• Latest News

    November 27, 2013

    எமது மாவீரர்கள் மீது அரசின் அச்சம் பல் மடங்காக அதிகரித்துள்ளது முதல்வர் விக்னேஸ்வரன் சீற்றம்

    இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நாட்டும் விழா கைவிடப்பட்டது தொடர்பாக வடமாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்:
    இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த ஸ்தூபி இருக்கும் சதுக்கத்தில் மரம் நாட்டும் விழா நடத்த எமது வேளாண்மை அமைச்சு உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு என் தலைமைத்துவத்தின் கீழ் அதை நடத்தத் தீர்மானித்திருந்தது.
    திடீரென்று பொலிசார் தமக்கு ஜனாதிபதி காரியாலயத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் எந்த ஒரு விழாவினையும் வடமாகாண மக்கள் இம் மாதம் 26, 27ந் திகதிகளில் நடாத்தப்படாது என்று அதில் கூறப்பட்டிருப்பதாகவும் இன்றைய கூட்டத்திற்குத் தாம் பொலிஸ் பாதுகாப்புத் தந்தால் தம்மிடம் கேள்விகள் கேட்டு தாம் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்றும் எனக்கு அவர்கள் அறிவித்தார்கள். என் மீது மதிப்புக் காட்டுவதால் அந்த அப்பாவிப் பொலிஸார் தண்டனைக்குள்ளாவது எனக்குச் சரியென்று படவில்லை.
    எனினும் இந்த நிகழ்வு எமக்குச் சில பாடங்களைப்; புகட்டுகின்றன. ஒன்று இராணுவ பலத்தை வடமாகாணத்தில் போர் முடிந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியுந் தொடர்ந்து வைத்திருப்பதும் இப்பேர்ப்பட்ட ஆணைகளை அரசாங்கம் பிறப்பிப்பதும் அரசாங்கத்தின் பயத்தைப் பிரதி பலிக்கின்றது. அதாவது அழிக்கப்பட்ட எமது இளைஞர்களின் ஆத்மாக்கள் கூட எமது அரசாங்கத்திற்குப் பீதியை ஏற்படுத்துகின்றன என்று தெரிகிறது. இல்லையென்றால் நாங்கள் வன்முறையின்றி நல்லெண்ணத்துடன் நடாத்தும் மரம் நாட்டு விழாவைக்கூடத் தடை செய்யும் அளவுக்கு அரசாங்கம் கரிசனை எடுக்கின்றது என்றால் அவர்கள் எந்தளவுக்கு எமது இளைஞர்கள் மீது கரவான மட்டற்ற மரியாதை வைத்துள்ளார்கள் என்று புரிகிறது. இறந்தவர்கள் பேசமாட்டார்கள் என்பது முதுமொழி. இலங்கையில் இறந்தவர்கள் பேசிவிடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது அரசாங்கத்திற்கு.
    எமது மரம் நாட்டு விழா நவெம்பர் 27ந் திகதி நடைபெறுவதால் அது எம் இறந்தவர்களை எமது மக்களுக்கு நினைவுறுத்தி விடுமோ என்ற அச்சம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருப்பது புலப்படுகிறது. எந்த ஒரு மனிதன் இறந்தால்க் கூட அவனின் கிட்டிய சொந்தங்கள் அவனின் ஆத்மா சாந்தி அடைய வருடா வருடம் நடவடிக்கைகள் எடுப்பது வழக்கம். இது இந்துக்கள், பௌத்தர்கள் ஏன் மற்றைய மதத்தாருக்குக் கூடப் பொருந்தும்.
    எல்லாளன் இறந்தவுடன் அவன் ஞாபகார்த்தமாக துட்டகைமுனு ஒரு நினைவு மண்டபம் அமைத்து போவோர் வருவோர் இறந்த அந்த மகா மனிதனுக்கு மரியாதை காட்டவேண்டும் என்றும் அந்த இடத்தில் தமது வணக்கத்தைத் தெரிவித்துப் போக வேண்டும் என்று ஆணையிட்டான். நான் சிறுவனாக அனுராதபுரத்தில் குடியிருந்த போது எங்கள் வதிவிடத்திற்கு அண்மையில் சிற்றம்பலம் டாக்கீஸ் என்ற படமாளிகை அமைந்திருந்த இடத்தில் இருந்து கொஞ்சத் தூரத்தில்த் தான் எல்லாளன் நினைவிடம் (எலாள சொகன) இருந்தது. 1946 – 1947ம் ஆண்டுகளில் துவிச்சக்கர வண்டிகளில் அவ்வழியே சென்றவர்கள் அந்த நினைவிடத்தில் தரித்து நின்று தொப்பியைக் கழற்றி வணக்கம் தெரிவித்து விட்டு திரும்பவும் ஏறிச் சென்றதை நான் கண்கூடாகக் கண்டுள்ளேன். ஆனால் அந்த எலாள சொகன இப்பொழுது அழிக்கப் பட்டுள்ளது. அப்பேர்ப்பட்ட துட்டகைமுனுவின் வழியில் வந்ததாகக் கூறிக் கொள்பவர்கள் இன்று இறந்தவர் நினைவாக மரம் நாட்டுவதைக் கூடத் தடைசெய்கின்றார்கள் என்றால் எந்த அளவுக்கு எமது நாட்டு மக்கள் கலாச்சார, சமயப் பின்னடைவு அடைந்துள்ளார்கள் என்பது விளங்கும்.
    இது பற்றி பொலிசார் அறிவித்ததும் திரு ஐங்கரநேசனை அழைத்து இது பற்றிப் பேசி சட்டத்திற்குப் புறம்பாக நாம் நடந்துகொள்ளத் தேவையில்லை. என்றாலும் இறந்த எமது மக்களின் நினைவாக ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளில் விளக்குகளைக் கொழுத்தி ஒரு மரத்தையேனும் நாட்ட வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அறிவுறுத்தினேன்.
    இப்பேர்ப்பட்ட ஆணைகள் எமது உறவுகளின் நினைவை மீண்டும் வலியுறுத்தவே உதவுவன. அழிக்க முடியாது. இயற்கையோடு ஒன்றிய கலாச்சாரம் எமது தமிழர் கலாச்சாரம். கார்த்திகைப் பூக்கள் வருடத்திற்கு ஒரு முறை மகிழ்வுடன் கார்த்திகையில் பூக்கும். அதே காலகட்டத்தில் தான் எமது இறந்தவர்களை நினைவுறுத்தும் அந்தச் சோக நாட்களும் கார்த்திகையில் வருகின்றன. நாம் ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் கெடுபிடியின் மத்தியில் இறந்து போன எமது சொந்த பந்தங்களை மனதில் நினைத்து விளக்கேற்றி சமாதான முறையில் இன்று அவர்கள் நினைவாக வீட்டுக்கொரு மரம் நடுவோமாக! சமாதானம், சட்டம் ஆகியன கருதி தந்தை செல்வா ஞாபகார்த்த சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நாட்டும் விழா கைவிடப்பட்டுள்ளது என்று இத்தால் வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்.

    நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
    முதலமைச்சர்
    வடமாகாணசபை
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எமது மாவீரர்கள் மீது அரசின் அச்சம் பல் மடங்காக அதிகரித்துள்ளது முதல்வர் விக்னேஸ்வரன் சீற்றம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top