பதினெட்டாவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு கையுயர்த்தி அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஒத்துழைத்ததன் காரணமாக நடைபெறும் அநியாயங்களுக்கு நாங்களும் பொறுப்புக் கூற வேண்டும். கட்சியைக் காப்பாற்றுவற்காக அப்போது அவ்வாறு நடந்துகொள்ள நேரிட்டது. அந்தத் தவறை நாங்கள் இழைத்ததினால்தான் இப்பொழுது உரிமையோடு தலைநிமிர்ந்து அவர்களிடம் உரத்துக்கூற வேண்டிய கடப்பாடு எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
ஊவா மாகண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பதுளை முஸ்லிம் வாலிபர் இயக்க மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (05) இரவு நடைபெற்ற இளைஞர்கள் பங்குபற்றிய பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.
ஊவா மாகாண சபைத் தேர்ல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள இவ்வேளையில், ஆங்காங்கே இடம்பெறும் வன்செயல்களை முன்னைய தேர்தல்களில் காலத்துக்குக் காலம் நாம் கண்டு வந்துள்ள நிலையில், பலம் பொருந்திய ஓர் அரசாங்கம், அதுவும் நடந்து முடிந்த தேர்தல்களில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தம்பட்டமடிக்கும் அரசாங்கம் மீண்டும் இந்தத் தேர்தலிலும் வன் செயல்களில் ஈடுபட்டு வருகின்றதென்றால், அது அரசு பலவீனமடைந்து கொண்டு போவதன் விளைவு என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
அது மட்டுமன்றி, தேர்தல் சட்டங்களை மீறும் சுவரொட்டி ஒட்டுவதுபோன்ற சிலவற்றை பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால், பாரதூரமான சட்ட மீறல்களை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவைபற்றி தேர்தல் ஆணையாளருக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எழுச்சித்திட்ட செயற்பாட்டாளர்கள் என்று ஊவா மாகாணத்தில் 16,000 பேர் களமிறக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்த முயற்சி இப்பொழுது தடை செய்யப்பட்டுள்ளது. தன்படி ஒவ்வொரு சமுர்த்தி ஊழியர்களும் தமக்குரிய பிரதேசத்தில் ஒரு வீட்டைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதில் மூன்றுபேர் வீதம் தங்குவற்கு வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். அதனூடாக பாரிய தேர்தல் மோசடிக்கு திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்தத் தேர்தலில் பலம்வாய்ந்த அரசாங்கம் ஒன்று செய்யக் கூடிய காரியமா இது? இது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டதிலும், முறையிடப்பட்டதிலும் இருந்தும், அந்த முயற்சிக்கு எதிராக இப்பொழுது கட்டளை பிறப்பி;க்கப்பட்டதில் இருந்தும் எங்களுக்கு நிலைமை நன்றாகத் தெளிவாகின்றது. இது அரசாங்கம் ஆட்டங்காண ஆரம்பித்திருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாங்கள் இருவர் தனித்து இந்தத் தேர்தலில் களம் இறங்கியுள்ளமை குறித்து பலவிதமான விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. போதவாக ஊடகங்களில், குறிப்பாக தமிழ் ஊடகங்களில் எங்களைப்பற்றிய தவறான விமர்சனங்களும், தலையங்கங்களும், கேலிச் சித்திரங்களும் கடந்த சில நாட்களாக அதிகம் வெளிவருகின்றன.
நாங்கள் அரசாங்கத்தின் ஏவலாளர்கள் என்றும் கைக்கூலிகள் என்றும் பொய்யான பிரசாரங்களை எதிர்கட்சியினர் மட்டுமன்றி ஆட்சியாளர்களும் தவறாகக் கூறிவருகின்றனர். ஒரு பத்திரிகையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பினால் கூட, ஒன்றுபடுத்த முடியாமல் கீரியும் பாம்பும் போன்றிருந்த முஸ்லிம் அமைச்சர்களான எங்களை ஒற்றுமைப்படுத்திய திடீர் சக்தி எது என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அந்தக் கேள்விக்கு ஒரு விடை இருக்கின்றது. அதற்கு அரசின் பிரதானி அல்லது ஆட்சித் தலைவர் என்றும் பொருள்கொள்ள முடியும்.
இந்த முயற்சியின் நோக்கம் என்ன என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்டின் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத வன்செயல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ள தீவிரவாதக் கும்பல்களின் அட்டகாசத்தை கண்டும் காணாமல் இருக்கும் ஆட்சித் தலைமையின் மீது முஸ்லிம்கள் வெறுப்படைந்துள்ளனர்.
அரசாங்கத்துக்கு கூஜாத் தூக்குபவர்கள் என்று எங்கள் மீது வீண் பழி சுமத்துபவர்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றேன். ஊவாவில் ஆரம்பித்திருக்கும் எங்களது ஒற்றுமையின் வெளிப்பாடு நாடுமுழுவதும் வியாபித்து, முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளை கட்டுப்படுத்தத் திராணியற்ற இந்த அரசாங்கத்துக்கு ஒரு பலமான செய்தியைச் சொல்லப்போகின்றது.
சிலருக்கு, எனது அமைச்சரவை சகாக்களான நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா போன்றவாகளுக்கு தற்காலிக ஆறுதல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். எங்களது ஒற்றுமையினால் ஐ.தே.க வுக்கு செல்லும் முஸ்லிம் வாக்குகளில் சரிவுநிலை ஏற்படலாம் என அவர்கள் ஓரளவு நிம்மதி அடைந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு பட வேண்டிய இடத்தில் படும். அவர்களை விட பெரியவர்களுக்கும் படவேண்டிய இடத்தில், பட வேண்டிய நேரத்தில் நம்முடைய ஒற்றுமை பலமான அடியைக் கொடுக்கும்.
உள் நாட்டில் போஷித்து வளர்க்கப்பட்டுவரும் இந்த தீவிரவாத கும்பல்களின் அடாவடித்தனம், அத்துமீறல் என்பனபோன்றவை இப்பொழுது முழு உலகத்துக்கும் தெரிய வந்து விட்டது.
இப்போது இன்னொரு புரளியாக 'நாட்டைக் காக்கும் நீல அணி' தலை தூக்கியுள்ளது. இந்த நாட்டைக் காக்கும் நீல அணி இந்த நாட்டு சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு செய்தது என்ன எனக் கேட்க விரும்புகின்றேன்.
நாடு காப்பாற்றப்பட்டது, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது, ஆனால் மிகப்பெரிய பயங்கரவாதம் இப்பொழுது தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சிறுபான்மையினர் மத்தியில் குறிப்பாக இந்நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்ச உணர்வு பற்றிய கேள்விக்கு நாம் என்ன பதிலைச் சொல்வது? இதற்காகத்தான் நாடு முழுவதிலும் வாழும் முஸ்லிம்களை ஓரணியில் திரட்டும் பணியை நாம் ஊவாவில் இருந்து ஆரம்பித்துள்ளோம்.
வன்செயல்களால் சாதிக்க முடியாதவற்றை தேர்தல் மோசடிகளால் சாதிக்கலாம் என அரசு எதிர்பார்க்கின்றது. அதனைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணையாளரும், மனித உரிமை ஆணைக்குழுவும் முயற்சித்தாலும் என்னதான் நடக்கப் போகின்றன. எனக்கென்றால் இந்த ஆணைக்குழுக்களில் எந்த நம்பிக்கையும் இல்லை. முதலில் இவற்றில் அரசாங்கத்தின் தலையீட்டுக்கு முடிவுகட்டப்படவேண்டும்.
பதினெட்டாவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு கையுயர்த்தி அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஒத்துழைத்ததன் காரணமாக இவ்வாறான அநியாயங்களுக்கு நாங்களும் பொறுப்புக் கூற வேண்டும். கட்சியைக் காப்பாற்றுவற்காக அப்போது அவ்வாறு நடந்துகொள்ள நேரிட்டது. ஆந்தத் தவறை நாங்கள் இழைத்ததினால்தான் இப்பொழுது உரிமையோடு இவற்றைத் தலைநிமிர்ந்து அவர்களிடம் உரத்துக்கூற வேண்டிய கடப்பாடு எங்களுக்கிருக்கின்றது.
இந்த இக்கட்டான கால கட்டத்தில் பதுளை மாவட்ட முஸ்லிம்கள் மிகவும் ஒற்றுமையாக இரட்டை இலைச் சின்னத்துக்கு வாக்களித்து எங்களது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
ஊலமாக்களும், வேட்பாளர்களும், இளைஞர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம்; அவர்களும் உரையாற்றினார்
0 comments:
Post a Comment