• Latest News

    September 07, 2014

    ஐ.நாவின் புதிய ஆணையாளருடன் பேசத் தயார்! இலங்கைக்கு வருமாறு மகிந்த அழைப்பு

    ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ
    அபேயிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

    இலங்கைக்கு இன்று விஜயம் செய்த ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் பின்னர், வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
    இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பொறிமுறைகளுடன், குறிப்பாக மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உள்ளதையும் புதிய மனித உரிமை ஆணையாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அது தயாராகயுள்ளதையும், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அவரிற்கு அழைப்பு விடுத்துள்ளதையும் ஜப்பானிய பிரதமர் பாராட்டினார்.

    பலவந்தமாக காணமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழுவை இந்த மாதம் இலங்கை அதிகாரிகள் ஜெனீவாவில் சந்திக்கவுள்ளதையும் பொருத்தமான தருணத்தில் இலங்கைக்கு அழைக்கவுள்ளதையும் அவர் வரவேற்றார்.

    ஜனாதிபதி மகிந்த ராஜபகச தனது அரசாங்கம் சர்வதேச சமூகத்துடனும் ஐ.நாவுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதை வலியுறுத்தினார். நல்லிணக்கத்தை நோக்கி அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டிய ஜப்பான் தலைவர் சம்பந்தப்பட்ட சகலதரப்பினர் மத்தியிலும் பேச்சுக்கள் இடம்பெற வேண்டியது நல்லிணக்கத்திற்கு அவசியமானது என்பதை வலியுறுத்தினார்.

    வடபகுதியில் தேர்தல்களை நடத்தியமை, சாட்சியங்களை பாதுகாப்பதற்கான சட்டமூலம், காணமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் ஆணை விஸ்தரிக்கப்பட்டது போன்றவற்றையும் ஜப்பானிய பிரதமர் வரவேற்றார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறும் ஜப்பானின் முயற்சிக்கான இலங்கையின் ஆதரவிற்கு அவர் நன்றி தெரிவித்தார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.-TC
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.நாவின் புதிய ஆணையாளருடன் பேசத் தயார்! இலங்கைக்கு வருமாறு மகிந்த அழைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top