• Latest News

    September 07, 2016

    அறியாமை - உருவகக் கதை

    எஸ்.முத்துமீரான்.-
    குளிர் காற்று வீசிக் கொண்டிருக்க, இளம் இரவை சின்ன நிலா பார்த்து, சிரித்துக் கொண்டிருந்தது. காலையில் வயலில் விதைப்பதற்கு உரிய முளைச் சாக்குகளையும், சாமான்களையும் ஏற்றிய வண்டியொன்று பாதையை விழுங்கிக் கொண்டு, அமைதியாகத் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. வண்டியின் கீழே அவனது வளர்ப்பு நாய் வண்டியை அதுவே பெருமையோடு சுமர்ந்து செல்வது போல் நினைத்து நாக்கில் உமிழ்நீர் வடிய பெருமையோடு போய்க் கொண்டிருந்தது.

    இறுமாப்போடு போய்க் கொண்டிருக்கும் நாயின் அகங்காரத்தையும், பெருமையையும் சகிக்க முடியாத, வண்டிலின் கீழே கட்டியிருந்த அரிக்கன் லாம்பு எரிச்சலோடு பார்த்து சிரித்தது. லாம்பின் சிரிப்பை பொறுக்க முடியாத நாய் 'அற்ப லாம்பே என்ன சிரிக்கிறாய்?' என்று கோபத்துடன் கேட்டது. நாயின் வீணான வம்பை கணக்கில் எடுக்காத லாம்பு மீண்டும் சிரித்து விட்டு அமைதியானது. லாம்பின் அமைதியையும், அதன் அலட்சியத்தையும் கணக்கிலெடுக்காத தன்மையையும் பார்த்த நாய், 'என்னுடைய சக்தியையும் திறமையையும், மகிமையையும் புரியாமல் சிரிக்கும்உன்னையும் உன்னுடைய போக்கையும் பார்த்து எனக்கு சிரிப்புத்தான் வருகிறது.' என்றது.

    மேலும் நாய் வெறுப்பால் சினங்கொண்டு 'நீயொரு, அறிவில்லாத 'அறியாமையினால் அலட்டிக்கொள்ளும் அற்ப லாம்பு மரியாதையாக இரி. நாயே!. நான் இல்லா விட்டால் இந்த வண்டிலுக்கும், உனக்கும் வழியே தெரியாது. தடுமாறி போவீர்கள். என் வெளிச்சத்தின் துணையோடு தான் நீங்கள் உங்கள் பிராணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து உளறாமல் அமைதியாக வா' என்றது லாம்பு. மீண்டும் சிரித்தது. லாம்பின் உபதேசத்தைப் பார்த்து நாயின் கோபம் அதன் சென்னியைத் தாண்டியது. மறுகணம் லாம்பை முறைத்து பார்த்து மீண்டும் நாய் கூறியது. 'அறிவில்லாத ஜடமே!.. இந்த வண்டியையும் உன்னையும் சுமந்து வருபவன் நான் தான். நான் இல்லா விட்டால் நீங்கள் எவருமே எங்கும் பிரயாணம் செய்யமுடியாது போவீர்கள். உங்களை நான் கஷ்டப்பட்டு சுமந்து வராவிட்டால் உங்கள் நிலைமை என்னவாகும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நான் தான் உங்களையெல்லாம் சுமப்பவன். உங்கள் எல்லோருக்கும் மேலானவன். உங்களின் வாழ்விற்காகவும், உங்களின் உயர்ச்சிக்காகவும் நான் எதையும் உங்களிடம் எதிர் பாராமல் உழைப்பவன். நான் உங்களை சுமந்து வராவிட்டால் உங்கள் வண்டியே நகராது. நான் நடந்தால்தான் உங்கள் வண்டி நகரும். என்று கூறிய நாய் வண்டியின் கீழே பெருமையோடு நடந்து கொண்டிருந்தது. எதையும் கணக்கில் எடுக்காமல் அமைதியாய் போய்க்கொண்டிருந்த வண்டி, லாம்பையும், நாயையும் அவைகள் பேசிக் கொண்டிருந்ததையும் பார்த்துப் புன்னகைத்த படி போய்க் கொண்டிருந்தது.

    கருணையே வடிவான இறைவன் காலத்தை கணக்கிட்டுக் கொண்டிருந்தான். விரல் நொடிக்கும் நேரம், வண்டியின் கீழே நடந்து கொண்டிருந்த நாய், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மரமோன்றின் அடியில் போய் காலைக் கிழப்பி சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தது. அங்கே எதையும் கணக்கிலேடுக்காமல் வண்டில் அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது. அறிவின் ஆளுமையான ஆண்டவன் அண்டத்தை ஆட்டி அசைத்துக் கொண்டிருக்கிறான்.

    பாவம்! அறியாமையினால் தன்னை மறந்து பேசிய நாய், நாக்கில் உமிழ்நீர் வடிய அமைதியாகப் போய்க் கொண்டிருக்கும் வண்டிலின் தயவை நாடி ஓடிக் கொண்டிருந்தது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அறியாமை - உருவகக் கதை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top