ஜுனைட் நளீமி:
ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்ற தேர்தலா அடுத்தது என்ன என்ற
வாதப்பிரதி வாதம் அரசியல் களத்தில் எழுந்துள்ள நிலையில்
ஜனாதிபதித்தேர்தளுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று இடம்பெறலாம் என்ற யூகத்தினை அடிப்படையாகக் கொண்டு
சிறுபான்மைக்கட்சிகள் தேர்தல் முஸ்தீபுகலை மேற்கொண்டு வருவதனை அவதானிக்க
முடிகின்றது. இந்தவகையில ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர்
அம்பாரையிலா அல்லது மட்டக்களப்பிலா தேர்தலில் போட்டிடுவார் என்ற அலசல்களும்
அறிக்கைகளும் ஊடகங்களில் அடிக்கடி இடம்பிடித்துக்கொண்டிருக்கின்றது.
இதற்கான சாதக பாதகங்களை இங்கு நோக்குவது சிறந்தது.
அண்மைக்காலமாக சிறுபான்மை முஸ்லிம்
கட்சிகள் மீதான முஸ்லிம்களின் மனப்பதிவு சரியாக அமையவில்லை என்பதனை நடந்து
முடிந்த ஊவா மாகாண தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டி இருக்கின்றது.
நாட்டில் நிலவும் இனவாத செயற்பாடுகளுக்கு முஸ்லிம் கட்சிகள் என்று
கூறிக்கொண்டு அரசுக்கு முட்டுக்கொடுக்கும் செயற்பாட்டினை முஸ்லிம்கள்
அங்கிகரிக்கவில்லை என்பதனை தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய
நிலையில் வடகிழக்குக்கு வெளியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர்
போட்டியிடுகின்ற போது வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புகள் முயற்கொம்பாகவே
காணப்படுகின்றது. அவ்வாறு கட்சி தலைமை தோல்வியை தழுவுமேயானால் அது
கட்சியின் எதிர்காலத்தையும் தலைமைத்துவத்தை தக்கவைப்பதிலும் பாதிப்பினை
ஏற்படுத்தும் என்பது தெளிவாக தலைமையினால் புரிந்து
கொள்ளப்பட்டிருக்கின்றது. அதே நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்
தலைமைப்பொறுப்பு கிழக்குக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள்
வலுப்பெறுகின்ற, இவ்வேளையில் தமது அரசியல் தளத்தை கிழக்கில் நிறுவிக்கொள்ள
வேண்டிய கால சூழ்நிலைக்கும் தலைமை தள்ளப்பட்டிருக்கின்றது. அத்தோடு
அண்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வங்கிகளில் ஏற்பட்டுள்ள
வீழ்ச்சியும் புதிய கட்சிகளின் வளர்ச்சியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரசின் இருப்புக்கு சவாலாக அமைந்துள்ளது. எனவே கிழக்கில்
போட்டியிடுவது என்ற முடிவு அரசியல் சாணக்கியம் நிறைந்ததாகவே அமைகின்றது.
தளமாக அமையப்போகும் மட்டக்களப்பு மாவட்டம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர்
கிழக்கில் காணப்படும் திருகோண மலை, அம்பாறை மாவட்டங்களை விட
மட்டக்களப்பில் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது.
குறிப்பாக கடந்த கால மாகாண சபைத்தேர்தல்களில் திருகோணமலை மாவட்டத்தில்
கட்சியை காக்கவென போட்டியிட்டு வாக்குகளை கைப்பற்றியபோதும் ஒரு மாகாண
அமைச்சுப்பதவியினையாவது மாவட்டத்திற்கு பெற்றுக்கொடுக்கவில்லை என்ற
அங்கலாய்ப்பு காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதனை கட்சி பிரதிநிதிகள் விரும்புவதாகவும் இல்லை. அத்தோடு அவ்வாறு
போட்டியிடுவதன் மூலம் கட்சி உயர்பீடத்தில் தமக்கெதிரான அணியினரின்
எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளவும் விரும்பவில்லை. ஏற்கனவே கட்சித் தலைமை
கிழக்கிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற தவிசாளர் உள்ளிட்ட அணியினருக்கு
இத்தகைய முடிவு சாதகமாக அமைந்துவிடும். இந்த கள நிலையில் மட்டக்களப்பு
மாவட்டத்தினை நோக்கியே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் காய்
நகர்த்தல் அமைந்துவிட வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது. இவற்றிற்கு பல
சாதக நிலை தற்போது காணப்படுவதனை கவதானிக்க முடியும்.
களையெடுப்பு அரசியல்.
தற்போது கட்சி எதிர்நோக்கியுள்ள சவால்களில்
ஒன்று கட்சிக்குள் காணப்படும் மாற்றுக்கருத்துள்ள அணியினரை களையெடுத்தல்
என்ற அம்சமாகும். குறிப்பாக தவிசாளருக்கும் தலைமைக்கும் இடையில் உள்ள
அண்மைய விரிசல் கட்சி மட்டத்தில் பெரும் தலையிடியாக அமைந்துள்ளது.
குறிப்பாக கட்சியின் தவிசாளர் கட்சிக்கான கருத்துச்சுதந்திரம், ஜனநாயக
பண்பு என சொல்லிக்கொண்ட போதும் அரசுக்குச் சார்பான அண்மைக்கால
செயற்பாடுகளும் அறிக்கைகளும் கடும் விசனத்தை தலைமை மீது ஏற்படுத்தியுள்ளது.
சில போது தவிசாளர் ஆளும் தரப்பு அரசியலில் களமிறங்க கூடும் என்ற
யூகங்களும், அவ்வாறு நிகழுமாயின் பலமான எதிரணி ஒன்றினை எதிர்கொள்ள அரசியல்
சாணக்கியமும், முதிர்ச்சியுமுள்ள வேட்பாளரை கட்சியில் காணமுடியாத தற்போதைய
நிலையில் தலைவர் களமிரங்குவதனைத்தவிர வேறு மாற்றீடுகள் ஒன்றும்
காணப்படவில்லை. அத்தோடு கட்சியை பாதுகாப்போம் என்ற கோசத்தில் அனுதாப
அலையினை திரட்டுவதற்கான வாய்ப்பாகவும் அமைந்துவிடும். இதேவேளை தவிசாளர்
இறுதி நேரத்தில் தமது முடிவுகளை மாற்றிக்கொண்டு தலைவருக்கு வழிவிட்டு
எதிர்வரும் காலங்களில் தான் அடைய மீதமாக உள்ள முதலமைச்சர் என்ற பதவியினை
குறிவைத்து உடன்பாட்டு அரசியல் செய்யவும் வாய்ப்புக்கள் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அலிசாஹிர்
மௌலானா, அமைச்சர் ஹிஸ்புல்லா, அமைச்சர் முரளீதரன், சந்திரகாந்தன்
(பிள்ளையான்) என்ற பலம் மிக்க கூட்டணியுடன் தமது வாக்கு வங்கியினை
நிலைநிறுத்த வேண்டிய தேவை கட்சிக்கு காணப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில்
கட்சியில் மீண்டும் நுழைந்து கொள்ள கிடப்பாய்க் கிடக்கும் முன்னாள்
அமைச்சரும் மாகாண சபை உருப்பினருமானவரை உள்வாங்கி களமிரங்குவதற்கும்
வாய்ப்புகள் காணப்படுகின்றது. முதலில் தலைவருக்கு பின்னர் மற்றவருக்கு என்ற
விருப்பு வாக்கு கோஷம் மாவட்டத்தில் ஏறாவூர், கல்குடா, காத்தான்குடி என
பரவலாக தலைவருக்கான வாக்கு வங்கியினை அதிகரிக்கும். இதனால் கல்குடாவில்
போட்டியிட நினைக்கும் முன்னாள் அமைச்சருக்கு கல்குடாவின் குறிப்பிட்ட வீத
வாக்குகள் மாத்திரமே கிடைக்கப்பெற்று இரண்டாம் நிலைக்கு தள்ளிவிடும். இதன்
மூலம் எப்போதும் அழியா வடுவை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மீது ஏற்படுத்தி
தேசிய, சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தியவரை உள்ளிழுத்து
கழுத்தறுப்பு செய்வதற்கு வாய்ப்பாக அமையுமென்ற கணிப்பும் காணப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க தலைமை காத்தான்குடியை
மையப்படுத்தியதாக தமது பிரச்சாரங்களை முன்னெடுக்கவும் வாய்ப்புக்கள்
உள்ளது. ஏனெனில் உள்ளூர் கட்சியாக பரிணமித்து இன்று தேசிய அரசியலில் மூக்கு
நுழைத்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பின் அரசியல் கூட்டணியின்
வளர்ச்சியினையும் தடுத்து நிறுத்துவதுடன் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டி
தலைமை களமிறங்க வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது. இத்தகைய கல
நிலவரங்களுக்கப்பால் புதிதாக கல்குடாவில் களமிறங்கவுள்ள சில புதுமுகங்களும்
பழைய அரசியல் சாக்கடைகளைத்தாண்டி வெற்றிக்கோட்டினை தாண்டும்
வாய்ப்புக்களும் அதிகமாக காணப்படுகின்றது.
0 comments:
Post a Comment