• Latest News

    September 12, 2016

    தியாகத் திருநாளின் மகிமையை ஒற்றுமையுடன் காட்டவேண்டும்: கிழக்கு முதலமைச்சர்

    உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகிடைக்க இன்றைய தியாகத் திருநாளில் நாம் அனைவரும் பிரார்த்திக்கவேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
    அவரது பெருநாள் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:    புனித மக்கமா நகரில் தியாகத்தை நினைவூட்டும்வகையில் ஒன்று கூடியுள்ள அனைத்துலக மக்களும் எந்த விதமான பேதமுமின்றி இறையோனின் கட்டளைக்கு அடிபணிந்து பிரார்த்தனைகளிலும், தொழுகைகளிலும், நல்லமல்களிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

     ஆண்டான், அடிமை என்ற பேதமின்றியும், கறுப்பன் வெள்ளையன் என்ற நிற வேறுபாடின்றியும், நாடு குல பேதங்களை மறந்து இஸ்லாமியர்களாகிய அனைவரும் புனித மக்கமா நகரில் ஹஜ்ஜுக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இன்றையத் தியாகத் திருநாள் சமூகங்களுக்கிடையே பல்வேறு படிப்பினைகளை உருவாக்கி உள்ளது.

    இறையோனின் கட்டளைக்கு அடி பணிந்து நபி இப்றாகிம் (அலை) அவர்கள் அன்பு மைந்தன் இஸ்மாயிலை அறுத்துக் குர்பான் கொடுப்பதற்கு தயாரான வரலாறும், அதன் பின்னரான பல்வேறு சம்பவங்களும் இந்த புனித ஹஜ்ஜுக் கடமையில் உணர்த்தப்படுகின்றது. இஸ்லாமியர்களாகிய நாம் ஒற்றுமையுடன் செயல்படுவதற்கும் ஏனைய சமூகங்களுடன் பரஸ்பர நல்லுறவுடன் வாழ்வதற்கும் திடசங்கற்பம் பூணவேண்டும்.

    வடக்கு, கிழக்கில் யுத்தக் கோரப்பிடிக்குள் சிக்கியிருந்த நாம் இன்று அதிலிருந்து விடுபட்டு சாந்தி சமாதானத்துடன் வாழ்வதற்கான சூழல் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அருமையான சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு நாம் எந்த விதமான பேதமுமின்றி வாழப்பழகிக்கொள்வதன் மூலமே சமூகங்களுக்கிடையே தொடர்ந்து நல்லுறவு நீடிக்கும். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தியாகத் திருநாளின் மகிமையை ஒற்றுமையுடன் காட்டவேண்டும்: கிழக்கு முதலமைச்சர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top