• Latest News

    May 25, 2024

    ரணில் விக்கிரமசிங்க மக்களாணையுடன் ஆட்சியமைத்தால் பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட கதியே ராஜபக்ஷர்களுக்கும் ஏற்படும் - உதய கம்மன்பில எச்சரிக்கை

     
    பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களாணையுடன் மீண்டும் ஆட்சியமைத்தால் பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட அரசியல் கதியே ராஜபக்ஷர்களுக்கும் ஏற்படும். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எதிர்பார்த்துள்ளோம் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

    கொழும்பில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

    அவர் மேலும் தெரிவித்ததாவது,

    அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அது ஜனாதிபதிக்கும்,நாட்டுக்கும் பாதகமாக அமையும்.

    ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தொடர்ந்து வலியுறுத்திய போது 113 உறுப்பினர்களின் ஆதரவை கையெழுத்துக்கள் ஊடாக உறுதிப்படுத்திக் கொண்டு வாருங்கள் பாராளுமன்றத்தை கலைக்கலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    பாராளுமன்றத்தை கலைப்பதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கு பஷில் ராஜபக்ஷ எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி பக்கம் ஆகவே அந்த கட்சியின் தலைவர் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ராஜபக்ஷர்களிடம் வலியுறுத்தியுள்ளார்கள். பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களாணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட அரசியல் நிலைமை தமக்கும் ஏற்படுமோ என ராஜபக்ஷர்கள் அச்சமடைகிறார்கள்.

    நாட்டு மக்கள் தம் பக்கம் என்று நினைத்துக் கொண்டுள்ள பொதுஜன பெரமுனவுக்கு இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல் தகுந்த பாடத்தைக் கற்பிக்கும். அவர்களின் வேட்பாளர் யார் என்பதை நாங்களும் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரணில் விக்கிரமசிங்க மக்களாணையுடன் ஆட்சியமைத்தால் பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட கதியே ராஜபக்ஷர்களுக்கும் ஏற்படும் - உதய கம்மன்பில எச்சரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top