• Latest News

    June 18, 2014

    பொதுபல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிம்

    இந் நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக கலகங்களை தூண்டிவிடும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் உட்பட அதன் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு இனிமேலும் தாமதிக்காது முன்வராவிட்டால், அரசாங்கத்தின் மீது தமது மக்கள் முற்றாகவே நம்பிக்கை இழந்து விடுவர் என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்  தம்மைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசோன் இடம் தெரிவித்தார்.

    அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசோன் அமைச்சர் ஹக்கீமை புதன்கிழமை (18) முற்பகல் அவர் இல்லத்திற்குச் சென்று சந்தித்து தற்போதைய நிலைமை குறித்தும் இந்தச் சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் ஹக்கீமின் நிலைப்பாடு குறித்தும் ஏறத்தாழ ஒரு மணி நேரம் கலந்துரையாடினார்.

    முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இவற்றின் பின்னணி குறித்தும், அதற்கான காரணங்கள் எவை என்பன குறித்தும் திட்டவட்டமாக அறிந்து கொள்வதற்காக அமைச்சருடனான இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

    இந்தச் சம்பவங்கள் தொடர்பில் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து அமெரிக்கா இரண்டு அறிக்கைகளை விடுத்ததைப் பற்றி தூதுவர் சுட்டிக்காட்டிய பொழுது, அது பற்றி தாம் அறிந்திருப்பதாகக் கூறி அமைச்சர் நன்றி தெரிவித்தார். ஐ.நா செயலாளர் நாயகம் விடுத்த அறிக்கை பற்றியும் குறிப்பிடப்பட்டது.

    இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையில்  காணப்பட்ட அம்சங்களின் முக்கியத்துவத்தை தற்போதைய சம்பவங்கள் மிக ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் ஹக்கீம் கூறினார். இவ்வாறான சம்பவங்களைப் பற்றி முன்னர் தமது கட்சி நவநீதம் பிள்ளை அம்மையாருக்கு அறிக்கை சமர்ப்பித்தது எவ்வளவு பொருத்தமானது என்பதையும் அவர் தூதுவரிடம் கூறினார். 

    சிறுபான்மைக்கு எதிரான மற்றும் சமய நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கையாளும் ஐ.நா. விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதை அரசாங்கம் விரும்பாத போதிலும், அவரும், அவர்கள் இருவரும் இங்கு வந்து உண்மைகளை கண்டறிவது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதென்றும் அமைச்சர் ஹக்கீம் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்தார்.

    சவூதி அரேபியாவில் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் கூட்டத்திலும் இரு தினங்களுக்கு முன்னர் இங்கு முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தைப் பற்றி கண்டனம் தெரிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கை மேற்கொள்வது பற்றியும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அமானி மதனி என்ற அதன் செயலாளர் நாயகத்தின் கரிசனையைப் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.  

    வெறுப்பூட்டும் பேச்சுக்களை நிகழ்த்துவது தண்டனைக்குரிய குற்றமென இலங்கையின் சட்டமாக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது பற்றியும் அமைச்சர் தூதுவரிடம் கூறினார். அசாத் சாலியை பாரதூரமான சட்டத்தைக் காரணம் காட்டி அரசாங்கம் கைது செய்ய முடியுமாக இருந்தால், ஏன் பொதுபல சேனாவின் செயலாளரான மதகுருவை அரசாங்கம் கைது செய்யாமல் இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறது என்றும் அமைச்சர் தூதுவரிடம் தெரிவித்தார். ஞானசார தேரர் அளுத்கமையில் நிகழ்த்திய சிங்கள பௌத்த மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்யும் பேச்சு இணையத்தில்  உலகம் முழுவதிலும் பார்க்கக் கூடியதாக இருப்பதாகவும் அமைச்சர் தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.

    தூதுவர்  மிச்சேல் ஜே சிசோன் சம்பவங்கள் தொடர்பில் தமது கவலையை வெளியிட்டார். இங்கு நடைபெறும் சிறுபான்மையினருக்கு எதிராக இனவாத செயல்களை தமது நாடு உன்னிப்பாக உற்று நோக்கி வருவதாகவும் கூறினார்.
    இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகரும், அமைச்சரை சந்திக்கவிருக்கிறார். முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் போதிய கவனம் செலுத்தாது இருப்பதையிட்டு அமைச்சர் ஹக்கீமை திங்கள் கிழமை (16) இரவு சந்தித்த கட்டார், ஈரான், குவைத், பாகிஸ்தான், மலேசியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் செவ்வாய்க்கிழமை (17) இரவு சந்தித்த துருக்கி நாட்டின் தூதுவரும் கவலை தெரிவித்திருந்தனர். அமைச்சர் ஹக்கீம் ஐக்கிய அரபுக் குடியரசுத் தூதுவரையும், மாலைதீவின் தூதுவரையும் சந்திக்கவிருக்கிறார்.
    டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின்
    ஊடக ஆலோசகர்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொதுபல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top