
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விஸ்தரிப்பு போன்ற நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகள் தொடர்பான விடயத்தை செயலிழக்கச் செய்யும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே இலங்கையின் செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய மின்னஞ்சல் செவ்வியில் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம், தேசிய நல்லிணக்கத்துக்காக காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவை விஸ்தரித்துள்ளமை உட்பட தீர்க்கமான விடயங்களில் முனைப்பு காட்டுவதை தாம் அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த முனைப்புகள் மூலம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை செயலிழக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்காக சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நம்பிக்கையை கட்டியெழுப்ப ஜப்பான் உதவிகளை தொடரும் என்றும் அபே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சமாதானத்துக்காக ஜப்பான் நீண்டகாலமாக செயற்பட்டு வருகிறது.
ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி இதற்காக பாரிய பணிகளை மேற்கொண்டுள்ளார் என்றும் அபே சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் அபேயும் அவரது பாரியார் அக்கி அபேயும் இன்று பகல் 12.45 அளவில் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்கும் அவர் நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்வதுடன் நாளை முற்பகல் 9 மணிக்கு தமது பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.
1957 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய பிரதமராக இன்று விஜயம் மேற்கொள்ளும் அபேயின் பாட்டனார் நௌசுகி கேசி கருதப்படுகிறார்.
0 comments:
Post a Comment