• Latest News

    October 11, 2014

    சிங்களக் கடும்போக்குவாதம் மாறுவதற்கோ மறைவதற்கோஎந்த வாய்ப்பும் இல்லை: அமைச்சர் பஷீர் சேகுதாவூத்

    இலங்கையில் ஆட்சிகள் மாறலாம், ஆட்சியாளர்கள் மாறலாம் ஆனால், சிங்களக் கடும்போக்குவாதம் மாறுவதற்கோ மறைவதற்கோ எதிர்காலத்தில் எந்த வாய்ப்பும் இல்லை என்பதை பகிரங்கமாகக் கூறுகிறேன்’ என உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர்  சேகுதாவூத் தெரிவித்தார்.

    ஏறாவூரில் புதன்கிழமை(8) இடம்பெற்ற சேவை நலன் பாராட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,’எந்த சட்டப் பிரச்சினைகள் இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் வந்தே தீரும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற எந்த அரசியல் தலைவர்களும், நாட்டில் தற்போது நிலவுகின்ற சிங்கள கடும்போக்கு வாதத்தை எதிர்த்து எந்த கருத்தையும் கூறப்போவதில்லை.

    ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால், பொது பல சேனா, அதன் தீவிர செயற்பாட்டாளர் ஞானசார தேரர்,  ராவண பலய, ஜாதிகஹெல உறுமய என்பவற்றை தடைசெய்வேன் என்று  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவினால் பகிரங்கமாகக் கூற முடியுமா?

    தீவிர கடும்போக்கு வாதத் தலைவர்களைக் கைதுசெய்து உள்ளே அடைப்பேன் என்று ஒரு வார்த்தைதானும் பகிரங்கமாகக் கூற முடியுமா?, இந்த உத்தரவாதத்தை இன்று நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கூட கொடுக்க முடியாது.

    எனவே, எந்த அரசியல் உபாயத்தை நாங்கள் கைக்கொள்ள வேண்டும் என்று முஸ்லிம்கள் அவரசமாகவும் அவசியமாகவும் நின்று நிதானித்து தீர்மானம் எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். சிறுபான்மை அரசியலில் பெரிய புராணக் கதைகள் எல்லாம் உலவுவது வழமை. இந்தப் புராணக் கதைகளுக்குப் பின்னால் சென்று அவற்றைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இந்த சமூகத்தைப் பிழையாக வழி நடத்தி நட்டாற்றில் கைவிட்டுவிடக் கூடாது என்பதிலே நான் அக்கறையோடு இருக்கின்றேன்.

    என் வழி நடத்தலின் உள்ளார்ந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் என்னைப் பற்றி விமர்சிக்கலாம். ஆனால் இந்த விமர்சனங்களுக்கு நான் பதிலளிப்பதை விட இந்த சமூகத்தைத் தவறாக வழி நடத்தி விடாமல் இருப்பதில் நான் மிகக் கவனமாக இருக்கின்றேன். இது சிறுபான்மையினருக்கு ஒரு இக்கட்டான காலக்கட்டம். இதிலே நாம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்.  பழி வாங்குவதற்கான அரசியலையும் நாம் செய்ய முடியாது.

    உணர்ச்சிவசப்பட்டு கொதித்தெழுந்து முன்னுக்கு ஓடி பின்னர் உணர்ச்சி குறைந்து சோர்வடைந்து தனித்துப் போன பிறகு பின்னுக்கு வந்து கூனிக் குறுகி நிற்பதெல்லாம் அழகல்ல. நாம் உணர்ச்சிவசப்படத் தேவையுமில்லை. ஆத்திர மேலீட்டால் அவதிப்பட்டு முன்னுக்கு ஓட வேண்டிய அவசியம் இல்லை. நின்று நிதானித்து உற்றுக் கவனித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தை நெறிப்படுத்த வேண்டும்.

    எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நமது சமூகம் உறுதியான யதார்த்தமான நிலைப்பாட்டை எடுக்கத் தவறும் பட்சத்தில் அதன் பாதிப்புக்கள் 2022 ஆம் ஆண்டு வரை நீடிக்கும். அதுபற்றி முஸ்லிம் சமூகத்திலுள்ள எல்லோரும் ஒன்றிணைந்து ஏகோபித்த முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். ஆனால், அப்படி முடிவெடுப்பதற்கும் உள்ள கால அவகாசம் மிகக் குறுகியது. ஆகக் கூடியது மூன்று வாரங்கள் தான் இன்னமும் எஞ்சியிருக்கின்றன.

    தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் முடிவெடுப்பதில் அர்த்தமேயில்லை. முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டவர், குஜராத்தின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்று பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டப்பட்ட மோடிக்கு ஆதரவாக ஹபாயா அணிந்த முஸ்லிம் பெண்கள் பிரசாரத்தில் ஈடுபட்டதை காணொளியில் கண்டேன்.

    ஆனால், அப்படி முடிவெடுப்பதற்கும் உள்ள கால அவகாசம் மிகக் குறுகியது. ஆகக் கூடியது மூன்று வாரங்கள் தான் இன்னமும் எஞ்சியிருக்கின்றன. TM
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிங்களக் கடும்போக்குவாதம் மாறுவதற்கோ மறைவதற்கோஎந்த வாய்ப்பும் இல்லை: அமைச்சர் பஷீர் சேகுதாவூத் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top