• Latest News

    September 21, 2019

    சஹ்ரானின் குழுவுக்கு மஹிந்த அரசாங்கம் நிதி வழங்கியுள்ளது - பிரதி அமைச்சர் நளின் பண்டார

    (நா.தனுஜா)
    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளான சஹ்ரான் ஹாசீமின் குழுவினருக்கு தமது அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அவருடைய கருத்து தொடர்பில் குற்றவிசாரணைப் பிரிவினரால் விரைவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
    இதுதொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இன்று கொழும்பிலுள்ள அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
    அண்மையில் தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்துகொண்டிருந்த கெஹெலிய ரம்புக்வெல கடந்த காலத்தில் புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக சஹ்ரான் ஹாசீம் குழுவினருக்கு ஊதியம் வழங்கியதாக ஏற்றுக்கொண்டிருந்தார். 
    சஹ்ரானின் குழு 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலப்பகுதியிலேயே உருவானது. அதேபோன்று மஹிந்த அரசாங்கத்தினால் 2010 – 2015 வரையான காலப்பகுதியிலேயே அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டில் யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுவிட்ட ஒரு சூழ்நிலையில் புலனாய்வுத்தகவல்களைப் பெறுவதற்காக அவர்களுக்கு ஊதியம் வழங்கியதாகக் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. அதேபோன்று இக்கருத்தை நியாயப்படுத்துவதற்காக தமது அரசாங்கம் பொட்டம்மானுக்கும் நிதியளித்ததாக கெஹெலிய கூறியிருக்கிறார். 
    இந்தக் கருத்து பெரும் சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது. கடந்த அரசாங்கம் சஹ்ரானின் குழுவை இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தியிருக்கிறது. அதன்மூலம் தமது அரசியல் நலனை மையப்படுத்திய நோக்கங்களை நிறைவுசெய்து கொண்டிருக்கிறது. 
    எனவே எதற்காக அவர்கள் பொட்டம்மானுக்கு நிதி வழங்கினார்கள், எதற்கான சஹ்ரானுக்கு ஊதியம் வழங்கினார்கள் என்ற விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சஹ்ரானின் குழுவுக்கு மஹிந்த அரசாங்கம் நிதி வழங்கியுள்ளது - பிரதி அமைச்சர் நளின் பண்டார Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top