• Latest News

    May 19, 2019

    கொதிநிலை அரசியல்

    சஹாப்தீன் -
    பௌத்த இனவாதிகளுக்கு முஸ்லிம்களின் மீதான காழ்ப்புணர்ச்சி அநாகரிக்க தர்மபாலவின் காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், பள்ளிவாசல்களையும் அழிப்பதே இந்த இனவாதிகளின் நிலையான கொள்கையாகும். இதனால்தான், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் காலத்திற்கு காலம் திட்டமிட்டு, ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒரு சிலரின் உதவியோடு முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களையும், வீடுகளையும், வாகனங்களையும், பள்ளிவாசல்களையும் உடைத்து, தீயிட்டு கொளுத்திக் கொண்டு வருகின்றார்கள். இத்தகைய இனரீதியான வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்களின் மீது ஆட்சியாளர்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, அவர்களை போஷித்து தங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் திங்கட்கிழமை (13.05.2019) முஸ்லிம்களின் மீது பல இடங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளார்கள். முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதனை பொறுமை என்ற சொல்லால் எத்தனை நாட்களுக்கு கட்டுப்படுத்த முடியுமென்ற கவலைகளும் பலருக்கு ஏற்பட்டுள்ளன. 

    ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை தாக்குதல்களினால் நாடு மிக மோசமான நிலையை அடைந்தது. இந்த பயங்கரவாதத்தை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டுமென்று பாதுகாப்பு தரப்பினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்நடவடிக்கைகளுக்குமுஸ்லிம்கள் அதிக அக்கறையுடன் துணையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் மிகவும் துல்லியமாக திட்டமிட்டு முஸ்லிம் கிராமங்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளார்கள். 48 மணித்தியாலங்களில் 30 முஸ்லிம் கிராமங்களின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களினால் முஸ்லிம்களின் சுமார் 20இற்கும் குறையாத பள்ளிவாசல்களும், சுமார் 500 வீடுகளும், 100இற்கும் மேற்பட்ட கடைகளும் மற்றும் வாகனங்கள் பலவும் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளார்கள். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும், பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையிலுமே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டள்ளன. முஸ்லிம்களின் மீது இவ்வாறு திட்டமிட்டு தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலமாக பயங்கரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற கவலை நேர்மையாக சிந்திக்கின்றவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது தாக்குதல்கள் நடைபெற்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் மாத்திரமே சட்டத்திற்கு கட்டுப்பட்டு இருந்தார்கள். ஆனால், சிங்களவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு வீதிக்கு இறங்கி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள். பாதுகாப்பு தரப்பினர் இவர்களை கட்டுப்படுத்தி இருந்தால், சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களின் அளவை மிகக் கூடுதலாகக் குறைத்திருக்கலாம் என்று அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

    தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் மிகக் கூடுதலானவர்கள் வெளிப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றன. அவர்கள் பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் வருகை தந்தே தாக்கியதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள். ஊரடங்குச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி இருந்தால் எவ்வாறு தாக்குதல்தாரிகள் வாகனங்களில் வந்திருக்க முடியாது. இதே வேளை, தாக்குதல்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் ஆதரவாக செயற்பட்டுள்ளார்களா என்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 

    ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை தாக்குதல்களுக்கும் முஸ்லிம்களின் மீது இம்மாதம் 13ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் முடிச்சுப் போட சிலர் நினைக்கின்றார்கள். கடந்த காலங்களில் இது போன்ற பல தாக்குதல்களை பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களின் மீது மேற்கொண்டுள்ளார்கள். அப்போது முஸ்லிம்களைச் சேர்ந்த எந்தவொரு தனிநபரும் சிறியதொரு குண்டுத் தாக்குதலைத்தானும் நடத்தவில்லை என்பது கவனத்திற்குரியதாகும். 

    தமிழர்களின் உரிமைக்குரலை அடக்குவதற்கு கையாண்ட வழி முறைகளையே முஸ்லிம்களையும் அடக்குவதற்கும், முஸ்லிம்களின் பொருளாதாரம், கலாசாரம் உள்ளிட்டவையை சீரழிப்பதற்கும் பௌத்த இனவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு எல்லா பேரினவாதக் கட்சிகளிலும் உள்ள பௌத்த இனவாத அரசியல்வாதிகள் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

    திங்கட்கிழமை குளியாப்பிட்டி, நிக்கவரட்டிய, மினுவாங்கொடை உள்ளிட்ட முஸ்லிம்களின் 30 கிராமங்களில் பௌத்த இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றார்கள். வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல்வாதிகளும், அந்தந்த பிரதேச சபை உறுப்பினாகளும் இருப்பதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்று பேராயர் கர்தினால் வெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஆகவே, முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் அரசியல் நோக்கத்தையுடையது. நாட்டில் இனங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடிக் கொள்வதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம்களின் பொருளாதாரம், உயிர்கள், ஆகியவற்றை இலக்கு வைக்கும் அரசியல்வாதிகளை மக்கள் அடையாளங் காண வேண்டியுள்ளது. இத்தகையவர்கள் உள்ளவரை இலங்கை ஒரு போதும் சமாதானம், சகவாழ்வு, சுவிட்சம் ஆகியவற்றை அடைந்து கொள்ளாது.

    குளியாப்பிட்டிய பிரதேசத்தில் முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்து சேதப்படுத்திய 04 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர். கடும் அரசியல் அழுத்தத்தைப் பிரயோகித்து குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான தயாசிறி ஜயசேகர கைது செய்யப்பட்ட 04 பேரையும் பிணையில் விடுவித்து தனது வாகனத்தில் அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மறுத்துள்ளார்;. அவர்களை பொலிஸாரே விடுவித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

    பௌத்த இனவாதிகள் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களையும், பெற்றோலையும் பயன்டுத்தியே தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் பிரதேசங்களில் பொலிஸார் மற்றும் படையினர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு  வாள், கத்தி போன்ற ஆயுதங்களை கைப்பற்றியது போன்று சிங்கள பிரதேசங்களிலும் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இத்தகைய ஆயுதங்களை கைப்பற்ற வேண்டும். இல்லையாயின்  முஸ்லிம்களை தாக்குவதற்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மீண்டுமொரு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. ஏனெனில், முஸ்லிம்களின் மீது ஏற்கனவே அளுத்கம, பேருவளை, தர்காநகர், கிந்தோட்டை, அம்பாரை, திகன, கண்டி ஆகிய இடங்களிலும், வேறு சில இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது வாள், கத்தி போன்ற ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டுள்ளமையை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளின் மூலமாக பார்க்கக் கூடியதாக இருந்தது.

    இதே வேளை, சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி ஜனாதிபதியிடம் இருப்பது அரசியல் யாப்புக்கு முரணானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த அமைச்சின் நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டிருந்தால் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றிருக்காது என்று ஆளுங் கட்சியினர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், யார் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் முஸ்லிம்களின் மீதான இனவாத தாக்குதல்களை தடுத்திருக்க முடியாதென்பதே முஸ்லிம்களின் அபிப்ராயமாகும். ஏனெனில், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கொள்கையைக் கொண்ட விஷமிகளை அரசியல்வாதிகளே பாலூட்டி வளர்த்தவர்கள். இந்த விஷமிகள் ஒரு சில அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றார்கள்.

    தற்போது முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது சட்டம், ஒழுங்கு அமைச்சராக ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன இருக்கின்றார். ஆதலால், முஸ்லிம்களின் பாதுகாப்பை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை என்ப

    நாட்டின் நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரு வேறு திசைகளில் தமது அரசியலை அடிப்படையாகக் கொண்டு கயிறு இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை தாக்குதல்கள் பற்றி புலனாய்வுத் துறை முன் கூட்டியே எச்சரிக்கை செய்துள்ளது. ஆனால், நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனைப் போலவே,  முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களும் திடீரென இடம்பெறவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் இடம்பெறலாம் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் காணப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவிற்கான ஆராய்ச்சியாளர் தயாகி ருவன்பத்திரன தெரிவித்துள்ளார். ஆதலால், அதிகாரிகள் ஆபத்துக்கள் குறித்து முன்கூட்டியே வெளியான தகவல்களை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, தாக்குதல்கள் பற்றி அரசாங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும் முன் கூட்டியே தெரியவருகின்றன. ஆனால், நடவடிக்கைகள்தான் எடுக்கப்படுவதில்லை. இத்தாக்குதல்கள் நடைபெறும் என்று பொது மக்களுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அவர்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பார்கள். 

    இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தியே இலங்கையின் அரசியல் செயற்பாடுகளை பேரினவாதிகள் மேற்கொண்டு வந்துள்ளார்கள். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை முன் வைத்து அரசியலை மேற்கொள்ள முடியாததொரு அரசியல் சூழல் ஏற்பட்டது. இதனால், பௌத்த கடும் போக்குவாதிகளின் துணையோடு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை முன் வைத்து அரசியலை முன்னெடுக்கத் தொடங்கினார்கள். அதன் நீட்சியே திங்கட்கிழமை முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகும். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடந்தாலும் அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக ஒரு மறைமுக நிழல் யுத்தத்தை மேற்கொண்டு வந்தது. தமிழர்களிடையே புதிய அரசியல் யாப்பு, சுயநிர்ணய உரிமை போன்ற கதைகளைக் கூறி நம்பிக்கையூட்டி ஏமாற்றிக் கொண்டு வந்துள்ளனர். தற்போது நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம் உள்ளதென்று தெரிவித்து தமிழர்களிடையே வளர்க்கப்பட்ட நம்பிக்கைகளை ஸ்தம்பிதம் அடையச் செய்துள்ளார்கள். இந்நிலை விரைவில் முடிவுக்கு வருமா அல்லது நீடிக்குமா என்று உறுதியாகக் கூற முடியாது. இதே வேளை, யுத்தம் முடிவடைந்த 2009ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிமக்ளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை அரசாங்கத்தின் அனுசரணையுடன் பௌத்த இனவாதிகளும், அமைப்புக்களும் மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆதலால், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான அரசியலை நுணுக்கமான முறையில்  பௌத்த பேரினவாதம் மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இதே வேளை, நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் ஊடுவியுள்ளதால் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள் பயங்கரவாதிகளுக்கே சாதகமா அமைந்துவிடுமென்று பலரும் அச்சங் கொண்டுள்ளார்கள். தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னர் நாட்டில் இனவாத மோதல்கள் ஏற்படலாமென்று எதிர்பார்த்திருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. இந்நிலையில்தான் முஸ்லிம்களின் மீது திட்டமிட்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள். இத்தாக்குதல்தாரிகளின் நோக்கம் இனங்களுக்கு இடையே மோதல்களை ஏற்படுத்துவதாகும். கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல தாக்குதல்களை பௌத்த இனவாதிகளும், அமைப்புக்களும் மேற்கொண்ட போதிலும் முஸ்லிம்கள் பொறுமையாகவே இருந்தார்கள். இதனால், பௌத்த இனவாதிகளும், அமைப்புக்களும் தமது நோக்கத்தில் தோல்வி கண்டுள்ளனர். ஆகவே, இனங்களுக்கு இடையே மோதல்களை ஏற்படுத்த வேண்டுமென்று நாசகாரச் செயல்களை மேற்கொள்கின்ற பௌத்த இனவாதிகளும், அமைப்புக்களும் அவர்களுக்கு துணையாகச் செயற்படுகின்றவர்களும் பயங்கரவாதிகளேயாவார்கள். அதனால், இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படாதென்பதே கடந்த கால அனுபவமாகும். 

    இதே வேளை தாக்குதல்களை பலரும் கண்டித்துள்ளார்கள். வன்முறையாகச் செயற்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ்இன் நோக்கத்தை நிறைவேற்ற இடமளிக்கக் கூடாதென அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். முட்டாள்தனமான வன்முறைகள் பயங்கரவாதிகளுக்கே சாதகமாக அமைந்துவிடும் என்று ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்களான சனத் ஜயசூரிய, சங்கக்கார, தற்போதைய தலைவர் தலைவர் திமுத் கருணாரத்ன ஆகியோர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்துள்ளார்கள். 

    கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நடத்தியவர்களே திங்கட்கிழமை 13ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்களையும் வழி நடத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்  டான் பிரசாந்த, நாமல் குமார, அமீத் வீரசிங்க ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் நாட்டிற்கு இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது. இவர்களை கைது செய்வதென்பது முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் என்பதே கசப்பான உண்மையாகும். ஆதலால், அரசாங்கமும், அரசியல்வாதிகளும் தனிப்பட்ட மற்றும் கட்சி சார்ந்த அரசியலை விடவும் நாட்டை நேசிக்கும் தன்மையை வளர்க்க வேண்டும். இன்று அதிகமான அரசியல்வாதிகளிடம் நாட்டுப்பற்று என்பது வெறும் வார்த்தைகளில் மட்டுமே உள்ளன. அவர்கள் தங்களின் அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்காக நாட்டை இனரீதியான கொதிநிலையில் வைத்துக் கொள்வதற்கே திட்டங்களை வகுத்துச் செயற்படுகின்றார்கள்.
    வீரகேசாி 19.05.2019
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொதிநிலை அரசியல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top