• Latest News

    October 21, 2014

    இலங்கைக்கு உலக வங்கி 700 மில்.டொலர் கடனுதவி!

    பூகோள ரீதியான பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சர்வதேச நிதி நிறுவனங்களிடையே பாரிய திருப்தியினை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி சரத்அமுனுகம தெரிவித்தார்.

    வொஷிங்டனில் கடந்த வாரம் நடைபெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்களில் கலந்துகொண்ட பின்னர் நாடு திரும்பியிருக்கும் சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, இலங்கை பொருளாதார ரீதியாக மிக குறுகிய காலத்தில் கண்டிருக்கும் துரித வளர்ச்சி குறித்து இக்கூட்டங்களின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.

    “கடந்த வருடம் முதல் காலாண்டில் காணப்பட்ட 6.4 சதவீத பொருளாதார வளர்ச்சி இவ்வருட முதல் காலாண்டில் 7.7 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளமையால் குறுகிய காலத்திற்குள் இலங்கை, சராசரி பொருளாதார வளர்ச்சியாக 08 சதவீத்தை அண்மித்துவிடுமெனவும் அமைச்சர் மேற்படி கூட்டங்களில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஏற்றுக்கொண்டுள்ள உலக வங்கி, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடன் அடிப்படையில் வழங்கியுள்ளது. இக்கூட்டத் தொடர்களில் அரசாங்கத்தின் பிரதிநிதியென்ற வகையில் கலந்துகொண்ட அமைச்சர் சரத் அமுனுகம, இலங்கைக்கான கடன் கொடுப்பனவுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் இந்நிதியானது கல்வி, சுகாதாரம், நகர அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் வீதி அபிவிருத்தி ஆகிய செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

    உலக வங்கியிடமிருந்து அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக எமக்கு கிடைத்துள்ள கடனானது பிறநாடுகளிலிருந்து கிடைக்கும் கடனிலும் பார்க்க மிகக் குறைந்த வட்டி வீதத்தைக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் அமுனுகம தெரிவித்தார். இதேவேளை, இலங்கையின் துரித வளர்ச்சியானது, சர்வதேச பொருளாதாரத்தை விடவும் உள்நாட்டு பொருளாதாரச் செயற்பாடுகள் மூலமே அதிகம் வலுவடைந்திருப்பதாகவும் அமைச்சர் மேற்படி கூட்டத் தொடர்களில் விளக்கியிருந்தார்.

    சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டத் தொடர்களில், பூகோள ரீதியான பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் புதிய போக்குகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை சர்வதேச நம்பிக்கை நிதியம் மற்றும் உலக வங்கியின் உறுப்பினர்கள் திருப்திகரமான முறையில் ஏற்றுக் கொண்டனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கைக்கு உலக வங்கி 700 மில்.டொலர் கடனுதவி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top