ஒரு கொள்கையினை நோக்கி பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். சரியான தீர்மானமெடுத்து சரியான பாதையில் பயணிப்பதனால் மட்டுமே தமிழ், முஸ்லிம் சமூகத்தினை காப்பாற்ற முடியும். எனவே, தமிழ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து புதிய பயணத்தினை ஆரம்பிக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்துடன் பேரம் பேசும் நிலைமைக்கு இனி ஒரு போதும் இடமில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாம் தீர்க்கமான முடிவுகளை எடுப்போம் எனவும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான முடிவுகளை எடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அரசாங்கத்துடன் பேரம் பேசும் நிலைமைக்கு இனி ஒரு போதும் இடமில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாம் தீர்க்கமான முடிவுகளை எடுப்போம் எனவும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து ஒரே கொள்கையில் பயணிக்க வேண்டிய தேவை உள்ளது. கடந்த கால கசப்பான சம்பவங்கள் இருசாரருக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. எனினும் கடந்த முப்பது வருட கால சூழல் இப்போது இல்லை. தமிழ் தலைவர்கள் இன்று தமது கொள்கையில் உறுதியாகவும் தாம் பயணிக்கும் பாதையில் தெளிவாகவும் உள்ளனர். அதேபோல் முஸ்லிம் சமூகத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சி என்ற வகையில் நாம் இன்று மிகச் சரியான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களுடன் நாம் சேர்த்து செயற்படுவதனால் மட்டுமே எமது எதிர்காலத்தினை சரியானதாகவும் ஒற்றுமையானதாகவும் கொண்டு செல்லமுடியும்.
எனவே, ஆரம்பத்தில் நாம் எவ்வாறு இனங்களை ஒற்றுமைப்படுத்தி சுமுகமான பயணத்தினை கொண்டு செல்ல முயற்சித்தோமோ அதே சூழ்நிலையினை இப்போதும் ஏற்படுத்தி வடக்கு, கிழக்கினை இணைத்த அரசியலை முன்னெடுக்க வேண்டும். எனவே, எதிர்வரும் நாட்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான இரு தரப்பு சந்திப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவானதும் ஆரோக்கியமானதுமான பல தீர்மானங்களை முன்னெடுத்து தமிழ் முஸ்லிம் உறவினை பலப்படுத்தும்.
மேலும், சுயநல அரசியலை செய்யும் கட்சியல்ல நாம். நாம் அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றமைக்கும் பல காரணங்கள் உள்ளது. எமது சமூகத்தினை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசுடன் இணைய வேண்டிய தேவை ஏற்பட்டது. எனினும் இன்று அரசாங்கம் முஸ்லிம் மக்களின் விடயத்தில் நம்பகத்தனமாக செயற்படவில்லை. எனவே, அரசாங்கத்தில் இருந்து கொண்டு பேரம் பேசும் அரசியலை இனிமேலும் செய்ய முடியாது.
அரசாங்கம் சிறுபான்மை மக்கள் விடயத்தில் சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. எனவே, அதனை வலியுறுத்தி எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்போம். அடுத்து நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் – முஸ்லிம் மக்கள் விடயத்தினையும் ஆட்சி போக்கினையும் கருத்தில் கொண்டு தீர்மானமெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment