• Latest News

    October 24, 2013

    இதுதான், இந்நாட்டின் நீதியமைச்சரது கட்சியின் ஜனநாயகமா..?

    கௌரவ எம்.ரீ. ஹஸன் அலி 

    (பாராளுமன்ற உறுப்பினர்)
    செயலாளர் நாயகம்,
    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
    தாருஸ்ஸலாம்,
    கொழும்பு 02.
    ஓக்டோபர் 07, 2013
    அக்குறணை பிரதேச சபை வெற்றிடம் குறித்து...
    கௌரவத்திற்குரிய எம்.ரீ. ஹஸன் அலி அவர்களுக்கு,
    அஸ்ஸலாமு அலைக்கும்
    உங்கள் நேர்காணலொன்று ஒக்டோபர் 04 வியாழக்கிழமை வெளியான பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அதில், வடமாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் காத்தான்;குடி பீ.எம்.ஜீ.ஜீ. தலைமையிலான முஸ்லிம் கூட்டமைப்பும் செய்துகொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில், அஸ்மின்
    அய்யூபிற்கு போனஸ் ஆசனம் வழங்கியுள்ளதை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறீர்கள். அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நேர்மையினை வெளிப்படுத்துகின்றது என்பதும் உங்கள் கருத்தே. சில கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை புறக்கணித்து விடுவதாகவும், ஏனைய கட்சிகளுக்கு இது சிறந்த முன்மாதிரி என்றும் கூறியிருந்தீர்கள்.
    அதே நேர்காணலில், அக்குறணைப் பிரதேச சபைத் தேர்தலில் அக்குறணை பீ.எம்.ஜே.டி அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு மரச்சின்னத்தில் போட்டியிட்டதையும், அதில் நீங்களே கையொப்பம் இட்டதையும் மறக்காமல் கூறியிருந்தீர்கள். 
    கங்கா முஹ்சின் ஹாஜியாரின் வபாத்தை அடுத்து, அக்குறணை பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்ததாகவுள்ள எமது அமைப்பின் உறுப்பினர் இர்பான் காதர் அவர்களே தெரிவு செய்யப்படல் வேண்டும். அதுவே மக்களது ஆணைக்கு மதிப்பளிக்கின்ற தன்மையும், ஜனநாயகமுமாகும்.
    எனினும், குறித்த நேர்காணலில், அவருக்கு பதிலாக வேறொருவரை தெரிவு செய்யப்படுவார் என்றும் கூறியிருந்தீர்கள். உங்களது அநீதியை எமது அமைப்பு புரிந்து கொள்ள வேண்டும் என்பது உங்களது மற்றொரு வேண்டுகோளாகும்.
    பீ.எம்.ஜே.டி யிற்கு ஏற்கெனவே இரு பிரதிநிதித்துவங்கள் இருப்பதாகவும், எனவே குறித்த பிரதிநிதித்துவம் முஸ்லிம் காங்கிரசுக்குத் தேவைப்படுகின்றது என்று கூறியிருந்தீர்கள். பிரதிநிதித்துவம் தேவை என்றால் ஜனநாயக முறையில் பெற்றிருக்க வேண்டும். உங்கள் கட்சியில் நிறுத்தப்பட்டவர்கள் வெற்றிபெறவில்லை என்பதற்காக, அடுத்தவர்களது ஜனநாயக உரிமையை பரித்தெடுப்பது நல்லதல்ல. இதுதான், இந்நாட்டின் நீதியமைச்சரது கட்சி செய்கின்ற ஜனநாயகமா?
    ஒரு முஸ்லிம், ஒரு இஸ்லாமியப் பெயரைக் கொண்டுள்ள கட்சியின் செயலாளர் நாயகமான உங்கள் தீர்மானம் இஸ்லாமிய பண்பாடுகளை ஞாபகப்படுத்தவில்லையா, உங்கள் மனசாட்சியைத் தொட்டுக் கேளுங்கள். உங்களது இந்த செயற்பாட்டை, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கூட விரும்பப் போவதில்லை.
    ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் தெரியாதவராகத்தான் நீங்கள் கையொப்பம் இட்டுள்ளீர்கள் என்பதை உங்களது கருத்துக்கலிலிருந்து தெரிய வருகின்றது. மனசாட்சியின் அடிப்படையிலும், ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் அப்பிரதிநிதித்துவம் எமது உறுப்பினருக்கே கிடைக்க வேண்டும்.
    சில கட்சிகள் ஒப்பந்தங்களை மீறுகின்றன என்று கூறியிருக்கின்ற நீங்கள், பீ.எம்.ஜே.டி யுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அக்குறணை மக்களுக்கு எதனைச் செய்துள்ளீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். எமது மக்கள்  வழங்கிய ஜனநாயக உரிமையைக் கூட மதித்து நடக்கக் கூடாதா? அல்லாஹ்வை முன்னிருத்திக் கேட்டுப் பாருங்கள்.
    முஸ்லிம் காங்கிரஸோடு ஒப்பந்தம் செய்வதற்கு நாங்கள் கோரவுமில்லை, விரும்பவுமில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், இந்த நாட்டின் நீதியமைச்சருமான ரவூப் ஹகீம் அவர்களும், அவரது ஆதரவாளர்ளும்தான் அக்குறணையிலுள்ள முக்கிய உலமாக்கள் மூலமாக எங்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். தேர்தல் காலத்தில் மாத்திரம் அழைத்து விட்டு, அடுத்து ஊரையும், மக்களையும் நடுத்தொருவில் விட்டுவிடுவது நல்லதல்ல. ஒரு முஸ்லிமுடைய பண்புமல்ல.
    குறித்த ஒப்பந்தத்திலுள்ள விடயங்கள், அக்குறணையின் மேற்குறித்த முக்கிய உலமாக்கள் முன்னிலையில் கலந்துரையாடப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்பட்டது. குறித்த உலமாக்களையும், அக்குறணை மக்களையும் சேர்த்தே உங்களது கட்சி ஏமாற்றி வருகின்றது.
    ஒப்பந்தத்தின் அடிப்படையில், அக்குறணையின் அபிவிருத்திக்காக 800 மில்லியன் பெறுமதியான வேலைத்திட்டங்களை செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. எதனைச் செய்துள்ளீர்கள்? அதில் அடங்குகின்ற ஏனைய விடயங்களில் எதனைச் செய்துள்ளீர்கள்? அதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள்?
    இரு மாதங்களுக்கு ஒரு முறை அக்குறணையின் நிலை குறித்து எங்களோடு கலந்துரையாடுவதாக ஒப்பந்தத்தில் கூறியுள்ள நீதியமைச்சர், தேர்தலின் பின்னர் எத்தனை தடவைகள் எமது மக்களது பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு முன்வந்துள்ளார்? குறிப்பாக, அக்குறணையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது எட்டிக் கூடப்பார்க்காத நீதிமைச்சர், பல விருந்துபசாரங்களுக்கு நேரம் ஒதுக்கி வந்து போகின்றமை எமக்கு மிகுந்த வேதனையைத் தந்தது.
    முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் அக்குறணையைச் சேர்ந்த மர்ஹும் புஹார்தீன் ஹாஜியாரின் பங்கு அளப்பரியது. தேர்தல் காலங்களில் வாக்குகளை இலக்கு வைத்து மாத்திரம் அக்குறணைக் வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ், அக்குறணை மக்களுக்குறிய தங்களது கடமைப்பாடுகளை மறந்து விடுகின்றது. பொதுவாக, அக்குறணை மக்களையும், கண்டி மாவட்ட முஸ்லிம்களையும், முஸ்லிம் காங்கிரஸ் கரிவேப்பிலை போன்றே பயன்படுத்தி வருகின்றது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
    நாங்கள் ஒரு போதும் தனிப்பட்ட தேவைகளுக்காகப் போராடவில்லை. இப்பிராந்திய மக்கள் கல்வி, கலாசார, பொருளாதார, சுகாதார, சூழல் ரீதியாக எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைத் தீர்க்க வேண்டும் என்றே நாங்கள் முயற்சிக்கின்றோம். அக்குறணைப் பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை விட்டுத் தருவதாகவே நாங்கள் கூறினோம். ஆனால், அதற்குக் கைமாறான குறைந்த பட்சம் அக்குறணை பாலிகா வித்தியாலயம் எதிர்கொள்கின்ற இடப்பற்றாக் குறையைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறே கூறினோம். 
    நாங்கள் பிரதிநித்துவத்திற்காக அலைபவர்கள் அல்ல. ஒப்பந்தத்தின் அடிப்படையில் முறையான அபிவிருத்திகள் நடந்திருந்தால், நீங்கள் கேட்பதற்கு முன்னர் எமது பிரதிநிதித்துவத்தை விட்டுத் தந்திருப்போம். நாங்கள் மக்களிடம் பெற்ற வாக்குகளுக்கு, பெருமானத்தை உங்களிடம் இருந்து எதிர்பார்த்தோம். கிடைக்கவில்லை. குறைந்த பட்சமாக மக்கள் ஜனாநாயக முறையில் அளித்த வாக்குகளுக்குறிய பிரதிநிதித்துவத்தையாவது பெற முயற்சிக்காமல் இருப்பது, எம்மை நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமாகிவிடும் என்பதற்காகவே எமது முயற்சிகளை மேற்கொள்கின்றோம். இல்லாவிட்டால், இவை குறித்து மறுமையிலும் நாங்கள் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டியிருக்குமல்லவா?
    ஒரு பிரதிநிதித்துவம் மட்டுமல்ல, இன்றும் கூட, மக்கள் நலனுக்காக நீங்கள் நல்லது செய்ய முன்வருகின்ற போது, இன்னும் பல விட்டுக் கொடுப்புகளைச் செய்வதற்குத் தயாராகவேயுள்ளோம். 
    அக்குறணை மக்கள் குறித்து, அவர்களது தேவைகள் குறித்தும், நீங்கள் சற்றும் செவிசாய்க்கவில்லை, இதன் பின்னர் செவிசாய்க்கப் போவதுமில்லை என்ற செய்தியையே குறித்த தீர்மானம் எங்களுக்கு உணர்த்துகின்றது.
    உங்களது மேற்படி தீர்மானமானது, எமது அமைப்பு கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவளிக்கவில்லை என்பதற்கான அரசியல் பழிவாக்களாகவும், மத்திய பிராந்தியத்தில் நல்ல தலைமைகள் உருவாகக் கூடாது என்ற குறுகிய சிந்தனையும், சில முக்கிய கொள்கைகளுடன் செயலாற்றி, மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வருகின்ற எங்களது அமைப்பை, வலுவிலக்க மேற்கொள்ளப்படுகின்ற சதியாகவுமே நாங்கள் பார்கின்றோம்.
    பிரதேச சபைத் தேர்தலின் போது, முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 6000ற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. இரண்டு வருடங்களின் பின்னர் நடைபெற்ற, இந்த மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், அக்குறணையிலிருந்து 1000ற்கும் குறைவான வாக்குகளே கிடைக்கப் பெற்றுள்ளன.
    உங்களது இத்தீர்மாணமானது, முஸ்லிம் காங்கிரஸை அக்குறணை மக்கள் மனங்களில் இருந்து இன்னும் பல படிகள் கீழே இறங்கிவிடும் என்பதை, மிக வேதனையோடு கூறுகின்றோம். ஏனெனில், ஒரு கட்சியை வளர்த்தெடுப்பதில் உள்ள சிரமங்களை நாங்கள் நன்கு உணர்வோம். 
    முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்திற்கும், இந்நாட்டு மக்களுக்கும் என்ன அநியாயங்களை இழைத்தாலும் பரவாயில்லை, நாங்கள் அதற்குத் துணைபோவோம். அநீதியிழைப்போம், என்று ஒரு சிறிய கூட்டம் அக்குறணையிலும் இருப்பது குறித்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.
    தேர்தல் காலத்தில் மிக மோசமான வகையில் துண்டுப் பிரசுங்களையும், தேர்தல் முடிந்த பின்னர் எங்களது பெயரில் போலியான போஸ்டர்களையும் உங்கள் ஆதரவாளர்கள் என்று கூறுகின்ற சிலர் ஒட்டியிருந்தனர். அதன் மூலம், எங்களையும் ஏனைய கட்சிகளையும், மக்களையும் மோத வைப்பதற்கு அவர்கள் முயன்றனர். 
    எவ்வாறாயினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமல்ல, இந்நாட்டின் பெரும்பான்மையினக் கட்சிகள் கூட இவ்வாறாக நேரடித் துரோகங்களை இழைத்ததாகத் தெரியவில்லை. குறித்த தமிழ், சிங்களத் தலைமைகளிமிருந்தும் நீதி, நேர்மை குறித்து நிறையவே நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதைப் கட்டாயமாகக் கூறவேண்டியுள்ளது.
    உங்களோடோ, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோடோ, ஏனைய உறுப்பினர்களோடோ தனிப்பட்ட குரோதங்களுக்காகவோ, கோபங்களுக்காகவோ இக்கடிதம் எழுதவில்லை. எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுமில்லை. எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்காகவும், அல்லாஹ்விடம் பதிலளிக்க வேண்டியவர்கள் என்றே ஒரே காரணத்திற்காகவும் மாத்திரமே இக்கடிதத்தை நாங்கள் எழுதுகின்றோம். 
    நீங்களும், அல்லாஹ்வைப் பயந்தவர்களாக, உங்கள் முடிவுகளை எடுப்பீர்கள் என நம்புகின்றோம்.
    இப்படிக்கு
    பொதுச் செயலாளர்
    நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இதுதான், இந்நாட்டின் நீதியமைச்சரது கட்சியின் ஜனநாயகமா..? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top