத்த தேர்தல் வரும் வரையில் பார்த்திருந்து விட்டும்,அவ்வப்போது மரணம்,சோகம்,பெருநாள் என்று வருகின்ற போது அறிக்கைகள் மூலம் மக்கள் உள்ளங்களில் குடியிருக்க ஆசைப்படும் அசட்டுத்தனமான மெத்தனப் போக்கினையே காணலாம்.தொடரும் இந்த நிலைகளுக்கு மத்தியில் அரசியல்வாதிகளின் குடும்பம்,எதிர்காலம் என்பன அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு கைவிரலின் நடுவிரல் போன்று ஆதிக்கம் செலுத்துவதையும் நாம் காண்கின்றோம்.இது தான் அரசியல்,ஆங்கிலத்தில் கூறுவது (POLITICS).இதனை மக்கள் இன்று போலி டிரிக்ஸ் என்பதை புரிந்து கொண்டார்கள்.

    இவ்வாறான ஒருவகையான சிந்தணைகளுக்கு மத்தியில்,எமது இஸ்லாமிய இயக்கங்களின் புரிந்துணர்வு தொடர்பிலும் கேள்விகள் எழுகின்றன.இது குறித்து பேசினால் உடனடியாக காற்றில் பத்துவாக்கள் பறந்துவருகின்றன.தன்னிடம் உள்ள குறைகளை ஒருவர் சுட்டிக்காட்டினால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு உள்ளங்கள் இன்று மாறிவிட்டன.இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மதசார் பிரச்சினைகளுக்கு சில அமைப்புக்களின் செயற்பாடுகளும் காரணம் என்பதை சில வாரங்களுக்கு முன்னார் வெளியான ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் மூலம் பார்க்க முடிந்தது.ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிப் பிடித்து கொள்ளுங்கள்,உங்களுக்கிடையில் தர்க்கித்து பிரிந்து விடாதீர்கள் என்ற இறை வசனங்களும்,நபி மொழிகளும் எம் கண்முன் தோன்றி நிற்கும் போது,இயக்கங்கள் தமக்கு எதிரான முஸ்லிம்களை காட்டிக் கொடுப்பதும்,பத்திரிகை மாநாடுகள் வைத்து சுடு சொல் கூறுவதும்,இயக்கங்களின் பெயர்களை கூறி வழிகேட்டில் இருப்பவர்கள் என்று மனத் தீர்ப்பு வழங்குவதும் எவ்வளவு துாரம் மார்க்க நடைமுறையின் வரம்பு என்று எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

    பெரும்பான்மை சிங்கள அமைப்புக்களும்,சிறுபான்மை அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் இன்று இலங்கை முஸ்லிம்களை நெருக்கி அழித்துவிட துடிக்கின்றனர்.பாக்குவெட்டிக்குள் அகப்பட்ட பொருளை போன்று முஸ்லிம்கள் தவித்துக் கொண்டிருக்கின்ற போது அவர்களை காப்பாற்ற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விடுத்து தமது இயக்கத்தின் பெருமைகளை பேசுகின்ற ஒரு வகையான இயக்க வெறியினை சிலர் இன்றும் செய்து வருகின்றனர்.

    இது தொடர்பில் ஒற்றுமைப்படுத்த வேண்டிய முஸ்லிம் அமைப்புக்கள் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.புத்தி ஜீவிகள் யார் பக்கம் நின்று பேசுவது என்று புரியாமல் பரிதவிக்கின்றனர்.அதிலும் துறை சார்ந்தவர்களின் நிலை இதனை விட பரிதாபமாக இருக்கின்றது.நடப்பவை நடக்கட்டும் என்று கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

    ஆனால் இஸ்லாத்திற்காக தியாகங்களை செய்ய வேண்டியவர்கள் முஸ்லிம்கள்( நாங்கள் )..மாற்றமாக இன்று பெரும்பான்மை சமூகத்தில் உள்ள அரசியல் தலைமைகளும்,புத்தி ஜீவிகளும் முஸ்லிம்களை பாதுகாக்க புறப்பட்டுள்ளனர்.இது ஒரு புறத்தில் நாட்டின் இன ஒற்றுமைக்கு சிறந்தது என்று வாதிட்டாலும்,அதனது இறுதி விளைவு கேள்விக் குறியானதே…..

    இந்த நிலையில் முஸ்லிம்களின் எதிர்காலத்தை மையப்படுத்தி முதலில் பிரிந்து நின்று கருத்துக்களை கூறுவதை நிறுத்த வேண்டும்.அல்குர்ஆன்-அல்ஹதீஸ் அடிப்படையில் எந்த விடயத்தையும் நோக்கும் பண்பினை எமக்குள் எற்படுத்தும் பயிற்சியினை( தர்பீயத்) பெற வேண்டும்.இவ்வுலகில் எல்லாம் தெரிந்தவர்கள் எவரும் இல்லை.அவர்களும் கற்க வேண்டியது நிறைய உண்டு,அதற்கொப்ப தமது சகோதர முஸ்லிம்களை இயக்க ரீதியாக பிரித்து அவர்களை ஏனையவர்கள் மத்தியில் குறைத்து பேசும் மொழியினை கைவிட வேண்டும்.உலமாக்கள் ரசூல் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களின் வாரிசுகள் அப்படி என்றால் எவ்வாறு உலமாக்களுக்குள் ஏற்றம் இரக்கம் இருக்கலாம்.வழிகாட்டக் கூடியவர்கள் மக்களை பிரித்து இயக்கத்திற்காக பயன்படுத்துவது இனியும் எமக்கு வேண்டாம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாக்குவெட்டிக்குள் அகப்பட்ட பொருளை போன்று முஸ்லிம்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top