
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விழிப்புணர்ச்சிக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்த எமது பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் எங்கள் உள்ளங்களில் என்றும் வாழ்கின்ற போதிலும், அவர்களின் பிறந்த நாளையும், மறைந்த நாளையும் தொடர்புபடுத்தி ஆண்டு தோறும் ஒரு மாத காலமாக அன்னாரை நினைவு கூரும் வழக்கத்தை எமது கட்சி பிரகடனப்படுத்தியிருக்கிறது.
இந்தக் காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊற்றுக் கண்ணான கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது, நாடளாவிய ரீதியில் எமது மறைந்த பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் நினைவாக பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அவற்றில் அன்னாரின் பாசறையில் வளர்ந்த கட்சிப் போராளிகளும், ஆதரவாளர்களும் அனுதாபிகளும், பொதுமக்களும் மிகவும் ஆர்வமாகப் பங்கேற்று வருகின்றனர்.
உள்நாட்டிலும், உலக நாடுகளிலும் முஸ்லிம்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்ற இந்த இக்கட்டான காலகட்டத்தில், மறைந்த எமது பெருந் தலைவரை மிகவும் நன்றியறிதலோடு நினைவு கூரும் சந்தர்ப்பத்தில், திருக்குர்ஆனினதும், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களினதும் போதனைகளின் அடிப்படையில் அன்னாரால் புடம் போடப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள இந் நாட்டு முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவது காலத்தின் இன்றியமையாத தேவை என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகின்றேன்.
எமது பெருந் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் வழியில் சமூகத்தின் விமோசனத்தை நோக்கிய எமது பயணத்தைத் தொடர்வோமாக.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள விசேட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment