• Latest News

    September 28, 2013

    நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மாகாண சபைகளின் காணி அதிகாரத்தற்கு பாதிப்பில்லை; சட்டத்தரணி சி.வி.விவேகானந்தன்

    காணி அதிகாரம் மத்திய அரசுக்குரியது என்று உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால், மாகாண சபைக்குரிய காணி அதிகாரங்கள் பறிபோய் விடும் என்று எவரும் கிலேசம் அடையத் தேவையில்லை என்று மூத்த சட்டத்தரணி சி.வி.விவேகானந்தன் தெரிவித்தார். 
    அவர் மேலும் தெரிவித்ததாவது: மத்திய மாகாண சபையில் அமைந்துள்ள தோட்டக் காணி ஒன்று தொடர்பான வழக்கில், காணி அதிகாரம் மத்திய அரசுக்குரியது என்று பிரதம நீதியரசர் மொஹான்பீரிஸ், நீதி யரசர்களான கே.ஸ்ரீபவன், ஈவா வனசுந்தர ஆகியோரைக் கொண்ட ஆயமே இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது.
    வடக்கு மாகாண சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய சூழ்நிலையில் நேற்று முன்தினம் வெளியான இந்தத் தீர்ப்பு பெரும் பரபரப்பை காணி அதிகாரத்துக்கு ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் வழக்காளிகள் குறிப்பிட்டுக் கேட்கும் விடயங்களை மட்டுமே ஆராய்ந்து நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும். அவ்வாறே இந்த வழக்கிலும் குறிப்பிட்ட காணி தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் மாகாண சபைகளுக்குரிய காணி அதிகாரங்கள் தொடர்பில் இந்த வழக்கில் எந்தவொரு விடயமும் ஆராயப்படவில்லை.
    எனவே, இந்தத் தீர்ப்பினால் மாகாண சபைக்குரிய காணி அதிகாரங்களுக்கு பாதிப்பு வந்துவிட்டதாக எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. 1978 இல் ஜே.ஆர். ஜயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட புதிய அரசமைப்பின்படி நாட்டில் உள்ள அனைத்துக் காணிகளும் அரசுக்கே சொந்தமானவை. அவற்றைக் கையாளும், நிர்வகிக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஜனாதிபதியே கொண்டிருப்பார். இதன் அடிப்படையிலேயே மேற்படி வழக்கின் தீர்ப்பு வழங்கபப்பட்டுள்ளது.
    எனினும் 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தின்படி மாகாண சபைகளுக்கான காணி அதிகாரங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திருத்தத்தின் படி மாகாண சபைகளுக்கு காணி உரித்தானது அல்ல என்ற போதும் மாகாண எல்லைகளுக்குள் உள்ள காணிகளைப் பயன்படுத்தவும் நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசமைப்பில் மாற்றத்தை செய்யாமல் மாகாண சபைகள் சட்டம், ஒரு திருத்தமாகவே உள்நுழைக்கப்பட்டதால் காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசமைப்புக்கும் 13 ஆவது திருத்தத்துக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பது என்னவோ உண்மைதான்.
    ஆனால் இந்த முரண்பாடு குறித்து மேற்குறிப்பிடப்பட்ட வழக்கின் போது எதுவும் ஆராயப்படவில்லை. அரசமைப்பின் அடிப்படையிலேயே காணிகளை ஒரு நிறுவனத்துக்கு அல்லது அமைப்புக்கு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குத்தான் உண்டு என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இது குறித்து தமிழ் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதற்கு முன்னரும் இவ்வாறான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பால் மாகாண சபைக்குரிய காணி அதிகாரங்கள் மத்திய அரசின் வசம் சென்றுவிட்டன என்று எவரும் எண்ணத்தேவையில்லை என்றார் சி.வி.விவேகானந்தர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மாகாண சபைகளின் காணி அதிகாரத்தற்கு பாதிப்பில்லை; சட்டத்தரணி சி.வி.விவேகானந்தன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top