உலகில் உள்ள சகல பிரச்சினைகளையும் பற்றி பேசிய ஜனாதிபதி புதிய
அரசியலமைப்பு பற்றி வரவு- செலவுத் திட்ட உரையில் ஏதும் சொல்லவில்லை. இந்த
அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தாது, புதிய அரசியலமைப்பையும்
உருவாக்காது. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையின் அதிகார
மோகத்துக்கு அடிபணிந்து பல்வேறு குறைபாடுகளை கொண்டுள்ள இந்த
அரசியலமைப்பினையே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம்
தீர்மானித்துள்ளது. உண்மையில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என ஐக்கிய
மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா
கடுமையாக சாடினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் நிதி நிலைமை மற்றும் பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி, பொருளாதார மீட்சிக்காக 11 சட்டங்களை இயற்றுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த ஒருவருட காலத்தில் ஒரு சட்டம் கூட இயற்றப்படவில்லை. சட்ட வரைபு கூட சமர்ப்பிக்கப்படவில்லை.
கடந்த அரசாங்கம் பொருளாதார மீட்சிக்காக 2021 ஆம் ஆண்டு 30 சட்டங்களையும், 2022 ஆம் ஆண்டு 46 சட்டங்களையும், 2023 ஆம் ஆண்டு 36 சட்டங்களையும், 2024 ஆம் ஆண்டு 50 சட்டங்களையும் இயற்றியது. இந்த அரசாங்கம் இந்த ஆண்டு 22 சட்டங்களை இயற்றியுள்ளது. அதில் 10 சட்டவரைவுகள் கடந்த அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டது. ஜனாதிபதி குறிப்பிட்ட 11 சட்டங்கள் இயற்றப்படவில்லை. குறைந்தளவான சட்டங்கள் இந்த ஆண்டு தான் இயற்றப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு பற்றி ஜனாதிபதி பல விடயங்களை குறிப்பிட்டார். வரவு- செலவுத் திட்ட உரையின் சிறந்த பேச்சாளர் யார் என்று போட்டி வைத்தால் அதில் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும். நாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் பிரதான கலாசாரமாக காணப்படுகிறது. இலஞ்சம் அல்லது ஊழலை இல்லாதொழிக்க வேண்டுமாயின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை பலப்படுத்த வேண்டும்.
இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவை பலப்படுத்த வேண்டுமாயின் போதுமான நிதியை ஆணைக்குழுவுக்கு ஒதுக்க வேண்டும். அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அண்மையில் முன்னிலையான இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் 'ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை. ஆகவே தாம் நீதிமன்றம் செல்வதாக' குறிப்பிட்டார். அரசாங்கம் இதற்கு வெட்கப்பட வேண்டும். ஆனால் ஊழலை ஒழிப்பதற்கு முன்னுரிமை என்று ஜனாதிபதி பேசுகிறார்.
ஊழலை இல்லாதொழிப்பதற்கு தேவையான வசதிகள் மற்றும் மானியங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. சமூக கட்டமைப்பில் இருந்து ஊழலை இல்லாதொழிக்க வேண்டும். இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புக்கு உரிய நடவடிக்கைகள் நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.
மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவை உள்ளடக்கிய வகையில் விசேட நீதிமன்றம் ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டது.இந்த அரசாங்கம் இலஞ்ச ஊழல் பற்றிய வழக்குகளை விசாரணை செய்யும் விசேட நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கை கூட அனுப்பி வைக்கவில்லை. ஏன் இந்த நீதிமன்றத்தை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.
நடைமுறையில் உள்ள இரண்டாம் அரசியலமைப்பு தொடர்ச்சியாக திருத்தம் செய்யப்பட்டு திரிபுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்து வெஷ்மினிஸ்டர் முறைமையிலான பாராளுமன்ற முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனையே குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பினை வெகுவாக இயற்றுவதாகவும், காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை ஒரு வருட காலத்துக்குள் நடத்துவதாகவும், நிறைவேற்றுவதாகவும் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டது. வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி 4.30 மணித்தியாலங்கள் உரையாற்றினார். எதிர்க்கட்சியின் ஒரு உறுப்பினர் மாத்திரம் தான் சபையில் உறங்கினார்.
ஏனையோர் விழித்திருந்தார்கள். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி ஜனாதிபதி ஏதும் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்திருந்தோம். உலகில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் பற்றி ஜனாதிபதி பேசினார் ஆனால் புதிய யாப்புருவாக்கம் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் சொல்லவில்லை.
புதிய யாப்புருவாக்கம் பற்றி ஜனாதிபதி ஏன் ஏதும் சொல்லவில்லை. 2015-2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் புதிய யாப்புருவாக்கத்துக்கு முன்னெடுத்த பணிகளை நிறைவு செய்து புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி மறக்கடிக்கப்பட்டுள்ளது.மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் மலினப்படுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையுடன் 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
மாகாணசபைத் தேர்தலை நடத்தும் தேர்தல் முறைமையை உருவாக்குங்கள் என்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிடுகிறார்.
தேர்தல் சட்ட திருத்தத்தை அரசாங்கமே கொண்டு வர வேண்டும்.மாகாண சபைகளில் ஜனநாயக மிக்க நிர்வாகத்தை உருவாக்க வேண்டுமாயின் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்.மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
இந்த அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தாது, புதிய அரசியலமைப்பையும் உருவாக்காது .அனைத்தையும் பேசும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி கடந்த 1 ஆண்டுகாலமாக ஏதும் பேசவில்லை. யாப்புருவாக்கத்துக்கு ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா, ? எமக்கு அவ்வாறு ஏதும் தெரியவில்லை. இந்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா, குழு நியமிக்கப்பட்டுள்ளதா ? என்பதை நீதியமைச்சர் சபைக்கு குறிப்பிட வேண்டும்.
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையின் அதிகார மோகத்துக்கு அடிபணிந்து பல்வேறு குறைபாடுகளை கொண்டுள்ள இந்த அரசியலமைப்பினையே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உண்மையில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். இது மக்களாணைக்கு முற்றிலும் எதிரானது என்றார்.
0 comments:
Post a Comment