• Latest News

    May 13, 2014

    தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் - இன்றைய நிலைமை

    தம்புள்ளை ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல் தொடர்பில் மீண்டும் தலைதூக்கியுள்ள சர்ச்சை தொடர்பில் வௌ;வேறு தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. ரங்கிரி தம்புளு விகாராதிபதி ஸ்ரீ சுமங்கல தேரர் கடந்த செவ்வாய்க்கிழமை நாற்பது பொலீஸார் சகிதம் அங்கு பிரசன்னமாகி தர்க்கித்ததன் பின்னணியில் உருவான பதற்ற நிலை முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தையும், கவலையையும்  ஏற்படுத்தியிருந்தது. 

    கடந்த வெள்ளிக்கிழமை (09) அந்தப் பள்ளிவாசலில் நடைபெற்ற குத்பா பிரசங்கத்திலும், ஜூம்ஆ தொழுகையிலும் ஏராளமானோர் கலந்து கொண்டதாக அதன் நிருவாக சபை தலைவர் அலியார் உதுமா லெப்பை தெரிவித்தார். மௌலவி கலீல், சிங்களத்திலும், தமிழிலும் குதுபா பிரசங்கத்தை நிகழ்த்தியுள்ளார்.  அப்பொழுது பொலிஸார் பலர் அங்கிருந்தனர். 

    மாத்தளை நகரபிதா ஹில்மி கரீம், தம்புள்ளை நகர பிதா ஓபத்த சாலிய ஆகியோருடன் நகர அபிவிருத்தி அதிகார சபை உயர் அதிகாரி ஒருவரும் தம்புள்ளை பள்ளியில் அதன் நிருவாக சபை உறுப்பினர்களும் வியாழக்கிழமை (8) மாலையில் சந்தித்து பிரஸ்தாப பள்ளிவாசலை அகற்றுவதற்கு பதிலாக வேறு நான்கு காணித்துண்டுகளில் ஒன்றை விருப்பத் தெரிவாக தேர்ந்தெடுக்கலாம் என கூறியதாகவும் ஆனால், எந்தவோர் இடத்தையும் அவர்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டுக் கூறவில்லையென்றும் பள்ளிவாசல் நிருவாக சபைத் தலைவர் அலியார் உதுமாலெப்பை தெரிவித்தார். அவர்களது வேண்டுகோளுக்கு பள்ளிவாசல் நிருவாகிகள் இணங்க மறுத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

    அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியிடம் இதுபற்றி நேரில் வினவிய போது, அவ்வாறான மாற்றுக் காணிகளில் எவ்வளவு தொலை தூரத்தில் இருக்கப்போகின்றனவோ தெரியாது என்று கவலை வெளியிட்டார். 
    வியாழக்கிழமை (08) பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தௌபீக் ஆகியோர் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவை அவரது பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் சந்தித்து தம்புள்ளை பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படக் கூடாது என்றும், அதற்கெதிரான முன்னெடுப்புகளை தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் வேண்டுகோளொன்றை விடுத்துள்ளனர். வெசாக் விடுமுறை தினங்களில் கூட்டமாக வந்து அங்குள்ள பள்ளிவாசலை தகர்க்கப்போவதாக கசிந்துள்ள செய்தி பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள்  அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டிய பொழுது , அவ்வாறு நடைபெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாதென்றும், உரிய பாதுகாப்பு வழங்கப்படுமென்றும் தெரிவித்ததாக ஹரீஸ் எம்.பி. கூறினார்.

    தம்புள்ளை பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர் ஒருவரான சலீம்தீன் வியாழக்கிழமை (09) மாலையில் கொழும்பில் பௌத்த சாசன, சமய விவகார அமைச்சில் அமைந்துள்ள மத விவகாரங்களுக்கான விசேட பொலிஸ் பிரிவிற்குச் சென்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். (முறைப்பாட்டு இலக்கம் ஆர்.ஐ.பி. 02) சலீம்தீன்  ஏற்கனவே தம்புள்ளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார்.

    அதற்கமைய, நிலைமையை பற்றி ஆராய்வதற்காக மேல் மாகாண சிரேஷ்ட  பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக, தம்புள்ளை பிரதேச பொலிஸ் அதிகாரிகள் சிலரை திங்கள் கிழமை (12) கொழும்புக்கு வரவழைத்துள்ளதாக தெரிய வருகிறது. சலீம்தீன் ஞாயிற்றுக்கிழமை (11) தம்புள்ளை பொலிஸில் மீண்டும் ஒரு முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

    வெசாக் பண்டிகையின் போது பள்ளிவாசலுக்கு அண்மையிலுள்ள வீதியின் ஊடாக ஊர்வலம் செல்கையில், பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

    தம்புள்ளை பள்ளிவாசலுக்கு அருகிலும், வீதியின் மருங்கிலும் இருந்த மரங்கள் தறிக்கப்பட்டு அவற்றை ஞாயிற்றுக்கிழமை (11) இரவு சட்ட விரோதமாக அங்கிருந்து கொண்டு செல்ல எத்தனிக்கப்பட்ட போது அதுபற்றி அவசர பொலிஸ் பிரிவிற்கு (119) தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து வாகனம் மறிக்கப்பட்டு, அதிலிருந்த மரக் கட்டைகள் இறக்கப்பட்டுள்ளன.

    முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தற்பொழுது நாடு திரும்பியுள்ளதால், தம்புள்ளை பள்ளிவாசல் நிருவாகிகள் தரப்பில் அவரிடம்  தற்போதைய நிலைமை பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும், அது தொடர்பான முன்னெடுப்புகளை நிறுத்துவதற்கு பணிப்பதாகவும், விபரீதங்கள் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும்  ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.  

    டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் - இன்றைய நிலைமை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top