(ஆர்.யசி)
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின்
செயற்குழு கூடியே தீர்மானம் எடுக்கும். அதேபோல் அடுத்த வாரம்
நிறைவடைவதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்
அறிவிக்கப்படுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகில
விராஜ் காரியவசம் தெரிவித்தார். எதிர்வரும் சில தினங்களில் ஐக்கிய தேசிய
முன்னணியின் பொதுக் கூட்டணியை அமைக்கும் சகல தீர்மானங்களும் எட்டப்படும்
எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின்
பங்காளிக்கட்சிகள் இன்று பிற்பகல் அலரிமாளிகையில் முக்கிய சந்திப்பொன்றில்
ஈடுபட்டனர். இந்த சந்து குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஏனைய பங்காளிக் கட்சிகளை
இணைந்துக்கொண்டு எமது ஆதரவு தெரிவிக்க விரும்பும் சகல தரப்பையும் இணைந்து
பரந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற முக்கிய கலந்துரையாடல்
இடம்பெற்றது.
இதற்கு சகலரதும் ஒத்துழைப்புகள் கிடைத்தன. ஆகவே அடுத்த சில
தினங்களுக்குள் சகல தரப்புடனும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி பரந்த
கூட்டணியை அமைக்கும் சகல நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். இப்போதே பல
கட்சிகள் அமைப்புகள் சிவில் அமைப்புகள் எம்முடன் இணைந்து பயணிக்க இணக்கம்
தெரிவித்துள்ளனர். நல்லாட்சி பக்கம் நின்ற அனைவரதும் ஆதரவு எமக்கு இம்முறை
கிடைக்கும். ஆகவே அதனை மேலும் பலப்படுத்தி பரந்த கூட்டணியாக எவ்வாறு
பயணிப்பது என்ற விடயமே பேசப்பட்டது.
அதேபோல் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானம்
கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். கட்சியின் தலைவர்
உபதலைவர்கள் மற்றும் பங்காளிக்கட்சிகளின் பூரண ஒத்துழைப்பில் இந்த
நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும். எவ்வாறு இருப்பினும் அடுத்த வாரம்
முடிவடைய முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற
இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
Kesari -
0 comments:
Post a Comment