• Latest News

    October 11, 2014

    நாட்டின் பிரதம நீதியரசர் பக்கச்சார்பாக செயற்படுகின்றார் – முன்னாள் பிரதம நீதியரசர்

    நாட்டின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தற்போதைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு பக்கச் சார்பாக செயற்படுகின்றார் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். 

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்றாம் தவணைக்காக தேர்தலில் போட்டியிட முடியுமா என உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோரப்பட்டால் அந்த விளக்கத்தை அளிக்கும் நீதியரசர் குழாமில் மொஹான் பீரிஸ் அங்கம் வகிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ஏனெனில், மொஹான் பீரிஸ் ஆளும் கட்சிக்கு சார்பாக செயற்பட்டு வருவதாகவும் இதனால் சட்ட விளக்கம் கோரும் நீதியரசர் குழாமில் அங்கம் வகித்தால் அதனை எதிர்க்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

    அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாப்பாண்டவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு நேரில் அழைப்பு விடுக்கும் நோக்கில் வத்திக்கானுக்கு விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தின் போது பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸூம் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நாட்டின் நீதிமன்றத் துறைக்குப் பொறுப்பான பிரதம நீதியரசர் அரசியல்வாதிகளைப் போன்று ஜனாதிபதியுடன் விஜயங்களில் பங்கேற்பதன் மூலம் அவரது பக்கச்சார்பு தன்மை அம்பலமாகியுள்ளது என அவர் சரத் என் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

    எந்த அடிப்படையிலும் ஜனாதிபதியுடன் இவ்வாறான ஓர் விஜயத்தில் இணைந்து கொள்வதற்கு மொஹான் பீரிஸிற்கு சந்தர்ப்பம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மக்களின் தெரிவு இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    18ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பதனால், அப்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மூன்றாம் தவணைக்காக போட்டியிட சட்ட ரீதியான சந்தர்ப்பம் ஜனாதிபதிக்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்,
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டின் பிரதம நீதியரசர் பக்கச்சார்பாக செயற்படுகின்றார் – முன்னாள் பிரதம நீதியரசர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top