ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தவறான தீர்மானங்கள் இருக்கும் என தான் நம்பவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுபல சேனா அமைப்பை தடை செய்வது மற்றும் தனக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்க பரிந்துரைத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜகிரியவில் உள்ள அமைப்பின் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள ஞானசார தேரர்,
முழு நாட்டுக்கும் ஏற்படப் போகும் அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்கவே பொதுபல சேனா அமைப்பு செயற்பட்டது. ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் அரசியல் தலைவர்கள் உருவாக்கிய சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்படவில்லை.
நடக்கக் கூடாத ஒன்று இங்கு நடந்துள்ளது. எதனையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஏதேனும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தமது எதிர்கால அரசியல் இலாபத்தை பெறும் நோக்கில் இருக்கும் திருடன் எவனும் ஆணைக்குழுவில் நுழைந்து கொண்டானோ தெரியவில்லை.
பலமுறை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சென்று எம்மிடம் இருந்த தகவல்களை வழங்கினோம். பொதுபல சேனா மீது குற்றம் சுமத்த எவராவது முன்வந்தால் அப்போது பார்த்துக்கொள்வோம். இதனை நாங்கள் இலகுவில் கைவிட மாட்டோம் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment