• Latest News

    September 07, 2016

    உள்ளுராட்சி எல்லை நிர்ணயம் தெல்தோட்டைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்

    சமூக அபிவிருத்தி ஒன்றியம் பிரதமர், அமைச்சருக்கு கடிதம்
    உள்ளுராட்சி எல்லை நிர்ணயம் மேற்கொள்ளும் போது தெல்தோட்டை வாழ் சிறுபான்மை மக்களுக்கு பாரிய அநீதி ஏற்படவுள்ளதாகவும் அதனால் இவ்விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தி தெல்தோட்டை சமூக அபிவிருத்தி ஒன்றியம் இரு தரப்புக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளது. 
    சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் உப தலைவர் அப்துல் ரஹீம் நஸார் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 
    அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
    சிங்களம், தமிழ், முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தெல்தோட்டை நகரம் தற்போதுள்ள எல்லை நிர்ணயங்களுக்கு அமைவாக மூவின மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. எனினும், நல்லாட்சி அரசின் ஆலோசனைக்கு அமைய புதிய எல்லை நிர்ணயம் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
    இக்குழு பரிந்துரை செய்யும் யோசனைக்கு அமைய அங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபையில் 23 உறுப்பினர்கள் இருந்தனர். அதில் 3 முஸ்லிம்கள், 2 தமிழர்கள் உள்ளடங்களாக 5 சிறுபான்மை பிரதிநிதித்துவம் அங்கு இருந்தது. ஆனால், புதிய எல்லை நிர்ணயத்தின்படி உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படுமாயின் பாத்த ஹேவாஹெட்ட தொகுதியில் ஒரு சிறுபான்மை பிரதிநித்துவத்தையாவது பெற்றுக் கொள்வது சிரமமாக அமையும். 
    எனவே, எல்லை நிர்ணயம் மேற்கொள்வதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. ஆனால், அது சிறுபான்மை சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படும் விதத்தில் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பினை தெரிவிப்போம். ஆகவே, பிரதமர் மற்றும் இதனுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் - என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உள்ளுராட்சி எல்லை நிர்ணயம் தெல்தோட்டைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top