-சஹாப்தீன் -
‘தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடிய சக்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ’ என்ற முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கணிப்பு பிழைத்துள்ளது. பெரும்பாலும் முஸ்லிம் கட்சிகளின் முடிவுகள் பிழையாகவே இருந்து வருகின்றன. அதற்கு சமூக சிந்தனையில்லாது முடிவுகளை எடுப்பதே காரணமாகும்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது தீர்மானமிக்கும்
சக்தியாக மஹிந்த ராஜபக்ஷவும், பசில் ராஜபக்ஷவும் விளங்கினார்கள். ஆனால்,
அத்தேர்தல்களின் பின்னர் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியலில்
அதிகாரம் மாறும் போது அது பல மாற்றங்களை ஏற்படுத்தும். இதனைப் புரிந்து
கொள்ளாது அரசியலை மேற்கொள்ள முடியாது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடமே அதிகாரம் மையம் உள்ளது. ஆனால், அவருக்கு கட்சி கிடையாது. பொதுஜன பெரமுனவில் அவருக்கு எந்தப் பதவியும் கிடையாது. அவரிடம் “வியத்மக” “எலிய” ஆகிய அமைப்புக்கள் மட்டுமே உள்ளன. அதிலும் வியத்மகவே இயங்கு நிலையில் உள்ளது. இந்த அமைப்புத்தான் ஜனாதிபதியின் அரசியல் நடவடிக்கைகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் உள்ளது. ஆகவே, தீர்மானமிக்க சக்தியாக ஜனாதிபதி கோத்தாயவே உள்ளார். இதற்கு நிறைவேற்று அதிகாரமே பிரதான காரணமாகும்.
பிழையான இடம்
அதிகார மாற்றங்களை கவனத்தில் கொள்ளாது
முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் தான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள்.
கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம்
செய்வதற்கு அனுமதியை பெறுவதற்கு இவர்கள் கவனம் செலுத்தினாலும், அது
இரண்டாம் நிலை தெரிவாகவே இருந்தது. முதல் தெரிவு அரசாங்கத்துடன் இணைந்து
கொள்வதே காணப்பட்டுள்ளது.
இதனால், 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு கையுயர்த்துவதற்கு முன்னதாக கொரோனா தொற்றால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்குரிய அனுமதியை முதலில் பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் விளைந்திருக்கவில்லை. அரசாங்கத்தினருடன் நெருக்கத்தை பேணிக் கொள்ள வேண்டுமென்பதற்காக இவர்கள் தெரிவு செய்த வழியில் தீர்மானமிக்க அதிகாரம் இருக்கவில்லை. இந்நிலையை உருவாக்கியவர்களும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தான்.
ஏனென்றால் 19ஆவது திருத்தச் சட்ட மூலம் ஜனாதிபதிக்கு இருந்த நிறைவேற்று
அதிகாரத்திற்கு மூக்கனாங்கயிறு கட்டியிருந்தது. அக்கயிற்றை அவிழ்த்து
விட்டு முழுமையான அதிகாரங்களை கொண்ட ஜனாதிபதியொருவரை ஆசனத்தில்
அமரவைப்பதற்காக கொண்டவரப்பட்டது தான் 20 ஆவது திருத்தச் சட்டமூலம்.
அதன் ஊடாக, பிரதமருக்கும், பாராளுமன்றத்திற்கும் இருந்த அதிகாரங்களை மீண்டும் ஜனாதிபதிக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம் பிரதிநிதிகள் கையுயர்த்திவிட்டு, தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று பிரதமரையே நம்பியிருந்திருக்கின்றார்கள். 20ஆவது திருத்தச் சட்ட மூலம் எத்தகைய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கப் போகின்றது. பிரதமரின் அதிகார கொம்மை எந்தளவுக்கு முறிக்கும் என்றெல்லாம் தெளிவாக புரிந்து கொள்ளாது. முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பிரதமருடன் பேசியுள்ளோம். ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி கிடைக்குமென்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஈற்றில் ஏமாற்றமே எஞ்சியிருக்கின்றது.
கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்தராஜபக்ஷ ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதிக்கப்படும் என்ற போது, அன்றைய தினம் பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக பிரதமருடன் ஜனாஸா அடக்கம் குறித்து பேசியதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பகிரங்கமாக கூறினார்.
11ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பை ஆளுந்தரப்பைச் சேர்ந்த இரண்டு பெண் பிரதிநிதிகள் கேள்விக்குட்படுத்தினார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் கோகிலா குணவர்த்தன, “பிரதமர் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை” என்றார். கொரோனா தடுப்புக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, “பிரதமர் அதனை தீர்மானிக்க முடியாது. சுகாதார அமைச்சின் நிபுணர் குழுதான் தீர்மானிக்க வேண்டும். சுகாதார அமைச்சரே இறுதி முடிவு எடுப்பார்” என்றார்.
ஆகவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பையே செல்லுபடியாகாது என்று ஆளுந் தரப்பினரே மறுக்கின்றார்கள் என்றால், அவர்களின் பின்னணியில் பிரதமரை விடவும் சக்தி வாய்ந்த ‘அதிகார மையம்’ இல்லாமல் இருக்க முடியாது. அதனால் தான், பிரதமரின் அறிவிப்பையே கேள்விக்குட்படுத்தும் தைரியம் ஆளும் தரப்புக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. இந்தப் சம்பவத்தின் மூலமாக முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிழையான இடத்தில் நின்று கொண்டு நல்லது நடக்கும் என்றும், 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியதன் நோக்கம் நிறைவேறியுள்ளதென்றும் அறிக்கைவிட்டு ஏமாந்த சோணகிரிகளாகியுள்ளனர்.
இதனால் ஏமாந்து போவதனையே ஒரு கொள்கையாக முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்வி தான் இங்கு எழுகின்றது. மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுநலம் குறைந்து சுயநலம் மிகையாகும் போது ஏமாந்து போதல் தவிர்க்க முடியாத விடயமாகின்றது. சமூகத்தை ஏமாற்றப் பழகியவர்களுக்கு ‘அறம்’ தன் கடமையைச் செய்கின்றது என்ற கொள்ள வேண்டியும் இருக்கின்றது.
சுட்டி சுட்டதடா கைவிட்ட தடா
ஜனாஸா அடக்கம் முதல்
முஸ்லிம்களின் பிரச்சினைகளைக்குரிய தீர்வுகள் குறித்தான உடன்பாடுகளை
கண்டதன் பின்னரே 20ஆவது சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கினோம். ஆனால்,
அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ்
தெரிவித்துள்ளார்.
ஆயினும், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஆளுந்தரப்பினர் தமது தேவைக்கேற்றவாறு பயன்படுத்திவிட்டார்கள். பசில் ராஜபக்ஷவை பொறுத்தவரை தான் பாராளுமன்றம் செல்வதற்கு தடையாகவுள்ள சரத்தை நீக்கி இரட்டை பிரஜா உரிமை நபருக்கு சபை செல்வதற்கு அனுமதி வேண்டும். கோத்தாபய ராஜபக்ஷவுக்கு நிறைவேற்று அதிகாரம் வேண்டும். அத்தோடு, பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பு அணியினருக்கு மீண்டும் நிறைவேற்று அதிகாரம் தமது தலைமைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே இலக்காக இருந்தது.
அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆளுந் தரப்பிலுள்ள சிலர் எதிர்ப்புக் காட்டினார்கள். இதனால்தான், தங்களின் இலக்கை அடைந்து கொள்வதற்காக முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெறப்பட்டது. இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடக் கூட்டம் 13ஆம் திகதி சனிக்கிழமை அதன் தலைமயகத்தில் நடைபெற்றது. இதன்போது 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு அளித்தமை பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் “ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்குரிய கோரிக்கையை முன்னிருத்தித்தான் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்ததாகவும், இருந்தும் தாங்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், அது குறித்து தாங்கள் உயர்பீடத்திலும், மக்களிடத்திலும் மன்னிப்புக் கோர விரும்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உச்சபீடத்தில் தெரிவித்தார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, “சமூகத்தின் தேவைக்காகவே அரசாங்கத்தின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியதாக இருந்தால், கட்சியின் தலைமையையும், கட்சியின் முடிவையும் புறக்கணித்தது ஏன்? ”என்ற கேள்வி இங்கு எழுகின்றது. கட்சியும், தலைமையும் சமூகத்தின் பிரச்சினைகளில் அக்கறை கொள்வதில்லை. அதனால்தான் புறக்கணித்து செயற்பட்டோம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது சுயநலத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டதென்று எடுத்துக் கொள்வதா என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே செல்கின்றது.
இப்போது ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்கு தீர்வு இல்லாததால், இனியும் சமூகத்தை ஏமாற்ற முடியாதென்பதால் சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்ற நிலையில் பதறவும், மன்னிப்புக் கோரும் நிலைமையை அடைய வேண்டி ஏற்பட்டுள்ளது. இவர்களின் மன்னிப்பு கதையில் இன்னுமொரு விடயமும் உள்ளது. 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் பின்னர், தலைவர் ரவூப் ஹக்கீமின் சம்மதத்தின் பேரிலேயே ஆதரவு வழங்கினோம் என்று தெரிவித்திருந்தார்கள். இது உண்மை என்றால் ரவூப் ஹக்கீமும் மன்னிப்புக் கோரவேண்டும். பொய்யாயின் தலைவர் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்று உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
இதனைச் செய்யாது விட்டால், தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களை திட்டமிட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கும். இந்த விடயத்தில் கையறு நிலை ஏற்பட்டதனால் தான் பொது மக்களின் ஏச்சுப் பேச்சுக்களிலிருந்து தப்புவதற்காக அரசாங்கம் ஏமாற்றி விட்டதென்ற நாடகத்தை தற்போது அரங்கேற்றியுள்ளார்கள். அவர்கள் கட்சியுடன் தொடர்ந்து பயணிக்காது போனால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமது நாடகத்தில் இன்னுமொரு அங்கத்தினையும் ஹக்கீம் தரப்பினர் இணைத்துள்ளார்கள்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடனான தமது பின்கதவு உறவை ஜனாதிபதியையும் இணைத்ததாக வைத்திருக்க வேண்டும். அதனை தவிர்த்து, அரசாங்கம் என்றால் யார் என்றே புரியாமல் அரங்கம் தங்களை ஏமாற்றிவிட்டதென்று சொல்லுவதில் அர்த்தமில்லை.
நிறைவேற்று ஜனாதிபதி முறையில் அரசாங்கம் என்பது ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டமைப்பாகும். ஏறக்குறைய ஜனாதிபதியே எல்லாம் என்ற நிலைமை தான் அங்குள்ளது. ஆதலால், மிகப் பெரிய தவறை இழைத்துவிட்டு மன்னிப்பு கேட்பது என்பது புத்திசாலிகளின் பேச்சாக இருக்காது.
சிங்கள மக்களின் வாக்குகளினால் மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக தம்மை பிரகடனம் செய்தவர் கோத்தாபய. மட்டுமல்லாது பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களினதும், தேரர்களினதும் பூரண ஆதரவைப் பெற்ற ஒருவராகவும் அவர் விளங்குகின்றார்.
மேலும் 73ஆவது சுதந்திர தின விழாவில் “நான் ஒரு சிங்கள பௌத்த தலைவர். அதை வெளிப்படுத்த நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். பௌத்த போதனைகளின் படியே நாட்டை நிர்வகிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். ஆதலால், தன்னை ‘மூவின மக்களினதும் தலைவன்’ என்று சொல்லாது ‘சிங்கள பௌத்த தலைவன்’ என்றே அடையாளப்படுத்துகின்றார்.
இத்தகைய கொள்கையையுடைய ஜனாதிபதியின் கரங்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தை கொடுத்து பலப்படுத்திவிட்டு, அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டதென்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறித்திரிவது வேடிக்கையிலும் வேடிக்கையே.
வெறுக்கப்படும் நிலை
முஸ்லிம் கட்சிகளின்
பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றிக்
கொண்டிருக்கின்றார்கள். எந்த சட்ட மூலமாக இருந்தாலும் கையுயர்த்துவதற்கும்,
பின்னர் கை நீட்டுவதற்கும் பழகிவிட்டார்கள். அத்தகையதொரு கைநீட்டலை 20ஆவது
திருத்தச் சட்ட மூலத்திற்கும் செய்தமையால் முஸ்லிம்களின் அதிகபட்ச
வெறுப்புக்காளாகியுள்ளார்கள்.
அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியூதீன் பாகிஸ்தானின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர்அலி, கட்சியின் செயலாளர் சுபைதீன் உள்ளிட்டவர்களுடன் சந்தித்தார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை தனியாக சந்தித்தார்.
இவர்கள் தங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச் செல்லாமல் விட்டமை, தங்களின் மீதும் சமூகம் வெறுப்புக் கொண்டுவிடும் என்ற காரணத்தினாலாகும். ஆயினும், இவர்கள் தங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இறுக்கமான உறவைக் கொண்டுள்ளார்கள் என்பதனை அவர்களின் நடவடிக்கைகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்களின் மீதும் முஸ்லிம்கள் வெறுப்படையும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸினது உயர்பீடக் கூட்டமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார சபையின் கூட்டமும் 13ஆம் திகதி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதன் போது முஸ்லிம் காங்கிரஸ் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும். ஆகக் குறைந்தது கட்சியிலிருந்து இடைக்கால தடை விதிக்கப்படலாமென்று அக்கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்த போதிலும், வழக்கம் போன்று மன்னிப்பே அளிக்கப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராகியதன் பின்னர் சமூகத்திற்கும், கட்சிக்கும் துரோகம் இழைத்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதே இக்கட்சியின் ஆரம்ப காலத் தொண்டர்களின் கருத்தாகும். தலைவருக்கு எதிராக விரல் நீட்டியவர்களுக்கு எதிராகவே ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அல்லது அவர்களாகவே விலகிச் செல்லும் சூழல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதே இதுகால வரையான நிலைமையாக இருக்கின்றது.
முஸ்லிம் சமூகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான பல நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் கட்சிகளின் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக செயற்பட்டுள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. ஒருவர் எத்தனை தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்ற மஹிந்த ராஜபக்ஷவின் ஆசைக்காக 18ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் முஸ்லிம் பிரதிநிதிகள்.
2015இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கரமசிங்க பிரதமராகவும் இருந்த போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரங்கள் செல்ல வேண்டுமென்பதற்காகவும், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பதற்காகவும், 18ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வலுவிழக்கச் செய்வதற்காகவும் 19ஆவது திருத்தச் சட்ட மூலத்தினை அமுலாக்குவதற்காகவும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினார்கள்.
அத்துடன் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றத்திற்கும் ஆதரவு வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாகவே 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இதில் தலைவர்கள் எதிராக வாக்களித்தார்கள் என்பது மட்டுமே மாற்றம். ஆகையால், அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் சட்ட மூலங்களுக்கு ஆதரவு வழங்குவதென்பது முஸ்லிம் கட்சிகளின் எழுதப்படாத கொள்கையாக கொள்ளுதல் என்பதே பொருத்தமான கூற்றாக உள்ளது. அதனால் தான், 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அது மட்டுமன்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20இற்கு ஆதரவாக செயற்பட்டாலும், தலைவருக்கு எதிராக விரல் நீட்டவில்லை. அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்து தங்களுக்கு எதிராக விரல் நீட்டும் நிலையை ஏற்படுத்தக் கூடாதென்பதில் ரவூப் ஹக்கீமும், ரிஷாத் பதியூதீனும் முனைப்பாகவுள்ளார்கள்.
முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்த வரை கட்சிக்கும், சமூகத்திற்கும் துரோகம் செய்தால் மன்னித்துக் கொள்ளும். ஆனால், தலைவரிடம் நியாயமான கேள்வியைக் கூட கேட்கக் கூடாது. அவ்வாறு கேட்பது மன்னிக்க முடியாத குற்றம். அதற்கு தண்டனை கட்சியை விட்டு விலக்கிவிடுவது. இவ்வாறு முஸ்லிம் கட்சிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளமையால், அவற்றை முஸ்லிம் சமூகத்திற்குரிய கட்சிகள் என்று அழைக்க முடியாது. முஸ்லிம்களுக்கு மாற்றுக் அரசியல் கட்சிகள் அவசியமென்பதை உணரத் தொடங்கியுள்ளார்கள். முஸ்லிம்கள் தமது கட்சிகளினால் தொடர்ந்தும் ஏமாறுவதற்கு தயாரில்லை என்ற கோசம் எல்லா முஸ்லிம் பிரதேசங்களிலும் எழுந்து கொண்டிருக்கின்றது. இது தற்போதுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்குரிய எச்சரிக்கை ஒலியாகும்.
Thanks : Virakesari 21.02.2021
0 comments:
Post a Comment