• Latest News

    October 27, 2013

    நீண்டகால எதிர்பார்ப்பு இன்று பூர்த்தி செய்யப்பட்டுள்ளது: வீதி திறப்பு விழாவில் ஜனாதிபதி

    எமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மாத்திரமன்றி எமது நாட்டுக்கு வந்து செல்லும் உலக மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக அமைந்து கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையானது இன்று மக்களின் ஒப்படைக்க முடிந்துள்ளமையை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.

    இந்தியாவிலிருந்து ஒரு மணித்தியாலத்திற்குள் இலங்கையை வந்தடைந்து விடலாம். இருப்பினும் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பை சென்றடைய சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தேவைப்பட்டன.
    இது ஒரு நீண்ட கால பிரச்சினையாக எமது மக்களிடையே மாத்திரமின்றி எமது நாட்டுக்கு வந்து செல்லும் வெளிநாட்டவரிடையேயும் காணப்பட்டது. ஆனால், இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

    இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலையான கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை 9.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

    தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

    நாட்டில் நிலவிய 30 வருடகால யுத்தத்தை மூன்று ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டு வருவோம் என்று சவால் விடுத்த நாம் அதை நிறைவேற்றியுள்ளளோம். இதே போன்றுதான் குறுகிய காலங்களுக்குள் அபிவிருத்திகளை மேற்கொள்வோம் என்று கூறிய நாம் அந்த சவால்களையும் நிறைவேற்றி வருகின்றோம்.

    யுத்தம் முடிவடைந்து இதுவரை காலமும் நாட்டில் எங்கேயும் குண்டுகள் வெடிக்கவில்லை. பயங்கரவாதிகள் நடமாடவில்லை. பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறவில்லை. நாட்டில் சுமுகமான நிலை நிலவுகின்றது. ஆனால், இதைப்பற்றி யாருமே கதைப்பது இல்லை. மாறாக நாம் மேற்கொண்டு வரும் அபிவிருத்திகள் தொடர்பிலேயே முரணான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    தற்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகளை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களால் நேரடியாக கண்டுகொள்ள முடியும்.

    மேலும் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 2005ம் ஆண்டு வரை இடம்பெற்ற தேர்தல்களின் போது பல தலைவர்கள் வீதிகளை அமைத்து தருவதாகவும், சுகாதார வசதிகளை மேம்படுத்தி தருவதாகவும், மின்சார வசதிகளை பெற்று தருவதாகவும்இ சமாதானத்தை பெற்று தருவதாகவும் வாக்குறுதிகளை வழங்கினர்.

    ஆனால், எதனையுமே நடைமுறையில் செயற்படுத்தவில்லை. ஆனால் நாம் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை வழங்கியது போன்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தையும், சுகாதார வசதிகளையும், வீதி அபிவிருத்திகளையும்,  மின்சார தேவைகளையும் செய்துகொடுத்துள்ளோம்.

    ஆனால், இனிவரும் காலங்களில் நாம் மேற்கூறிய எதனையும் செய்துதருவதாக வாக்குறுதிகளை எவரும் வழங்க முடியாது.

    ஒருகாலத்தில் வைத்தியசாலைகளில் 10-15 வைத்தியர்களே இருப்பர். ஆனால், தற்போது ஒரு வைத்தியசாலைக்கு 125-130 வரையிலான வைத்தியர்கள் உள்ளனர். இதேபோன்று நாம் ஆட்சிக்கு வரும் போது 40 வீதமானோரே மின்சாரத்தால் பயன் பெற்றனர். தற்போது 95 சதவீதமானோர் மின்சாரத்தை பெறுகின்றனர்.

    நாட்டின் அபிவிருத்திகள் எனும் போது முக்கிய அமைவது வீதி அபிவிருத்தியே ஆகும். அந்த வகையில் நாட்டில் இரு அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளோம். மேலும் பல வீதிகள் இதுபோன்று அமைக்கப்படும் என்பதோடு ஒவ்வொருதுறையும் அபிவிருத்தி செய்யப்பட்டும்.

    மேலும் நாட்டின் மீது பற்றற்ற சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டுக்கு எதிராக பேசுகின்றனர். காட்டி கொடுக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நீண்டகால எதிர்பார்ப்பு இன்று பூர்த்தி செய்யப்பட்டுள்ளது: வீதி திறப்பு விழாவில் ஜனாதிபதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top