• Latest News

    September 21, 2014

    புதுத் திட்டங்களுடன் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள ஐ.தே. க. திட்டம்

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது புது வியூகங்களுடன் களமிறங்க ஐ.தே.க. திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

    இதன் பிரகாரம் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்படவுள்ள சஜித் பிரேமதாசவின் பொறுப்பில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஒப்படைக்கப்படவுள்ளது.

    முற்றிலும் இளைஞர்களைக் கொண்ட பிரச்சாரக் குழுவொன்றை கொண்டு தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.

    ஐ.தே.க.வின் மீது சர்வ மதத்தவர்களும் நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் சகல சமயங்களினதும் முக்கிய தலைவர்களை கவர்ந்திழுக்கும் செயற்திட்டம் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    இதன் மூலம் அனைத்து இன மக்களினதும் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சிகளை அந்தந்த மதத்தலைவர்களின் ஊடாகவே முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.

    அரசாங்க தரப்பில் இருந்து வரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் நடவடிக்கைகளில் மங்கள சமரவீர ஈடுபடுத்தப்படவுள்ளார்.

    நாளாந்தம் செய்தியாளர்களை சந்தித்து, கட்சியின் ஊடக நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவருடைய பணியாகும்.

    இன்னும் சில முக்கிய தலைவர்கள் ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்களை ஐ.தே.க.வுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

    இவை எல்லாவற்றுக்கும் வாக்குச் சாவடிகள் தோறும் ஆளுங்கட்சியினரின் வன்முறைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளைஞர் படையொன்றை ஏற்படுத்தவும் ஐ.தே.க. திட்டமிட்டுள்ளது.

    இதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ளது என்று ஞாயிறு லக்பிம பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பெருந்தோட்ட தமிழர்களின் வாக்குகளை கவரமுடியாமல் போனது: ஹரின்

    ஊவா மாகாணசபைத் தேர்தலின்போது தமது இலக்கை எட்டிவிட்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

    ஐக்கிய தேசியக்கட்சியின் வெற்றிப்பாதையை இந்த தேர்தலின்மூலம் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது.

    அத்துடன் பதுளையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 50வீத வாக்குகளை குறைக்கமுடிந்திருக்கிறது என்றும் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

    எனினும் தமது கட்சியினால் பெருந்தோட்ட தமிழ் தொழிலாளர்களின் வாக்குகளை கவரமுடியாமல் போனதாக ஹரின் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதன்காரணமாகவே தமது கட்சிக்கு மாவட்டத்தில் முழுமை பெரும்பான்மையை பெறமுடியாமல் போனதாக ஹரின் குறிப்பிட்டுள்ளார்.

    ஐ.தே.கட்சியின் வாக்கு வீதம் உயர்ந்தமை மகிழ்ச்சியானது - ஹரின் பெர்ணான்டோ

    25 வீதமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வீததத்தை 45 வீதம் வரை அதிகரிக்க முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

    தேர்தலில் போட்டியிட வரும்போது கட்சியின் தலைவர்கள் ஒன்றாக ஒன்றிணைய வேண்டும் என நான் கேட்டுக்கொண்டேன் அதற்கு அமைய அவர்கள் ஒன்றிணைந்தனர்.

    அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வீதத்தை 40 ஆக உயர்த்த போவதாக நான் கூறியிருந்தேன். அதனை 45 வீதமாக அதிகரிக்க முடிந்தது.

    இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் எழுச்சி வெளிப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தொகுதிகளை எம்மால் தோற்கடிக்க முடிந்தது. சில தொகுதிகளில் சில நூறு வாக்குகளிலேயே தோல்வியடைந்தோம்.

    நாம் எதிர்பார்த்த வாக்குகளில் 99 வீத வாக்குகள் எமக்கு கிடைத்தன. மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சரவையே எதிர்பார்த்தனர். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பது மட்டுமே எனக்கு இருக்கும் ஒரே கவலை. எனினும் வெற்றியை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    நாங்கள் நேர்மையான அரசியலில் ஈடுபட்டோம் அதுதான் சிறந்த பெறுபேறுகள் கிடைத்தன. தற்போது தேர்தல் முடிந்து விட்டது. அனைவரும் அமைதியாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

    ஐ.தே.க துணைத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி?

    ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி இடம்பெறலாம் என்று ஸ்ரீகொத்தா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது தொடர்பாக ஞாயிறு லக்பிம பத்திரிகையின் அரசியல் களம் பத்தியிலும் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

    ஐக்கிய தேசியக் கட்சியின் 68வது ஆண்டு நிறைவுவிழா அண்மையில் பதுளை- பஸ்ஸரையில் நடைபெற்றது.

    இந்த மாநாட்டின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்று ரணில் பிரேரணையொன்றை சமர்ப்பித்திருந்தார்.

    மேலும் அதுவரை காலமும் ஊவா மாகாண பிரச்சார நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்த சஜித்தும் அந்த மாநாட்டின் மூலமாக பிரச்சார நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்.

    இதற்கிடையே சஜித் பிரேமதாச மேடைக்கு வருவதைக் கண்டதும் ரவி கருணாநாயக்க மெதுவாக நழுவிச் சென்றுள்ளார்.

    மொபைல் போனைக் காதில் வைத்தபடி அவர் நழுவிச் செல்வதைப் பார்த்த இன்னொரு முக்கியஸ்தர் விஜேதாச ராஜபக்ஷவும் அவருடன் சேர்ந்து மேடையிலிருந்து நழுவிச் சென்றுள்ளார். எனினும் விஜேதாச மீண்டும் மேடைக்கு வந்த போதும் ரவி கருணாநாயக்க திரும்பி வரவில்லை.

    இதற்கிடையே இம்மாதம் 23ம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சஜித்துக்கு சவால் விடும் வகையில் ரவியும் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் இறங்கவுள்ளார்.

    அதற்காக அவர் தற்போது செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் ஊவாவில் ஐ.தே.க. பெற்றுள்ள பாரிய முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு ஹரின் பெர்னாண்டோவை துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புதுத் திட்டங்களுடன் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள ஐ.தே. க. திட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top