• Latest News

    February 22, 2021

    புதிய அரசியலமைப்பு தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு!

    இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு உகந்த தீர்வைக் காண்பதற்கு வாய்ப்பாக, முன்னர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையின் விதந்துரைகளை முன்னிலைப்படுத்தி புதிய அரசியலமைப்பு விவகாரத்தை கையாள்வது சாலப் பொருத்தமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

    புதிய அரசியலமைப்புக்கான உத்தேச வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமாக கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழைத்திருந்தது. இந்தச் சந்திப்பு சென்ற சனிக்கிழமை (20), கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

    இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது நிபுணர்கள் குழு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றிக் கேட்டறிந்தது.  

    இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படுவதோடு சகல இன மக்களினதும் அபிலாசைகளை நிறைவு செய்யும் வகையில் அதிகாரங்கள் பகிரிந்தளிக்கப்படுதல், நீதித்துறையின் சுயாதீனம் பேணப்படுதலின் அவசியம், நீதி, நிர்வாகத்துறையில் தேவையற்ற தலையீடுகள் இல்லாமல் செயற்படுதல், அனைத்து இனங்களும் சமத்துவமாக மதிக்கப்படுதல், பாதுகாப்பபை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட  விடயங்கள் அனைத்தும் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. 

    அத்துடன், தற்போது உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படும் புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலான கட்சியின் நிலைப்பாடுவெளிப்படுத்தப்பட்டதோடு,நிறைவேற்று ஜனாதிபதி முறைமை பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு இடையூறற்றதாக இருக்க வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது.

    மாகாண சபைகளின் அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.குறிப்பாக, இந்த நாட்டின் புரையோடிய இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம் அஸ்ரப் பெரும் பிரயர்த்தனங்களைச் செய்தபோதிலும்,முழுமையான வெற்றி கிட்டவில்லை எனக் கூறப்பட்டடது.

    இவ்வாறான நிலையில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்~ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்காக சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. அக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் பங்கேற்றிருக்கவில்லை.ஆனால்,ஏனைய அனைத்து தரப்புகளும் பங்குபற்றின.

    பல்வேறுபட்ட கலந்துரையாடல்களை அடுத்து ஈற்றில் சர்வ கட்சி குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதில் நாட்டின் தன்மை ஒற்றையாட்சி என்றோ அல்லது வேறு வடிவத்திலோ இருக்கவில்லை. அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் அதற்கான முறைமைகள் தொடர்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.  

    சுமார் இரண்டரை வருடங்களாக இந்த சர்வகட்சிக்குழுவின் அமர்வுகள் நடைபெற்ற நிலையில் இறுதி அறிக்கை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்விடத்தில் கையளிக்கப்பட்டது. அதன் பின்னர் மஹிந்த ராஜபக் குறித்த அறிக்கையை கிடப்பில் போட்டுவிட்டார்.  

    அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் செயற்பட்டு வந்த ஆர்.யோகராஜன் எம்.பி.யும் நிஸாம் காரியப்பரும் 2010ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி கொழும்பில் வைத்து அந்த அறிக்கையை பகிரங்கப்படுத்தினர். குறித்த அறிக்கை ஆளும் தரப்பிலுள்ள பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கின்றது.

    இவ்வாறான நிலையில், அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற போது எமது மக்களின் அபிலாஷைகள் பூர்த்தியாகும் என்றே கருதுகின்றோம். அத்துடன் அந்த அறிக்கையில் ஒற்றையாட்சி, கூட்டாட்சி என்ற சர்ச்சைக்குரிய சொற் பிரயோகங்கள் பயன்படுத்தப்படாமல் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

    எனவே, குறித்த அறிக்கையை பின்பற்றும் அதே வேளையில்,அதற்கு பின்னரான காலத்தில் மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை முன்மொழிவுகள் உட்பட் அனைத்து விடயங்களும் புதிய அரசியலமைப்பில் உள் வாங்கப்பட வேண்டும் என்பதே  முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புதிய அரசியலமைப்பு தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top