• Latest News

    September 12, 2019

    கல்வியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்களின் நியமனம் பிரமாணக் குறிப்புக்கு முரணானது - இலங்கை ஆசிாியர் சங்கம்

    கல்வியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்களின் நியமிப்பு ஆட்சேர்ப்பானது பிரமாணக் குறிப்புகளுக்கு முரணானது எனவும் பிரதேச செயலாளர் பிரிவில் நிலவும் வெற்றிடங்களுக்கேற்ப அவர்களை நியமிக்கவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கல்வியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் நியமனம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
    மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
    கல்வியல் கல்லூரிகளிலிருந்து வெளியேறிய டிப்ளோமா ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பிற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி பத்திரிகைக்கு முரணாக குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் நிலவும் வெற்றிடத்திற்கு முரணாக நியமனம் செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. 2015 மே மாதம் 8ஆம் திகதி 1914 இலக்கமிடப்பட்ட வர்த்தமானிப் பத்திரிகையின் உப பிரிவு 6.1.1இற்கு ஏற்ப 2014 மற்றும் 2015ஆம் ஆண்டு உள்ளீர்க்கப்படுவதற்கான அடிப்படையாக குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்தை அடிப்படையாகக் கொண்ட இஸட் புள்ளி அடிப்படையில் இக்கல்லூரி ஆசிரியர்கள் கல்வியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.
    வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்த 4286 ஆசிரியர்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் தேசிய பாடசாலைகளுக்கு நியமிப்பு செய்யப்பட்டுள்ளார்கள். இது இலங்கை அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கையை மீறும் செயலாகும். பிள்ளையின் கல்வி உரிமைக்கான சவாலாக அமைந்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கல்வி மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்துள்ளதுடன் இம்மாகாணங்களில் பெரும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது.
    மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு (கல்குடா கல்வி வலயம்), ஏறாவூர்ப் பற்று (மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்) மற்றும் திருக்கோவில், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் சில பகுதிகளில் பெரும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதோடு தூரப் பிரதேச ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு மத்தியில் அர்ப்பணிப்பான சேவையில் உள்ளார்கள். இதனைக் கருத்திற்கொள்ளாத கல்வி அமைச்சு தான்தோன்றித்தனமாக வெளிமாவட்டங்களுக்கும், தேசிய பாடசாலைகளுக்கும் நியமிப்புக்களை வழங்கியுள்ளது.
    தேசிய கல்விக் கொள்கைகளுக்கும் தேசிய கல்வி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கும் முரணாக செயற்படும் கல்வி அமைச்சின் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை பலதடவைகள் சுட்டிக்காட்டியும் அமைச்சு கவனத்தில் கொள்ளவில்லை.
    கல்வியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்களின் நியமிப்பு 1589/30 அதிவிஷேட வர்த்தமானியின் ஆட்சேர்ப்பு பிரமாண குறிப்புகளுக்கும், தாபன விதிக் கோவைகளின் சட்ட விதிகளுக்கு முரணாக அமைந்துள்ளமையால் ஆசிரியர்களின் நியமிப்பு தொடர்பாக குறிக்கப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவில் நிலவும் வெற்றிடத்தை கவனத்தில் எடுத்தல் வேண்டும்.
    அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாகாண கல்வி அமைச்சின் அதிகாரங்களை கவனத்தில்கொள்ளாத மத்திய அரசு எவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கூடிய அதிகாரம் வழங்கும்? என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்வியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்களின் நியமனம் பிரமாணக் குறிப்புக்கு முரணானது - இலங்கை ஆசிாியர் சங்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top