பௌத்த சமூகத்திற்கும் விகாரை நடவடிக்கைகளுக்கும் அவமரியாதை செய்யும் வகையில் பொலிஸார் நடந்து கொண்டதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ள ஞானசார தேரர் ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது, பௌத்த சமூகத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களையே பொலிஸாரும் பின்பற்றுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பௌத்த சமூகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க பௌத்த மக்கள் ஒற்றுமையாக எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரர் செவ்வாய்க்கிழமை (18) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறுகையில்,
திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இரவு வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பின்னர் திங்கட்கிழமை (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரப்பப்பட்ட நிலையில் பொதுமக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது நாட்டு மக்கள் மத்தியில் அதிகளவு பேசப்பட்டது.
இது மிகவும் கவலைக்கிடமான, கசப்பான, பாரதூரமான ஒரு விடயமாகும். கலவரத்தின் போது அதிகாரத்துடன் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அவர்களை அனுப்பிய அரசாங்கத்துக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இலங்கையில் வாழும் பௌத்த மக்களின் உரிமையில் தான் நீங்கள் கை வைத்துள்ளீர்கள். இது பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்குகிறது. பௌத்த மதம் என்பது பல ஆண்டுகளாக இலங்கையில் உள்ள ஒரு மதமாகும்.
புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில் தான் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர்.
புத்தர் சிலையை அகற்றுமாறு கலவரம் செய்தவர்களால் தாக்கப்பட்ட பல தேரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேரர்களை தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது மிகவும் தவறாகும்.
பௌத்த வணக்கஸ்தலத்தை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு யாருக்கு உரிமை உள்ளது.
மக்களை தூண்டுவது அரசாங்கம் தான். கால காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது.

0 comments:
Post a Comment