இலங்கையில் புதிய அரசியலமைப்பு தமிழ், சிங்கள, முஸ்லிம் என சகல
இனங்களையும் சார்ந்து மக்கள் ஏற்றுக் கொள்ள கூடியதாகவே அமையும் என ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதற்கு இனவாதிகள் பல
விமர்சனங்களை, கேலிகளை கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த நாட்டில்
மீண்டும் ஒரு தடவை இரத்த ஆறு ஓடாது. ஓடுவதற்கு அனுமதிக்கப்படவும் மாட்டாது
எனவும் கூறியுள்ளார்.
யாழ். கீரிமலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட 100 வீட்டு திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“என்னை
தெரிவு செய்வதற்காக மக்கள் என்ன நம்பிக்கையுடன் வாக்களித்தார்களோ அந்த
நம்பிக்கையை நான் நிச்சயமாக காப்பாற்றுவேன். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை
சேனாதிராஜா கூறினார் தமிழ் மக்கள் எந்த உடனபடிக்கையும் இல்லாமல் எனக்கு
வாக்களித்ததாக.
நான் கூறவிரும்புகிறேன். எழுத்துக்களில்
உருவாக்கப்படும் உடனடிபடிக்கையை விட மனசாட்சியினால் உருவாக்கப்படும்
உடன்படிக்கையே உயர்வானது. அவ்வாறே ஒரு நல்லிணக்கத்தையும் மனசாட்சியினால்
உருவாக்க வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை உண்டாக்க
முயற்சிக்கிறோம்.
ஆனால் பல விமர்சனங்கள் கூறப்படுகின்றது. பௌத்தத்தை
முக்கியத்துவமிழக்க செய்கிறோம். நாட்டை பிரிக்க நினைக்கிறோம். என்றெல்லாம்
கூறப்படுகின்றது. அவ்வாறான விமர்சனங்களை நான் நிராகரிக்கின்றேன். இது
கேலிக்குரிய விடமல்ல.
எமக்கு இந்த விடயத்தில் 50, 60 வருடங்கள்
அனுபவம் இருக்கின்றது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்படும். இந்த நாட்டில் மீண்டும் இரத்த
ஆறு ஓடுவதற்கு இடமளிக்கப்படாது. நாம் அரசாங்கம் என்ற வகையில்
பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறோம்.
இங்கே சமாதானத்தை குழப்புவதற்கு
பலர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனை நாங்கள் பாதுகாக்க
வேண்டும். பலப்படுத்தவேண்டும். இந்த நாடு அனைவருக்கும் உரித்தானது.
அனைவருக்கும் உரிமைகள், நன்மை கள் சமமாக கிடைக்கும். அதனை நாங்கள்
நிறைவேற்றுவோம்.
இந்த நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும்,
மேலும், பொருளாதார ரீதியாக மக்களை பலப்படுத்த வேண்டும். இந்த இரு விடயங்களை
நாங்கள் வெற்றிகொள்ள வேண்டியதாக இருக்கின்றது. பொருளாதார ரீதியாக
முன்னேற்றத்தை காண வெளிநாட்டு உதவிகள், கடன்கள் அதிகளவில் கிடைக்கின்றது.
வடகிழக்கு
மாகாணங்களில் மட்டுமல்லாமல் இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் பொருளாதார
முன்னேற்றத்தை உண்டாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. 2017ஆம் ஆண்டில்
வறுமையை ஒழித்த நாடாக இலங்கை இருக்கவேண்டும்.
மேலும் இங்கே படையினர் 100 வீடுகளை அமைத்து
கொடுத்திருக்கின்றார்கள். வடக்கில் இதனை விடவும் பல ஆயிரம் வீடுகளை
படையினரும், தனியாரும் இணைந்து செய்யவுள்ளனர். அதற்கான ஒரு கட்டமாகவே இந்த
வீட்டுதிட்டம் அமைந்துள்ளது.
நல்லிணக்கபுரம் என்ற பெயரில் இந்த
வீட்டுத்திட்டம் நல்லிணக்கத்திற்கான பங்காக அமைந்திருக்கின்றது. இதற்காக
உழைத்த படையினரின் பொறியியல் பிரிவினர் மற்றும் யாழ். பாதுகாப்பு படைகளின்
கட்டளை தளபதி ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
சிநேகபூர்வமான
கடமையை செய்ய வேண்டிய முப்படையினரும், பொலிஸாரும் அதனை சரியாக செய்வார்கள்
என நம்புகிறேன். இதேபோல் இன்றைய தினம் 550 ஏக்கர் காணியை
மீள்குடியேற்றத்திற்காக அரசாங்க அதிபரிடம் கையளித்திருக்கிறேன்.
தொடர்ந்தும் கையளிப்பேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

0 comments:
Post a Comment