கிழக்கு மாகாண சபை ஆட்சி நிறுவப்படும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட உத்தரவாதங்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரகடனத்திற்கு முன்னதாக அரசாங்கம் நிறைவேற்றித் தர வேண்டும், இல்லையேல் இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் பங்காளிக் கட்சியாக இருப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை.இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் சூளுரைத்துள்ளார்.
இக்கூட்டம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது:
மறைந்த எமது பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்கான போராட்டமும் அபிவிருத்திப் புரட்சியும் சமாந்தரமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அபிவிருத்தித் திட்டங்களுக்காக அவர் சமூக உரிமை எதனையும் விட்டுக் கொடுக்கவில்லை, சுயநலமற்ற சமூகக் காவலனாக மர்ஹூம் அஷ்ரப் திகழ்ந்தார்.
அதனால்தான் தனது கொள்கை, கோட்பாடுகளில் அவர் உறுதியாக இருந்து செயற்பட்டார்.
ஆனால் இன்று அபிவிருத்திகளுக்காக சமூகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது.
சமூகத்திற்கு எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும் வாய் மூடி மௌனிகளாக இருக்க வேண்டும் என்கின்ற நிலை காணப்படுகிறது.
அதைத்தான் முஸ்லிம் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற சில அமைச்சர்களும் ,பிரதி அமைச்சர்களும் செய்து வருகின்றனர்.
ஆனால் அவ்வாறு எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோ தலைமைத்துவமோ செயற்பட முடியாது.
சமூகத்தின் பாதுகாப்பும் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற பாரிய இலக்குடன்தான் முஸ்லிம் காங்கிரஸ் பயணிக்கிறது.
அதற்காக நாம் பதவிகள், சொகுசுகள், அபிவிருத்திகள் எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறு செய்கின்ற போது சமூக ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியிலும் சில இழப்புகளையும் சேதங்களையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அந்த வகையில் தான் எமது முஸ்லிம் காங்கிரஸ் கோட்டைகள் அபிவிருத்தியில் சற்றுப் பின் தங்கிக் காணப்படுகின்றன.
எல்லா விடயங்களிலும் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம்,அதனால் எமது மக்கள் மிகவும் நொந்து போய் காணப்படுகின்றனர்.
நாமும் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டுதான் இந்த அரசியலில் நீடிக்கிறோம்.
ஆனால் எமது கட்சிப் போராளிகளும், ஆதரவாளர்களும், பொது மக்களும் இவ்வளவு காலமும் பல்வேறு தியாகங்களுடன் பொறுமை காத்து வந்ததற்கான பிரதிபலன்களை கண்டு கொள்ளும் காலம் எம்மை நெருங்கி வருகின்றது.
இப்போது எமது கட்சியினதும் சமூகத்தினதும் பலம் என்னவென்று இந்த அரசாங்கம் நன்கு புரிந்து கொள்ளும் என்பதில் சந்தேகம் கிடையாது.
இந்த வருட இறுதிப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அவ்வாறான நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறார்.
அதன்போது நமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பேரம் பேசும் சக்தி முழுமையாக பிரயோகிக்கப்பட வேண்டும்,எமது கட்சியும் சமூகமும் தொடர்ந்தும் ஏமாற முடியாது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரகடனத்திற்கு முன்னதாக கல்முனை கரையோர மாவட்டம் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் நாம் பிடிவாதமாக இருப்போம்.
அதில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமளிக்க முடியாது.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது ஏழு ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட நமது முஸ்லிம் காங்கிரஸ், இந்த அரசாங்கம் கிழக்கில் ஆட்சியமைப்பதற்காக சில நிபந்தனைகளுடன் உத்தரவாதங்களைப் பெற்றுக் கொண்டே ஆதரவு வழங்கியது.
ஆனால் இந்த அரசாங்கம் அவற்றை நிறைவேற்றாமல் இழுத்தடித்தே வருகின்றது. அவற்றுள் கல்முனை கரையோர மாவட்டமும் ஒரு முக்கிய அம்சமாகும்.
அத்துடன் முஸ்லிம் பகுதிகளின் பிரதேச அபிவிருத்தி அதிகாரம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் என்று இன்னும் பல விடயங்கள் உள்ளடங்கியிருந்தன.
இவற்றை அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் பிரகடனத்திற்கு முன்னதாக நிறைவேற்றித் தராவிட்டால் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸ் பங்காளிக் கட்சியாக இருப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாது.
இந்த விடயத்தில் கட்சித் தலைமைத்துவத்துடன் ,அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் ,உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களும் ,உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்.
இதன்போது கட்சியுடன் முரண்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்துவதற்கும் தயங்க மாட்டோம்.
சமூக நலன் கருதி தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு நாம் எவருக்கும் அஞ்சத் தேவையில்லை.
இவ்வாறான விடயங்களில் நமது பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் காட்டித் தந்த வழியில் பயணிப்பதற்கு எவரும் பின் நிற்கக் கூடாது.
எம்மிடையே காணப்படும் சுய நலனும், பதவி மோகமுமே எமது கட்சியினதும் சமூகத்தினதும் பேரம் பேசும் சக்தியை வலுவிழக்கச் செய்து செல்லா காசாக மாறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
இந்த அவலம் தொடர்ந்தும் நீடிப்பதற்கு இனியும் அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் கட்சியின் அடிமட்டப் போராளிகள் களமிறங்கி முன்வர வேண்டும்.
நாம் தெரிவு செய்த நமது பிரதிநிதிகளை நாம் கடிவாளமிட்டு கட்சியின் தீர்க்கமான தருணங்களில் ஒன்றிணைத்து போராட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இன்று மத்திய அரசாங்கத்திலும் கிழக்கு மாகாண சபையிலும் நமது கட்சிப் பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பதவி வகித்தும் கூட சமூகத்திற்கு எவ்வித பிரயோசனமும் இல்லை என்றால் அப்பதவிகளை தொடர்ந்தும் நாம் தக்க வைத்துக் கொண்டு, இந்த அரசாங்கத்தின் அடிமைகளாக நீடிக்க வேண்டுமா என்று சிந்திக்க வேண்டிய தருணம் நெருங்கி விட்டது.
இவற்றை அனுபவிப்பதற்குத்தான் முஸ்லிம் காங்கிரஸ் சமூக உரிமைகள் விடயத்தில் விட்டுக் கொடுத்துச் செல்கிறது,சமூகப் போராட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சோர்ந்து போய் விட்டது என்றெல்லாம் இங்கு கூறப்பட்டது.
ஆனால் உண்மை அதுவல்ல,முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமைத்துவமும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் மிகவும் கரிசனையுடன் செயலாற்றி வருகின்றன என்பதை இங்கு நான் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.
அளுத்கம சம்பவத்தைத் தொடர்ந்து அரபு, முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை தலைமைத்துவம் உடனடியாக சந்தித்து தெளிவுபடுத்தியதுடன் சவூதி அரேபியா சென்று முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களை சந்தித்து நிலைமைகளை விளக்கி இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியிருந்தது.
இதன்போது அமைச்சுப் பதவியை பணயமாக வைத்து,உயிரையும் துச்சமென கருதி நமது தலைமைத்துவம் செயற்பட்டதை நாங்கள் கண்கூடாகக் கண்டோம்.
அதனைத் தொடர்ந்தே முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும் , அச்சுறுத்தல்களும் குறைந்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
இதனால் முஸ்லிம் காங்கிரசையும், தலைமைத்துவத்தையும் வஞ்சிக்கும் வகையில் அரசாங்க உயர்மட்டம் செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நாம் தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிக்க வேண்டிய தேவை என்ன என்பதை அனைவரும் ஒருமித்து சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டது.
ஆகையினால் நமது கட்சிக்கு பேரம் பேசும் காலம் கனிந்து வருகின்ற இந்த சந்தர்ப்பத்திலாவது கல்முனை கரையோர மாவட்டம் உள்ளிட்ட எமது கோரிக்கைகளை வென்றெடுக்கா விட்டால் இனியொரு போதும் அவை நிறைவேறப் போவதில்லை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
கட்சியின் உயர் மட்டம் தொடக்கம் அடிமட்டப் போராளிகள் வரை இவ்விடயத்தை தீவிரமாக சிந்திக்கவும் செயற்படவும் முன்வருமாறு இந்த முக்கிய தருணத்தில் அழைப்பு விடுக்கின்றேன் என அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment