• Latest News

    December 19, 2014

    வடகிழக்கு மக்கள் தேர்தலை பகிஸ்கரிப்பது எதிரியை ஆதரிப்பதற்கு சமன்: மாவை சேனாதிராஜா

    மாவை சேனாதிராஜா
    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்காது அதிகளவான பங்களிப்பினை செய்ய வேண்டும். அதற்காக எமது கட்சி உறுப்பினர்கள் யாவரும் வீடுவீடாக சென்று மக்களை வாக்களிக்க தூண்ட வேண்டும் என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

    வடகிழக்கு மக்கள் அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கும் பொருட்டு வடகிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் ஒன்றுகூடல்களை நடாத்தி வருகின்றோம்.

    அதன் ஒரு கட்டமாகவே நேற்று அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேச சபையில் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை, உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வானது ஆலையடி வேம்பு பிரதேச சபையின் தவிசாளர் தலமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் இறுதியில் ஊடகவியலாளரிடம் கருத்துரைத்த மாவை சேனாதிராஜா,

    இந்த நாட்டிலே தற்போது ஜனாதிபதி தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனை தமிழ் மக்களாகிய நாம் எமக்கு சாதகமாக எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக மக்கள் கருத்துக்களை அறிந்து வருகின்றோம்.

    இம்முறை நடக்கவிருக்கும் இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்.

    அதற்காக எமது கட்சியில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடங்கி கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் வரை உழைக்க வேண்டும்.

    எமது மக்களை வாக்களிக்க செய்யாது இத்தேர்தலை பகிஸ்கரிப்போமானால் எமது எதிரிக்கு அதிகமான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்போம் எனவேதான் இந்த தேர்தலை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் வாக்களிப்பிலிருந்து விலகிவிடக்கூடாது.

    எமது இறுதி முடிவானது இன்னும் சில தினங்களில் எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவுடன் அனைவரும் ஒன்று கூடி மக்கள் நலன் சார்ந்ததொரு முடிவினை எடுத்து அதனை பகிரங்கமாக யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவிப்போம் எனக்கூறினார்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வடகிழக்கு மக்கள் தேர்தலை பகிஸ்கரிப்பது எதிரியை ஆதரிப்பதற்கு சமன்: மாவை சேனாதிராஜா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top