சஹாப்தீன் -
2015 ஜனவரில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்ற தகவல்களை அடுத்து, பிரதான எதிர்க் கட்சியாகிய ஐ.தே.க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. அதில், ஒரு கட்டமாக அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களுக்கு 22.10.2014 புதன்கிழமை அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் விஜயம் செய்து, அங்குள்ள மக்களோடு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்கள்.
2015 ஜனவரில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்ற தகவல்களை அடுத்து, பிரதான எதிர்க் கட்சியாகிய ஐ.தே.க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. அதில், ஒரு கட்டமாக அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களுக்கு 22.10.2014 புதன்கிழமை அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் விஜயம் செய்து, அங்குள்ள மக்களோடு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்கள்.
பல தொடரான தோல்விளை சந்தித்துள்ள ஐ.தே.க ஊவா மாகாண சபைத், தேர்தலின் பின்னர், தங்களினாலும் வெல்ல முடியுமென்ற மனோ நிலையை அக்கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளது. இதனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினரின் வாக்குகள் இருக்கப் போகின்றன.
ஆதலால், தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிதொரு கட்டாயம் ஐ.தே.கவுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஏற்பட்டுள்ளது. இக்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களாக மஹிந்தராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரசிங்க ஆகியோர்கள் போட்டியிடவுள்ளார்கள்.
முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள மு.கா இன்றைய அரசாங்கத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது. ஆதலால், இக்கட்சி தம்மோடு இணைந்து கொள்ளாதென்று ஐ.தே.க முடிவு செய்துள்ளது. இதனால், மு.காவின் இதயமென்று கருதப்படும் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் நாடித்துடிப்பை அறிந்து கொள்வதற்கு சம்மாந்துறை, நிந்தவூர், கல்முனை போன்ற இடங்களுக்கு விஜயம் செய்து கருத்துரைத்துள்ளனர்.
ஐ.தே.கவின் தொடர்ச்சியான தோல்விகள், மு.காவுடனான உறவு போன்றன காரணமாக அம்பாரை மாவட்டத்தில் இக்கட்சியின் செல்வாக்கு வெகுவாக இழக்கப்பட்டிருந்தது என்றே கூறுதல் வேண்டும். ஆயினும், நாட்டில் பௌத்த கடும்போக்கு அமைப்புக்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் முஸ்லிம்களின் மனங்களில் மாறாத ரணங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த ரணங்களையும், அரசாங்கத்தோடுள்ள முஸ்லிம் கட்சிகளின் கையாளாகாத் தன்மைகளையும் முஸ்லிம் மக்களிடையே முன் வைத்து, ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதே ஐ.தே.கவின் திட்டமாக இருக்கின்றது.
தங்களது இந்த திட்டத்தை முதலில் அம்பாரை மாவட்டத்தில் வெற்றிகரமாக்கிக் கொண்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதென்பது கடினமாக இருக்காது என்பதுதான் ஐ.தே.கவின் எண்ணமாகும். மு.காவின் பிடியில் உள்ள அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் நாடித்துடிப்பை அறிந்து கொள்வதற்காக ஐ.தே.கவினர் பரந்த அடிப்டையில் ஏற்பாடுகளை செய்யாதிருந்தாலும், அவர்களின் வருகைக்கு வரவேற்புக்கள் இருந்தன. இந்த வரவேற்பு ஐ.தே.கவினர் எதிர்பார்த்தனை விடவும் அதிகமாகவே இருந்தது. பகிரங்க கூட்டமொன்றினை ஏற்பாடு செய்தால், கடந்த காலங்களைப் போன்று மக்கள் குறைவாக வந்தால், எல்லாம் பிழைத்துப் போய்விடும் என்று தயக்கம் காட்டிய ஐ.தே.கவினர், பரந்தளவில் ஏற்பாடு செய்து பொதுக் கூட்டமொன்றினை வைத்திருக்கலாமென்ற சந்தோசத்தையும் ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் இன்றைய அரசாங்கக் காலத்தில் பௌத்த கடும்போக்கு அமைப்புக்களினால் முஸ்லிம்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டவைகள் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளினதும், தலைவர்களினதும் சந்தர்ப்பவாத செயற்பாடுகளினால் அதிகபட்ச அதிருப்தியுடன் உள்ளார்கள். அவர்கள் இன்றைய அரசாங்கத்தில் வைத்துள்ள விசுவாசத்தைக் கூட முஸ்லிம் கட்சிகளிலும், அவற்றின் தலைவர்களிடத்திலும் வைத்திருப்பதாக தெரியவில்லை. அம்பாரை மாவட்டத்தின் மூலை, முடுக்கெல்லாம் இவர்கள் கடும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த விமர்சனங்கள் ஒரு பக்கம் சார்ந்தாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் பரிந்து பேசுவதற்கு கூட ஆளில்லாத நிலையே ஏற்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தை தோல்வி மனப்பான்மையில் இருந்து இன்றைய ஜனாதிபதி மீட்டெடுத்தார். இதே போன்று, ஊவா மாகாண சபைத் தேர்தல் மூலம் ஐ.தே.கவிற்கு எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற முடியுமென்ற தைரியத்தை ஏற்படுத்தி இருப்பதாக மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிம் அண்மையில் கல்முனை மாநகர சபையின் முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும், குறிப்பிடுகையில், ஜனாதிபதித் தேர்தலில் சமூகத்திற்காக பேரம் பேசும் ஒரு வாய்ப்பு உள்ளது. அதனை அடைவதற்கு வெல்லும் குதிரையில்தான் பந்தயம் கட்ட முடியுமென்று தமது கட்சியினரில் சிலர் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெல்லும் குதிரையில்தான் பந்தயம் கட்ட வேண்டும் எனும் போது வெல்லும் குதிரை பேரம் பேசுதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது? தோல்வியடையும் குதிரையில் பந்தயம் கட்ட முடியுமா என்ற கேள்வியும் எழுகின்றது. வெல்லும் குதிரையைத்தான் தெரிவு செய்ய வேண்டுமென்று சொல்லுவது முஸ்லிம்களின் வாக்குகளை மலினப்படுத்துவதாகவும், முஸ்லிம்களின் வாக்குகள் இல்லாது போனாலும் அந்தக் குதிரை வெற்றியடையும் என்ற கருத்தும் தொக்கி நிற்கின்றது.
இதே வேளை, மு.காவை தமது பக்கத்திற்கு இழுத்துக் கொள்வதற்கு ஐ.தே.க முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது. பௌத்த கடும்போக்கு அமைப்புக்களின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள், அவை குறித்து அரசாங்கத்தின் செயற்பாடுகள் போன்றவற்றை முஸ்லிம்களுக்கு எடுத்துக் கூறி, அவர்களை ஐ.தே.கவில் இணைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.
ஐ.தே.கவின் இந்த திட்டத்திற்கு மு.கா பலியாகுமா என்பதும் சந்தேகமே. ஏனெனில், அக்கட்சி வெல்லும் குதிரையில் பந்தயம் கட்ட தயாராக இருக்கின்றதேயன்றி, தோல்வியடையும் குதிரையில்லை. மு.கா பொறுத்தவரை, ஐ.தே.கவுடன் பல தடவைகள் கூட்டு வைத்து, சூடு கண்ட பூனையாக இருப்பதால் மீண்டுமொரு தடவை அடுப்பங்கரையை நாடாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், மு.கா எனும் பூனை ஐ.தேகவுடன் மாத்திரம் சூடுபட்டுக் கொள்ளவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் சூடு கண்டுள்ளது. மு.காவே பல தடவைகள் இந்த அரசாங்கத்தில் நாங்கள் வெறும் போடு காயாகவே இருக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் நிறைவேற்று ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்கும் வகையிலான 18வது திருத்தச் சட்டத்திற்கு கைகளை உயர்த்திக் கொண்ட கட்சியாகவும் மு.கா இருக்கின்றது. இதற்கு கைகளை உயர்த்தியாவது அரசாங்கத்தில் போடுகாயாக இருப்பதனை தவிர்க்க முடியுமா என்று பார்த்தும் கையை சுட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மு.கா ஐ.தே.கவை தெரிவு செய்து கொண்டமை தமது அரசியல் எதிரிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்திருந்தமையாகும். பின்னர், இன்றைய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை, கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்துவிடுவார்கள், ஆதலால், கட்சியை காப்பாற்ற வேண்டுமென்பதனால் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டது. இதுதான் வரலாறு.
ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் மிகச் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. அதனால், மஹிந்தராஜபக்ஷ தம்மோடுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், அவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுத் தருவார்கள். தமது வெற்றியை உறுதி செய்வார்கள் என நம்பியுள்ளார். இதற்கான உத்தரவாதத்தையும் அவர் பெற்றுள்ளார்.
பௌத்த கடும்போக்கு அமைப்புக்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு வகை செய்யுமென்று ஐ.தேகவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க நம்பியுள்ளார்.
இவர்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று சிந்திக்கின்ற அதே வேளை, இந்த நாட்டை இவர்களில் யார் ஆட்சி செய்தாலும், தங்கள் மீதான திட்டமிட்ட நெருக்குவாரங்கள் இல்லாமல் செய்யப்பட வேண்டும். இதற்கான உத்தரவாதங்கள் தரப்பட வேண்டும் என்பதாக முஸ்லிம்களின் நிலைப்பாடுகள் உள்ளன. ஆனால், அந்த உத்தரவாதங்கள் கடந்த காலங்களைப் போன்று இல்லாது இருக்கவும் வேண்டும். கடந்த காலங்களில் ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் கட்சிகள் பெரிய கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று தெரிவித்து, முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தார்கள். ஈற்றில், வாக்களித்த சமூகம் தீமைகளை அடைந்து கொண்டது. வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தவர்கள் பதவிகளை பெற்றுக் கொண்டார்கள். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட யார் வெல்லுவார் என்ற கணக்கு பதவிகளை மையப்படுத்திய சிந்தனையாகும்.
இதே வேளை, அம்பாரை மாவட்டத்தில் உள்ள மு.காவின் முக்கிய ஆதரவாளர்களை தங்களின் பக்கத்திற்கு இழுத்துக் கொள்வதற்கான பேச்சுக்களில் ஐ.தே.க ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றன. இவர்களுள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், இந்நாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், முரண்பாடுகளை கட்சியின் ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டிருக்கும், மு.காவின் தலைமை, அம்பாரை மாவட்டத்தில் தமது கட்சியின் உறுப்பினர்களிடையே காணப்படும் முரண்பாடுகளை தீர்த்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதற்கான முயற்சிகளை கட்சி எடுத்துள்ளதாக தெரியவில்லை.
ஆகவே, ஜனாதிபதித் தேர்தலில் வெல்லும் குதிரையில் பந்தயம் கட்டுவதா? வேறு குதிரையில் பந்தயம் கட்டுவதா என்பதற்கு பதிலாக தமது கட்சிக்கு இழுக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும், நபர்களையும் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால், மீண்டும், மீண்டும் கட்சியை காப்பாற்றுவதற்கு முடிவு செய்தோம் என்றுதான் கூறுதல் வேண்டும்.
முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்துள்ள ஐ.தே.கவிற்கு அம்பாரை மாவட்டத்தில் எல்லா பிரதேசங்களிலும் சிறந்ற ஆளுமை மிக்கவர்களில்லை. இதனால்தான், அக்கட்சி மு.காவினருக்கு வலை வீசியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு

0 comments:
Post a Comment