• Latest News

    September 24, 2014

    எதிர்வரும் 28ம் திகதி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு நாளாக அமையும்: BBS

    எதிர்வரும் 28ம் திகதி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு நாளாக அமையும் என பொதுபல சேனா தெரிவித்துள்ளது. நான்காயிரம் தேரர்களை ஓர் இடத்தில் குவித்து எமது பெளத்த தலைவர்கள் எவரும் மாநாடுகளை நடாத்தவில்லை, இதை சவாலாக ஏற்று ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பெளத்த தேரர்களை ஓர் இடத்துக்கு அழைத்து சுகததாச விளையாட்டரங்கில் மேற்படி தினத்தில் இந்த மாபெரும் மாநாட்டை நடாத்த தீர்மானித்துள்ளோம் என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார் .

    நேற்று காலை கிருலப்பனை பொதுபல சேனா தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

    அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தேரர், எதிர்வரும் 28ம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் மாபெரும் மாநாடு, இலங்கை நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு மாநாடாக அமையவுள்ளது.

    நாம் இன்று எமது பிறந்த நாட்டில் அவலத்துகுரியவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், 12% வீதம் உள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்டுஇ சர்வதேச சக்திகளுக்கு துணைபோகும் ராயப்பு ஜோசப் உள்ளிட்ட, புலித் தோல் போர்த்திய கூட்டம் நாட்டை பிரிக்க வேண்டும் என கோருகின்றனர்.

    அதேபோன்று 7%  உள்ள முஸ்லிம் சமூகத்தை ( தற்போது முஸ்லிம்களின் வீதம் 9% க்கு  மேல் ) பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் எனக் கூறிக்கொண்டு இராணுவம் தவிர்ந்த மற்ற நிர்வாகத்தினர், கல்வி, சட்டம் போன்ற அனைத்து இடங்களிலும் மிகவும் ஆபத்தான முறையில் தமது ஆதிக்கங்களை செலுத்தி வருகின்றனர்.

    12% வீதம் மற்றும் 7% வீதம் உள்ள இவர்கள் எந்தநேரமும் ஒரு இறாத்தல் இறைச்சியையே கேட்டுக்கொண்டிருகின்றனர்% என்றாலும் இவர்களுக்கு யாரும் இனவாதிகள் அல்லது தீவிரவாதிகள் என கூறுவதில்லை. ஆதலால் 28ம் திகதி நாம் எமது நாட்டில் பிறந்த சமூகத்துக்காகவும்  இரத்தம், கண்ணீர், வியர்வை சிந்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிங்கள பௌத்தர்களுக்காகவும் நாமும் ஒரு இறாத்தல் இறைச்சி கேட்போம்.

    இந்த நாட்டின் சகல நிகழ்ச்சி நிரல்களும் மாற்றியமைக்கப்பட வேண்டும், பெளத்த தர்மத்துக்கு ஏற்றமுறையில் நிர்வாகம், கல்வி, மருத்துவம், உட்பட சகலதையும் கட்டியெழுப்ப நாம் பணியாற்றுவோம். அதற்கு நாம் தயார். அதற்காக நாடும் தயாராகி வருகிறது. சிங்கள பெளத்த தலைவர்களை உருவாக்கிக் கொள்ளும் சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது.

    நாம் 28ம் திகதி இது தொடர்பான கொள்கையையும், எங்கள் வேலைத்திட்டத்தையும் இந்த சமூகத்துக்காக வெளியிடுவோம். துரதிர்ஷ்டவசமாக நாம் நம்பிக்கை வைத்துள்ள எமது தலைவர்கள் இது தொடர்பில் எதனையும் கூறுவதில்லை, அவர்கள் தாங்கள் பிறந்த சமூகத்தின் அலுகோசுகளாகவே காணப்படுகிறனர். இந்த நாட்டின் அரசியல்வாதிகள் தொடர்பில் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே நாம் இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்காக நாம் தயாராகவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எதிர்வரும் 28ம் திகதி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு நாளாக அமையும்: BBS Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top