• Latest News

    September 24, 2014

    இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் சிறுபான்மை மீது 88 தாக்குதல்கள்: ஐ.நா

    unஇலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை அமைப்புக்களுக்கு எதிராக இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 88 தாக்குதல்கள் நடந்துள்ளது என்று கூறும் இலங்கை நிலவரம் தொடர்பிலான  ஐ நா வாய்மொழி அறிக்கை  இந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் யாரும் இதுவரை சட்டரீதியாக தண்டிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.
    இலங்கை நிலவரம் தொடர்பிலான வாய்மொழி அறிக்கை ஒன்றை ஐ நா மனித உரிமைகள் ஆணையர், இளவரசர் செயித் ரா’அத் செயித் அல் ஹூசேன் சமர்பித்துள்ளார். அதில் இலங்கையின் மனித உரிமை சூழல் குறித்து விரிவாக அலசப்பட்டுள்ளது.

    உண்மை நிலையை ஆய்வதற்காக இலங்கை வர விரும்பிய 9 ஐ நா சிறப்பு தூதர்களுக்கு இன்னமும் விசா அளிக்கப்படவில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் செயற்பாட்டாளர்கள் மீது அச்சு தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
    இலங்கை அரசு 16 தமிழ் அமைப்புக்களையும் 424 தனி நபர்களையும் தடை செய்வது என்று மார்ச் மாதம் மேற்கொண்ட முடிவும் இங்கே விமர்சிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை ஒத்துக் கொள்ளும் அதே நேரத்தில் இத்தகைய நடவடிக்கைகள் நடைமுறை கருதியும, பொருத்தமான அளவிலும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு சார நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அரசின் செயல்பாடுகளில் ஒரு அங்கமாக இந்த தடை நடவடிக்கைகளை ஐ நா பட்டியலிட்டுள்ளது.

    மனித உரிமை ஆணையம் கோரியது போல ஒரு சர்வேத விசாரணை நடைபெறுவதை சிக்கலாக்கும் நோக்கிலேயே ஒரு அச்சமூட்டக் கூடிய சூழல் இலங்கையில் உருவாக்கப்படுவதாகவும் ஆணையரின் அறிக்கை தெரிவிக்கிறது.

    அதே நேரம் இறுதிப் போரின் போது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை விடுவிப்பதில் அரசு பெரும் முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. ஆகஸ்ட் மாத நிலவரத்தின்படி முன்னாள் புலிப் போராளிகள் 114 பேர் மட்டுமே மறுவாழ்வு மையங்களில் இருப்பதாகவும், 84 பேர் சட்ட விசாரணைகளை எதிர்கொண்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    சிறுபான்மையினர் மீது தாக்குதல்
    இராணுவத்தின் பிரசன்னம் வடக்கில் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளதை கணக்கில் கொண்டுள்ள இந்த அறிக்கை இராணுவத் தேவைகளுக்காக பெருமளவு தனியார் நிலம் கையகப் படுத்தப்படுவதையும் சுட்டுக் காட்டியுள்ளது.

    முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை அமைப்புக்களுக்கு எதிராக இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 88 தாக்குதல்கள் நடந்துள்ளது என்று கூறும் இந்த அறிக்கை இந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் யாரும் இதுவரை சட்டரீதியாக தண்டிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

    இலங்கையின் இனப் பிரச்சனைக்கு அடிப்படை காரணமாக அமைந்த விடயங்களை எதிர்கொள்ள இலங்கை அரசு தன்னால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துறைகளை அமல்படுத்த வேண்டும் என்று ஐ நா அறிவுறுத்தியுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராக அச்சுருத்தல் விடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஐ நா கேட்டுக் கொண்டுள்ளது.

    இலங்கை மனித உரிமைகள் நிலை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் நடத்திவரும் விசாரணைக்கு இலங்கை அரசு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து இலங்கை தூதர் வரும் நாட்களில் பதிலளிப்பார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் சிறுபான்மை மீது 88 தாக்குதல்கள்: ஐ.நா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top