சஹாப்தீன் -
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்;புக்கும், முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையே இருந்து வந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகின்றது. கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்;புக்கும், முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையே இருந்து வந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகின்றது. கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்பட உள்ளதென்று தெரிய வந்துள்ளதனையடுத்து, அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் பதவிக்காக தமக்கு நெருக்கமானவர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு அஞ்சலோட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
முதலமைச்சர் பதவியை குறிவைத்து ஏ.எம்.ஜெமீல், ஐ.எம்.எம்.மன்சூர், இஸட்.ஏ.நசீர் அஹமட் ஆகியோர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் ஏ.எம்.ஜெமீல், ஐ.எம்.எம்.மன்சூர் ஆகிய இருவரில் ஒருவருக்கே முதலமைச்சர் அந்தஸ்து கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஹாபிஸ் இஸட்.ஏ.நசீர் அஹமட்டிற்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதற்கு ஆளுந்தரப்பில் பலத்த எதிர்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை சம்மாந்துறையைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எம்.எம்.மன்சூருக்கு வழங்குவதற்கு ரவூப் ஹக்கீம் தீர்மானித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரவூப் ஹக்கீம் அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட இருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் வட்டாரங்களின் மூலமாக அறிய முடிகின்றன.
இதனால், மன்சூருக்கு முதலமைச்சர் பதவியை வழங்கி, சம்மாந்துறை ஆதரவாளர்களை ஆசுவாதப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில், சம்மாந்துறை தொகுதி கடந்த இரண்டு பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினரை இழந்து நிற்கின்றது. மன்சூருக்கு முதலமைச்சர் பதவி வழங்கும் பட்சத்தில், சம்மாந்துறை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் ரவூப் ஹக்கீம் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அவர் சம்மாந்துறைக்கான நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கப் போவதில்லை. அவர் கொழும்பில் அதிக நாட்களை கழிப்பார். கொழும்புக்கு சென்றுதான் சம்மாந்துறை மக்கள் சந்திக்க வேண்டியேற்படும். அத்தோடு, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்பதனால், நாட்டிலுள்ள எல்லா பாகங்களில் இருந்தும் மக்கள் சந்திக்க வருவார்கள். ஆதலால், சம்மாந்துறை தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தனியாக கவனம் செலுத்த முடியாத நிலை ரவூப் ஹக்கீமுக்கு ஏற்படும். இதனால், எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் சம்மாந்துறை தொகுதி முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரை இழந்தவர்களாகவே இருக்க வேண்டியேற்படும்.
இதே வேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலின் மூலமாக சம்மாந்துறை தொகுதி இழந்து நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றாக வேண்டுமென்று பரந்துபட்டதொரு அபிப்ராயம் இத்தோகுதி மக்களிடையே வேரூண்டிப் போயுள்ளது. ஆதலால், சம்மாந்துறைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரா அல்லது நாடாளுமன்ற உறுப்பினரா கட்டாயத் தேவை என்பதனை இப்போதே முடிவு செய்ய வேண்டியுள்ளது.
சம்மாந்துறைக்கு முதலமைச்சர் பதவியை வழங்கினாலும், அது நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஈடாகாது. மேலும், சம்மாந்துறை மண்ணைச் சேர்ந்த ஒருவர் பொதுத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படாது போனால், அங்கு சம்மாந்துறைக்கு நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றாக வேண்டுமென்று உறுதியுடன் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள், மாற்றுக் கட்சியில் போட்டியிடும் சம்மாந்துறை மண்ணைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்குகளை வழங்குவதற்கு தயங்கமாட்டார்கள். ஏனெனில், சம்மாந்துறைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுமென்பது நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டு வருகின்றது.
இதே வேளை, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி சாய்ந்தமருதிற்கு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களினால் முன் வைக்கப்படுகின்றது. சாய்ந்தமருதினைச் சேர்ந்த ஏ.எம்.ஜெமீலுக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டுமென்று ஜெமீலின் ஆதரவாளர்கள் முஸ்லிம் காங்கிரஸிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சாய்ந்தமருது பெற்றுக் கொண்ட கல்முனை மாநகர சபையின் மேயர் பதவியை, முஸ்லிம் காங்கிரஸ் பலாத்காரமாக பறித்தெடுத்து, கல்முனையைச் சேர்ந்த நிஸாம் காரியப்பருக்கு வழங்கியது. இதற்கு உபகாரமாக ஜெமிலுக்கு கிழக்கு மாகாண சபையில் அமைச்சர் பதவி வழங்கப்படுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே பதவியாக கிடைத்தது.
கல்முனை அரசியல்வாதிகளிடையே காணப்படுகின்ற போட்டி மனோ நிலையால், ஜெமீலுக்கு முதலசைமச்சர் பதவி கிடைக்குமா என்ற கேள்வியும் உள்ளது. கல்முனைத் தொகுதியில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய அரசியல் புள்ளிகள் ஒரு நேர் கோட்டில் நின்றதே கிடையாது. ஆளுக்கு ஆள் காய் வெட்டிக் கொள்வதில் வல்லவர்கள் என்பதனை அடிக்கடி நிரூபித்துள்ளார்கள்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி தங்களுக்கு தேவையில்லை. மாகாண சபையில் ஒரு அமைச்சராக நியமிக்கப்பட வேண்டுமென்ற எண்ணத்தையுடையவர்களாக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முஹம்மட் நசிரும், அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எம்.தவமும் உள்ளார்கள். இதனை கட்சியின் தலைமைக்கும் ஒரு வகையில் இவர்கள் எத்திவைத்துள்ளார்கள். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளில் அக்கரை காட்டியுள்ளார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையில் அமைச்சர் பதவிகளை பங்கு போட்டுக் கொள்வதற்கு முட்டி மோதிக் கொண்டிருக்கின்ற அதே வேளை, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சி மாற்றத்தில் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று சூடாகிக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியின் தலைமையோடு கோபித்துக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக, கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் தனக்கு அமைச்சர் பதவி கிட்டுமென்று எதிர்பார்த்தார். அவரின் ஆதரவாளர்களும் பெரும் ஆவலாகவே இருந்தார்கள். ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும், கட்சியின் மூத்த உறுப்பினருமான எம்.ரி.ஹஸன்அலிக்கு மாத்திரம் அம்பாரை மாவட்டத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஹரிஸ் தலைமையுடன் கோபப்பட்டவராக உள்ளார். இதே போன்றுதான் பைசால் காசிமும் அமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தில் உள்ளார்.
மேலும், முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது வெற்றியை உறுதி செய்யும் வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் பொதுத் தேர்தலை மரச்சின்னத்தில் போட்டியிடுமா என்பது சந்தேகமாகும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை ஆளுந் தரப்பிலுள்ள கட்சிகள் யாவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்ட அன்னச் சின்னத்திலேயே தமது வேட்பாளர்களை களம் இறக்குவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. இல்லாது, போதனால், சுதந்திரக் கட்சியின் தலைவராக உள்ள மைத்திரிபால சிறிசேனவை அவரது சுதந்திரக் கட்சியினர் சொந்தம் கொண்டாடுவார்கள். இதனை தடுப்பதற்கு அன்னச் சின்னத்தில் தேர்தலை எதிர் கொள்வதே சிறந்த வழியாகுமென்று ஆளுந் தரப்பிலுள்ள பலரும் அபிப்ராயம் தெரிவித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஆளுந் தரப்பிலுள்ள கட்சிகள் பொது உடன்பாட்டிற்கு வந்து, அன்னச் சின்னத்தில் பொதுத் தேர்தலை சந்திக்கும் போது, அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பலத்த தலையிடிக்கும், பிரச்சினைகளுக்கும் முகங் கொடுக்க வேண்டியேற்படும். அம்பாரை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுவதற்கு சட்டத்தரணி எம்.முஸ்தபா, ஐ.எம்.எம்.மன்சூர், ஐ.எம்.மாஹிர், இஸ்மாயில், ஹரிஸ், ஜெமீல், ஜவாத், பைசால் காசிம், ஹஸன்அலி, முஹம்மட் நசீர், தவம் போன்றவர்கள் ஆயத்தமாக உள்ளார்கள்.
இச்சூழலில், முஸ்லிம் காங்கிரஸ் அன்னச் சின்னத்தில் அம்பாரையில் வேட்பாளர்களை நிறுத்தும் போது, அதன் சார்பில் ஐந்து உறுப்பினர்கள் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படலாம். இதனால், முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு பேரை தூங்கும் வேட்பாளர்களாக்கி, மூன்று பேரை நிறுத்தும். அதாவது, ரவூப் ஹக்கீம், பைசால் காசிம் அல்லது ஹஸன்அலி மற்றும் ஹரிஸ் ஆகியோர்களை உண்மை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
அத்தோடு, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், சாய்ந்தமருது ஆகிய ஊர்களிலிருந்து வேட்பாளர்களை நிறுத்த முடியாது போய்விடும். இந்நிலை, இவ்வூர் மக்கள் தங்கள் ஊரிலும் இருந்தும் நாடாளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் செல்ல வேண்டுமென்ற நியாயமான ஆசைக்கு ஆப்பு வைப்பதாகவே இருக்கின்றது.
மேலும், முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் போட்டியிடாது, பொதுச் சின்னத்தில் போட்டியிடும் போது, மக்களினால் நிராகரிக்கப்பட உள்ளவர்களும் வெற்றி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வார்கள். இதனால், வாக்காளர்களை தூக்கி எறிந்து பேசும் அரசியல்வாதிகளின் எதாச்சதிகாரம் மேலும் வலுக்கவும் செய்யும். இதனால், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் வெறுப்படைந்து மாற்றுக் கட்சிகளை நாடுவார்கள் என்பதில் ஐயமில்லை.
மேலும், மூன்று வேட்பாளர்களை உண்மை வேட்பாளர்களாக நிறுத்தும் போது, சிறிய ஊர்கள் பெரிய ஊர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்வதற்கு கடமைப்பட்டவர்கள் என்றாகிவிடும். முஸ்லிம் காங்கிரஸை 70 வீதத்திற்கும் அதிகமாக ஆதரிக்கின்ற ஓலுவில், பாலமுனை, மருதமுனை, பொத்தவில், இறக்காமம், நற்பிட்டிமுனை, மத்தியமுகாம் போன்ற ஊர்களுக்கும் அரசியல் அதிகாரங்களை கொடுக்க முஸ்லிம் காங்கிரஸிடம் திட்டங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
இவ்வாறு, முஸ்லிம் காங்கிரஸில் காணப்படுகின்ற அரசியல் போக்கு, பிரதேசங்களிடையே போட்டித்தன்மையையும், புறக்கணிக்கப்படுகின்றோம் என்ற மனோ நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், முஸ்லிம் காங்கிரஸின் மீது மக்களுக்கு வெறுப்பும், சலிப்பும் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு இருந்த, அதன் ஆதரவாளர்கள் முதற் தடவையாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கடசிக்கு முன்பாகவே முடிவுகளை எடுத்து, கட்சியைப் பணிய வைத்தார்கள். தங்களின் முடிவு சிறந்ததென்றும் காட்டியுள்ளார்கள். முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த முடிவு, கட்சிக்கு விடுத்த அபாய எச்சரிக்கையாகும்.

0 comments:
Post a Comment