• Latest News

    September 29, 2013

    முஸ்லிம் கட்சிகளின் வீழ்ச்சியை நிரூபிக்கும் தேர்தல் முடிவுகள்

    சஹாப்தீன் -
    செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற மூன்று மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகளை ஆராய்கின்ற போது முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவம் கடந்த காலங்களை விடவும் குறைவடைந்துள்ளன. அதே வேளை, முஸ்லிம் கட்சிகளின் செல்வாக்கும் குறைவடைந்துள்ளன. முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவம் குறைவடைந்தமைக்கு பிரதான காரணம் மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளாத நிலையும், கட்சிகளிடையே சமூக ரீதியான ஒற்றுமையும், புரிந்துணர்வும் காணப்படாமையும் பிரதான காணரங்களாக இருக்கின்றன.
    முஸ்லிம்களின் தனிப்பெரும் செல்வாக்கில் தம்மை வளர்த்துக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்ட ஆசனங்களையும் வாக்குகளையும் அவதானிக்கின்ற போது, அக்கட்சி பாரியதொரு பின்னடைவைக் கண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு ஒவ்வொரு தேர்தலிலும் குறைவடைந்து கொண்டு வருவதனை வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகள் மீண்டுமொரு தடவை தெளிவுபடுத்தியுள்ளன.
    நடைபெற்ற மூன்று மாகாண சபைகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 04 ஆசனங்களையே மூன்று மாகாண சபைகளிலும் வெற்றி கொண்டுள்ளது.
    மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 11,137 வாக்குகளையே பெற்றுக் கொண்டது. கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் ஐ.தே.கவுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு போட்டியிட்ட போது அவர் 54,047 விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். ஆனால், 2013 இல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் மத்திய மாகாணம் முழுவதிலும் 17,788 வாக்குகளையே பெற முடிந்துள்ளது. 2010ஆம் ஆண்டு ரவூப் ஹக்கிம் பொதுத் தோதலில் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளில் அரைவாசியைக் கூட முஸ்லிம் காங்கிரஸினால் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பது அக்கட்சியின் செல்வாக்கு நிலையில் பாரிய தளம்பல் ஏற்பட்டுள்ளதற்கான தெளிவான அத்தாட்சியாகும்.
    கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வீழ்ச்சி பற்றி கட்சியின் ஆதரவாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் தலைவர் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. அதுதான் வாக்குகளின் சரிவுக்கு காரணமென்று வாதிட்டார். தலைவர் போட்டியிட்டால்தான் வாக்குகள் அதிகம் கிடைக்குமென்றால், அவை முஸ்லிம் காங்கிரஸிற்குரிய வாக்குகளல்ல. ரவூப் ஹக்கிமுக்குரிய வாக்குகளாகும்.
    இதே போன்றுதான் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருப்பதனை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கவுடன் இணைந்து 2009 ஆம் ஆண்டு வட மேல் மாகாண சபைக்கு போட்டியிட்ட போது, முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட நியாஸ் 11254 விருப்பு வாக்குகளைப் பெற்றிரந்தார். மேலும், இம்மாவட்டத்தில் 02 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது.
    ஆனால் 2013ஆம் அண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் புத்தள மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 10,730 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை மட்டுமே கைப்பற்றிக் கொண்டது. குருநாகல் மாவட்டத்தில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் 17,130 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் வெற்றியீட்டீக் கொண்டது. இதே வேளை, 2009ஆம் ஆண்டு 02 ஆசனங்களை குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
    வட மாகாண சபையின் தேர்தல் முடிவுகளின் பிரகாரமும் முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியில் நஸ்டம் ஏற்பட்டுள்ளதனை அறிந்து கொள்ள முடிகின்றது. வவுனியா மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை 1999 வாக்குகளையே பெற்றுக் கொண்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கவுடன் இணைந்து 12,783 வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸின் பெற்றுக் கொண்டது. இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட மர்ஹூம் நூர்தீன் மசூர் 9,518 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். இதன்படி வவுனியா மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது.
    முழு வட மாகாணத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் 6,761 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் பெற்றுக் கொண்டது.
    இதே வேளை, 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 1,32,917 வாக்குகளைப் பெற்று 07 ஆசனங்களையும் கைப்பற்றிக் கொண்டது. இத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் 83,658 வாக்குகளைப் பெற்று 07 ஆசனங்களையும் வெற்றி கொண்டது. இதே வேளை, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஐ.தே.கவுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 90,757 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது.
    2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றுக் கொண்டமைக்கான காரணம், பள்ளிவாசல் மீதான தாக்குதல்கள் மற்றும் இனவாதப் போக்கு, பௌத்த கடும் போக்கு அமைப்புக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்காமை என அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்ளை முன் வைத்ததனால் முஸ்லிம்களும் தங்களது எதிர்ப்பை காட்டுவதற்காக முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களித்தார்கள்.
    ஆனால், இதன் பின்னர் பழைய குருடி கதவைத் திறவடி என்பது போல், முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையின் தேர்தலின் பின்னர் சொல்லுக்கும், செயலுக்கும் மாற்றங்களை காட்டிக் கொண்டிருந்தது. இதனால், முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸின் மீது கவலை கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள்.
    முஸ்லிம்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் இவ்விதமாக வீழ்ச்சியை நோக்கிச் செல்லுவதற்கு பல காரணங்களைக் கூறலாம். ஆயினும், முஸ்லிம் காங்கிரஸிற்குள் பிரதானிகளிடையே பெரியளவில் கருத்து மோதல்கள் இருக்கின்றன.
    கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுதல் என்ற முடிவினை எடுத்துக் கொண்டே போதே, கட்சிக்குள் ஆயிரத்தெட்டு கருத்துக் குளறுபடிகள். அவைகளை ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு முஸ்லிம் காங்கிரஸின் பிரதானிகள் மடித்துக் கட்டிக் கொண்டு நின்றார்கள். கட்சிக்குள்; கூட்டுப் பொறுப்பு என்பது பகிரங்கமாக மீறப்படுவதானது முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு குறைந்து கொண்டு போவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது.
    மேலும், முஸ்லிம் காங்கிரஸிற்கும் மக்களுக்குமிடையான நெருக்கங்கள் குறைவடைந்து கொண்டு வருகின்றன. கட்சியை புனரமைக்குமாறு வருடா வருடம் ஆதரவாளர்கள் தலைமையிடம் கேட்டுக் கொண்ட சந்தர்ப்பங்களில் கட்சியை புனரமைப்புச் செய்வதற்கான உறுதி மொழிக்ள வழங்கப்பட்டன. ஆனால், புனரமைப்பு இற்றை வரைக்கும் நடைபெறவில்லை. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு, நடாளுமன்ற உறுப்பினரின் செல்வாக்கைப் பெற்றவர்களின் ஊடாகவே செல்ல வேண்டியுள்ளது. பெரும்பாலும் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அத்தோடு ஏனைய மாகாண சபைகளில் உள்ள உறுப்பினர்களையும் சுற்றி ஒரு வட்டம் இருக்கின்றன. அந்த வட்டம் கொந்தராத்துக் காரர்களையும், உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களையும்  மற்றும் உறுப்பினர்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களும், மற்றும் உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்களை தங்களின் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கொள்கையைக் கடைப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
    முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருப்பதற்கே ஆசைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். என்ன நடந்தாலும் கவலையில்லை. நமக்கு நடக்க வேண்டியது நடந்தால் போதுமானதாகும் என்ற போக்கில் இருந்து கொண்டு கட்சியை வளர்க்க முடியாது. கட்சிக்குள் ஒழுக்கக் கட்டுப்பாடு என்பது முற்றாக குறைடைந்து இருக்கி;ன்றது. தேர்தல் காலங்களில் மட்டும் மக்களின் காலடிக்குச் சென்று உரிமைக் கீதமும், வீர முழக்கமும் வாசித்தால் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென்ற முஸ்லிம் காங்கிரஸின் சிந்தனைப் போக்கிற்கு இம்முறை பலத்த அடி கிடைத்துள்ளது.
    நன்றி: வீரகேசரி வார வெளியீடு
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் கட்சிகளின் வீழ்ச்சியை நிரூபிக்கும் தேர்தல் முடிவுகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top