• Latest News

    January 31, 2020

    முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறினார் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மாஹிர். கட்சியின் அனைத்து அதிகாரங்களும் தனிநபருக்கு வழக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றார்.

    சஹாப்தீன் –
    முஸ்லிம் காங்கிரஸின் தலைமையினாலும், பிரதேச பாராளுமன்ற உறுப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கழுத்தறுப்புக்களினால்தான் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறியுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினருமான எம்.ஐ.மாஹிர் தெரிவித்தார்.

    முஸ்லிம் காங்கிரஸில் இருந்து தாம் விலகியுள்ளதாக நேற்று முன் தினம் சம்மாந்துறையில் தமது ஆதரவாளர்களிடம் அவர் தெரிவித்து இருந்தார். இது குறித்து நாம் அவரிடம் கேட்ட போது, தாம் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகியுள்ளமையை உறுதிப்படுத்தினார். அத்தோடு, கட்சியின் தலைமையும், பிரதேசத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரதும் கழுத்தறுப்புக்களினாலுமே தாம் முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகியுள்ளதாகவும் தெரிவித்தார். 

    அவர் மேலும் தேரிவிக்கையில்,
    கட்சியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்பது கடந்த ஐந்து வருடங்களாக அவதானித்தவற்றின் இறுதி முடிவாகும். கடந்து ஐந்து வருடங்களாக எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரசியல் ரீதியான புறக்கணிப்புக்களை பொறுமையுடன் சகித்துக் கொண்டுதான் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு உழைத்து வந்தேன். ஆதலால், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகியுள்ளமை தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைமைகளினால் என்று யாரும் கருதிக் கொள்ள வேண்டாம். 

    சம்மாந்துறையில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும், சுகாதார அமைச்சராக எம்.ஐ.எம்.மன்சூர் இருந்தார். இந்நிலையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட வேண்டுமென்று கேட்டிருந்தேன். அதனையும் மறுத்தார்கள். அந்த வாய்ப்பு மன்சூருக்கு வழங்கப்பட்டது. தேர்தலில் மன்சூர் வெற்றி பெற்றார். இதனால், அவர் வகித்த கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் பதவி சம்மாந்துறை மண்ணுக்காக வழங்கப்பட்டதேயன்றி, தனிநபருக்காக வழங்கப்பட்டதல்ல. அதனால், அந்த அமைச்சர் பதவியை சம்மாந்துறையை சேர்ந்த எனக்கு தருமாறு கேட்டேன். அதனையும் தர மறுத்துவிட்டார்கள்.

    சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலின் போது என்னை முதன்மை வேட்பாளராக அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அதனைக் கூட கட்சியின் தலைமை செய்யவில்லை. நான் எவ்வித்திலும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாதென்பதில் சம்மாந்துறையின் அரசியல்வாதி குறியாகவே இருந்தார். அவரின் சொல்லுக்கே கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்பட்டார். அதே வேளை, கட்சியின் அனைத்து அதிகாரங்களையும் அந்த தனிநபருக்கே தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருக்கின்றார். 

    இவ்வாறு கட்சியின் அனைத்து அதிகாரத்தையும் தன்னிம் வைத்துக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது, அந்த அமைச்சின் மூலமாக ஒரு சதக் காசைக் கூட சம்மாந்துறையின் அபிவிருத்திக்கு கொண்டு வரவில்லை. இப்படியாக மற்றவருக்கு எதனையும் கொடுக்கக் கூடாதென்று தடுத்துக் கொண்டிருக்கும் ஒருவராகவும், சம்மாந்துறைக்கு எந்த அபிவிருத்தியையும் கொண்டு வர முடியாதிருக்கும் ஒருவராகவும் உள்ள பாராளுமன்ற உறுப்பினரையும், அவருக்கு துணையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் கட்சியின் தலைமையையும் தொடர்ந்து ஆதரிக்க முடியாதென்பதற்காகவே முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகியுள்ளேன்.

    நான் உருவாக்கிய தலைவர். எனது சொல்லின் படியே நடக்க வேண்டுமென்று அவர் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அதனை தலைவரும் அங்கிகரித்துக் கொண்டிருக்கின்றார். நான் கட்சியிலிருப்பது அவருக்கு தலையிடி என்று கருதியே இப்படி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். 

    ஆதலால், இது போன்ற பல கழுத்தறுப்புக்களை கட்சியின் தலைமையும், பிரதேச பாராளுமன்ற உறுப்பினரும் மேற்கொண்டமையை இனியும் சகித்துக் கொள்ள முடியாதென்ற நோக்கிலேயே கட்சியை விட்டும் விலகியுள்ளேன். அதே வேளை, அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன். அடுத்த கட்ட நடவடிக்கைகயாக எந்தக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. முஸ்லிம் சமூகத்திற்காக தனித்து நின்று போராடக் கூடிய ஏதாவதொரு கட்சியில் இணைந்து செயற்படுவேன் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறினார் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மாஹிர். கட்சியின் அனைத்து அதிகாரங்களும் தனிநபருக்கு வழக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றார். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top