ஊவா மாகாண சபைத் தேர்தல் வெற்றி குறித்து
ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசுக்கு எதிராக கொண்டு செல்லப்பட்ட
தீங்கிழைக்கும் மற்றும் வெறுக்கத்தக்க சோதனைகளை ஊவா மக்கள் மோசமாக
மறுத்துள்ளதாக இந்த வெற்றி உறுதி செய்கிறது. நாம் மற்றையவற்றை விட மக்களின்
விருப்பங்களுக்கே அதிகம் முக்கியத்துவம் அளிக்கிறோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக களமிறங்கியும் பாரிய பின்னடைவை அரசாங்கம் கண்டுள்ளமையானது :UNP
ஊவா மாகாண சபைத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ நேரடியாக களமிறங்கியும் பாரிய பின்னடைவை அரசாங்கம் கண்டுள்ளமையானது
ஜனாதிபதிக்கு கிடைத்த தோல்வி மட்டுமல்ல அரசாங்கத்தின் அஸ்தமனம் ஆரம்பித்து
விட்டமைக்கான சமிக்ஞையாகும் எனத் தெரிவித்த ஐ.தே. கட்சியின் பொது
செயலாளரும் எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கம் மார்தட்டியது போல் அடுத்த வருட
ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்திக்காட்ட வேண்டும் என்றும் அவர் சவால்
விடுத்தார். பிட்டகோட்டையிலுள்ள ஐ.தே.கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில்
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்
போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஊவா மாகாண சபைத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
வேட்பாளர்களை விட ஜனாதிபதியே அதிகமான பிரசாரங்களில் ஈடுபட்டார். எமது
வேட்பாளர் ஹரீன் பெர்னாண்டோவுடன் பதுளையில் ஜனாதிபதி நேருக்கு நேர் நின்று
பிரசாரங்களில் ஈடுபட்டார்.
புதிய திட்டங்கள், கட்டிடங்கள்,விழாக்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஜனாதிபதியின் தலைமையில் நடத்தப்பட்டன.
மொனராகலை மாவட்டத்தில் வரட்சி நிவாரணம்
என்ற பெயரில் மக்களுக்கு தேர்தல் காலத்தில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டன. எமது
ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். தாக்குதல்களுக்கு உள்ளாகினர். அது
மட்டுமல்லாது ஊவா மாகாணத்தின் பிரபல்யமான அமைச்சர்களான நிமால் சிறிபால டி
சில்வாஇ டிலான் பெரேரா போன்றோர் கடுமையான பிரசாரங்களை மேற்கொண்டனர்.
ஆனால் அவர்களால் அவர்களது தொகுதியை வெற்றி
பெறச்செய்ய முடியவில்லை. இதிலிருந்து என்ன தெரிகின்றது? தமக்கு வாக்களித்த
மக்களுக்கு எதனையும் செய்யவில்லையென்பதே தெளிவாகின்றது.
பொதுபல
சேனா போன்ற கடும்போக்குவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளினால் சிறுபான்மை
மக்கள் அடைந்துள்ள அதிருப்தி:அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
அரசாங்கம் கொள்கைகளில் மாற்றம் செய்ய
வேண்டியதன் அவசியத்தை ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளதாக
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவு பிரச்சினை,
வறட்சி போன்ற காரணிகளை விடவும் முற்போக்குச் சிந்தனைக்கு மதிப்பளித்து
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையில்
வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆட்சி முறைமை மற்றும் பொருளாதாரக்
கொள்கைகளில் அரசாங்கம் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.பொதுபல சேனா போன்ற
கடும்போக்குவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளினால் சிறுபான்மை மக்கள்
அடைந்துள்ள அதிருப்தியின் நன்மை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ளது.
நகர அபிவிருத்தியினால் வறிய மக்கள் தமது
இருப்பிடங்களை இழத்தல், வாழ்வாதாரத்தை இழத்தல் போன்ற காரணிகளும் ஐக்கிய
தேசியக் கட்சிக்கு சாதக நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பள உயர்வு வழங்கப்படாமை, வாழ்க்கைச்
செலவு அதிகரிப்பு போன்ற காரணிகளினால் ஆளும் கட்சிக்கு அரச ஊழியர்கள்
வழங்கிய ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.தேர்தல்
முடிவுகள் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை மாற்றுவதற்க்கு தாங்கள் தயார் என்பதை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: JVP
அரசாங்கத்தை மாற்றுவதற்க்கு தாங்கள் தயார்
என்பதை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என ஜேவிபி தலைவரும் பாராளுமன்ற
உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்க குறிப்பிட்டுள்ளார். ஊவா தேர்தலில்
ஆளும் ஜக்கிய மக்கள்சுதந்திர கூட்டமைப்பு சிறிய வித்தியாசத்திலேயே
தேர்தலில் வெற்றியை பெற்றுள்ளது. பதுளையில் அளிக்கப்பட்ட மொத்தவாக்குகளில்
எதிர்கட்சிகளுக்கு அதிகமானவை கிடைத்துள்ளன, அரசாங்கத்தின் வீழ்ச்சியின்
ஆரம்பத்தை இவை காண்பிக்கின்றன, அரசாங்கத்தை மாற்றுவதற்க்கு தாங்கள் தயார்
என்பதை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசாங்கத்தின் வாக்கு 72 வீதத்திலிருந்து
51 வீதமாக குறைவடைந்துள்ளது- மொனராகலவில் 2009 இல் அரசாங்கம் 82
வீதவாக்குகளை பெற்றது தற்போது இது 58 வீதமாக குறைவடைந்துள்ளது. அரச வளங்களை
அரசாங்கம் முழுமையாக பயன்படுத்திய போதிலும் இது நிகழ்ந்துள்ளது.
கடந்த முறை எங்களுக்கு ஒரு ஆசனம் மாத்திரம்
கிடைத்தது இம்முறை மேலதிகமாக இரண்டை பெற்றுள்ளோம், மொனராகலையில்
எங்களுக்கு பிரதிநிதித்துவமே இருக்கவில்லை. இம்முறை ஒன்றை பெற்றுள்ளோம்.
எனினும் தீர்க்கரகமான சக்தியாக திகழ்வதற்கான ஆசனங்கள் எங்களுக்கு
கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வராவிட்டால் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது: தயான் ஜயதிலக
அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் மாற்றம்
கொண்டு வராவிட்டால் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது என முன்னாள்
தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்
தொடர்பில் எழுதிய பத்தியொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம்
தேர்தலில் தோல்வியைத் தழுவவில்லை என்பது உண்மை. எனினும், 2009ம் ஆண்டு
தேர்தல் முடிவுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அரசாங்கம் பாரிய பின்னடைவை
எதிர்நோக்கியுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை.
தார்மீக ரீதியாக அரசாங்கம் இந்த தோல்வியை
ஏற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச ரீதியாக நாடு அடைந்த தோல்வி, இனவாத
கொள்கைகள் மற்றும் குடும்ப அரசாட்சி போன்ற காரணிகளினால் மக்கள் அதிருப்தி
அடைந்துள்ளனர். எனவே அரசாங்கம் நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வராமல்
தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுக்க முடியாது. அபிவிருத்தி மற்றும் போர்
வெற்றி போன்ற காரணிகளின் அடிப்படையில் மட்டுமே தேர்தல்களை வெற்றிகொள்ள
முடியாது.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஆளும்
கட்சிக்குள் சில முரண்பாட்டு நிலைமைகள் வெடிக்கக் கூடும். ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவாகவோ தனித் தனியாகவோ கட்சி
தாவக்கூடும். குடும்ப அரசியல் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்துவது சாதகமான
நிலைமையை ஏற்படுத்திவிடாது. ஜனாதிபதி தேர்தலின் மூலம் தற்போதைய
பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை நடாத்தினால்
அதன் மூலம் ஓரளவிற்கு நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வர
முடியும் என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment