• Latest News

    August 07, 2015

    'மீன் குஞ்சுக்கு கற்றுக் கொடுக்கும் தேவை, மர்ஹும் அஷ்ரபுக்கு இருந்திருக்க மாட்டாது'

    (மூத்த ஊடகவிலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரும் போராளியும் எனது நண்பருமான முன்னாள் அமைசசர் பஷீர் ஷேகு தாவூத் அவர்களின் முகநூலை அடிக்கடி பார்ப்பேன், படிப்பேன் அண்மைக் காலமாக அவரால் பதிவிடப்படும் பல விடயங்களில் அவரது மன ஆதங்கம், உளக் கிடக்கைகளை வெளிப்படுத்தியே நிற்கின்றன.

    சிலவற்றைப் படிக்கும் போதே அவர் பலவற்றை இழந்த நிலையில் புலம்புகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுவது உண்டு. அவரால் பதிவிடப்படுள்ள பல விடயங்கள் அண்மைக்கால முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் சம்பவங்கள், தான் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஓரம் கட்டப்பட்டமை தொடர்பில் அவரது மன வேதனையையே சொல்லி நிற்கின்றன.

    என்னைப் பொறுத்தவரையில் அவர் தெரிவித்துள்ள பல விடயங்களில் ஒன்றிப் போக முடியாத நிலையில் உள்ளேன். முஸ்லிம் காங்கிரஸ்  தொண்டர்கள்,  ஆரம்ப கால போராளிகள் போன்றோருக்கு  இப்போது இடமில்லை என்ற கருத்துப்பட (தன்னையே கருதி) தனது மன ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.  இதனை என்னால்  மனம் கொள்ள  முடியாது.  ஆரம்ப கால போராளிகள் என்பதற்காக தங்களை இறுதி வரையும் அரவணைத்து தேவையானவற்றைக் கொடுத்து உச்சத்தில் வைக்க வேண்டுமென்று ஏதோவொரு கட்சியைச் சேர்ந்த எவரேனும் ஒருவர்  நினைப்பாரானால் அது அவரது சுயநலத்தின் உச்சம் என்றுதான் என்னால் அதனை ஒப்புவிக்க முடியும்.

    அவ்வாறானதொரு நிலைமைதான் தொடர வேண்டுமானால் அது இளைய தலைமுறையினரையும் நவீன, முற்போக்கு  சிந்தனை கொண்ட ஒரு துடிப்புமிக்க இளம் சந்ததிதை இல்லாமல் செய்யும் ஒரு  மோசமான கைங்கரியமாகவே இருக்கும்.“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்ற நன்னூல் பாடல் வரியை எக்காலத்திலும்  நாம் மறந்து விடக் கூடாது.  ஆரம்ப காலப் போராளி என்பதற்காக இறுதி வரை அனைத்தையும் தானே பொத்திக் வைத்திருக்க வேண்டும் என்பது மிக மோசமானதொரு சுயநலச் சிந்தனையின் வெளிப்பாடே.

    தங்களை ஆரம்பப் போராளிகள் என்று அடைமொழியிட்டு இனங்காட்டி, பறைசாற்றுவோர் செய்ய வேண்டியது இளையவர்களுக்கு வழி விட்டு  அவர்களுக்கு வழிகாட்டுவதே ஆகும். அதுதான் அவர்களை அனைத்து மட்டத்திலும் என்றும் உயர்த்திக் காட்டும். இது அனைத்துக் கட்சியைச் சார்ந்தோருக்கும் பொருந்தும்.

    25 வருடங்களின் பின் இம்முறை தேர்தலில் வேட்பாளராக இல்லாதிருப்பது ஒரு புது அனுபவமாக உள்ளதாக நண்பர் பஷீர் ஷேகுதாவுத் கூறியுள்ளார். அவரது கூற்றானது அவரின் மன நிறைவைக் காட்டுவதாக இல்லை. மன ஆதங்கத்தின் மன வேட்காட்டின் வெளிப்பாடாகவே உள்ளது. இன்னும் தான் அனைத்திலும் செயற்பாடு கொண்டவனாக இருக்க வேண்டுமென்ற  ஆசை  அவருக்கு உள்ளது என்பதனை அவரது வார்த்தைகள் வெளிக்காட்டத் தவறிவில்லை. 25 வருட அரசியல் வாழ்க்ககையின் பின்னர் இன்று (தற்காலிக) ஓய்வு கிடைத்ததனை மன நிறைவாக ஏற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு வழி விடுவதுதானே சிறந்த பண்பு. இதனை விடுத்து மஹிந்தையரின் சிந்தனை போன்று ”நானே ராஜா, நானே மந்திரி” ,“என்றும் நானே எதிலும் நானே” என்ற நிலையிலிருந்து நண்பர் பஷீர் ஷேகுதாவுத் விடுபட வேண்டும்.

     நண்பர் பஷீர் ஷேகுதாவுத் அவர்களுக்கு இன்றும் அதிகாரம், அரசியல் ஆசைகள் விட்டுப் போகவில்லை என்பதனையே அவரது பதிவுகள் காட்டுகின்றன. இவ்வாறானதொரு நிலைமையை அவருக்கு ஏற்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸோ அல்லது கட்சித் தலைமையோ காரணம் அல்ல. தனது தலையில் தானே மண் வாரிப் போட்டுக் கொண்ட கதைதான்  நண்பர் பஷீர் ஷேகுதாவுத் அவர்களுக்கு  நடந்ததே தவிர வேறொன்றுமே இல்லை.

    தான் செய்த தவறுகளுக்காக மற்றவர்களை விமர்சிப்பதனை விட, தான் விட்ட பிழைகள் தொடர்பில் தன்னையே தனக்குள் சுய விமர்சனம் செய்து திருந்திக் கொள்வதே சாலச் சிறந்தது. “சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்ப்பினைக் காட்டுதடா” என்ற பாடலை அந்தக் காலத்தில் நானும் நண்பர் பஷீர் ஷேகுதாவூத் அவர்களும் நன்கு ரசித்து மனதுக்குள்ளும் மனம் திறந்தும் பாடியது இன்றும் என் நினைவில் உள்ளது.

    இதேவேளை, நண்பர் பஷீர் ஷேகுதாவுத் அவர்களை ஒதுக்கி விட்டு அலிசாகிர் மௌலானாவையும், சிப்லி பாறூக்கையும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களாக மட்டு மாவட்டத்தில் நிறுத்தியமை கட்சியின் சிறந்த முடிவு என்று நான் இங்கு கூற வரவில்லை. இவர்கள் இருவரையும் களத்தில் இறக்கியமை அந்தக் கட்சியின் வடிகட்டிய முட்டாள்தனம் என்றே நான் கூறுவேன். இந்த விடயத்தில் அலி சாகிர் மௌலானாவை தங்களது கட்சியின் வேட்பாளராக நிறுத்தியமையில் ஓரளவு நியாம் காணப்பட்டாலும் ஷிப்லி பாறூக்கை சேர்த்துக் கொண்டது சிறந்த முடிவல்ல  என்று என்னால் ஆணித்தரமாக கூற முடியும். இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையில்தான் உள்ளது. இருந்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று.

    மேற்சொன்ன எனது சிந்தனை, கருத்துடன் நண்பர்  நண்பர் பஷீர் ஷேகுதாவுத் அவர்களும் காணப்படுவாரானால் அவரைப் பாராட்டுவேன்.

    மேலும்  நண்பர் பஷீர் ஷேகுதாவுத்  அவர்கள் தனது முகநூலில் இன்னொரு விடயத்தை கூறியுள்ளார் . அதாவது., “நன்றி தலைவா! அரசியலில் நடிக்க கற்றுத் தராமைக்கு!! என்று குறிப்பிட்டுள்ளார்.  மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை என்பது மர்ஹும் மாமனிதர் அஷ்ரஃப் அவர்களுக்கு தெரியாதா என்ன?
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'மீன் குஞ்சுக்கு கற்றுக் கொடுக்கும் தேவை, மர்ஹும் அஷ்ரபுக்கு இருந்திருக்க மாட்டாது' Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top