• Latest News

    November 23, 2013

    நிந்தவூரை ஆட்டங்காண வைத்த மர்ம மனிதர்களின் அட்டகாசம்

    எஸ்.றிபான்;
    நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக இரவு வேளைகளில் மிகவும் அச்சமான சூழல் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாலை 6 மணியைத் தாண்டியதும் வீடுகளுக்கு கற்களை வீசுதல், வீடுகளில் திருட்டுக்கள் இடம் பெறல், வீடுகளின் கூரைகளின் மேலால் வேகமாக நடத்தல் போன்ற நடவடிக்கைகள் காரணமாகவே நிந்தவூர் பிரதேச மக்கள்  அச்ச நிலைக்கு ஆளாhகியுள்ளார்கள். இச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களின் வேகத்துடனான நடவடிக்கைகள் காரணமாக, இச்செயல்களைச் செய்கின்றவர்கள் நன்கு பயிற்றப்பட்ட ஒருவரினால்தான் சாத்தியமாகும். அப்படியாக இருந்தால் யாராக இருக்கும், எந்தத் தரப்பினலாக இருக்கலாம் என்பன போன்ற வினாக்கள் நிந்தவூர் பிரதேச மக்களினால் எழுப்பப்பட்டன.
    இந்தப் பின்னணியில், நிந்தவூர் பிரதேச மக்கள் கிறீஸ் மேன் போன்றதொரு நடவடிக்கையாக இருக்கும் என்று ஒரு சாராரும், இராணுவத்தினராக இருக்கும் என்று மற்றரொரு தரப்பினரும், மிகவும் அனுபவமும், பலமுடைய திருடங்களின் செயல் என்று இன்னுமொரு பிரிவினரும் தங்களிடையே கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
    இந்நிலையில் நிந்தவூர் பிரதேசத்தில் இந்த மர்மக் குழுவினரின் நடவடிக்கைகளினாள் நாளுக்கு நாள் அச்ச நிலை அதிகரித்துக் கொண்டதோடு, இவர்களை பிடிக்க வேண்டுமென்ற உறுதியும் அதிகரித்துக் கொண்டே இருந்தன. இரவு முழுவதும் சந்திக்குச் சந்தி இளைஞர்களும், பெரியவர்களும்; மேற்படி நபர்களிடம் இருந்து ஊரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கண் விழித்து, மர்ம நபர்களை பிடிக்கும் துணிவில் இருந்தார்கள்.
    குறிப்பிட்ட செயல்களுக்கு முடிவு காண்பதற்காக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தiலைமையில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று 17.11.2013 ஞாயற்றுக்கிழமை இடம் பெற்றது. இதில், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, காரைதீவு இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி, நிந்தவூர் பிரதேச சபையின் தலைவர் எம்.ஏ.எம்.தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. ஜலீல் றிபாஉம்மா, நிந்தவூர்; ஜும்ஆப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையினர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
    இக்கலந்துரையாடலில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது பொது மக்கள் தங்களின் சந்தேகங்களை முன் வைத்தார்கள். இவர்களில் ஒரு பிரிவினர்தான் இந்த மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்கள். இதன் போது சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், காரைதீவு இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியும் தங்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என்று அடித்துக் கூறினார்கள்.
    இதனையடுத்து நிந்தவூரின் பதட்ட நிலையினை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் எடுப்பதாகவும், இதற்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கோரப்பட்டது. இதற்கமைவாக, நிந்தவூர் பிரதேசத்தில் இரவு 09மணிக்கு பின்னர் பொது மக்களில் பொலிஸாரினால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவினரைத் தவிர வேறு எவரும் வெளியே செல்லாது தங்களின் வீடுகளில் இருக்க வேண்டும். அவசர தேவைகளுக்காக வெளியே செல்லுகின்றவர்கள் தேசிய அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும். சந்தேகத்திற்குரிய வகையில் யாராவது நடமாடினால் அதனை உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். அல்லது நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு தெரியப்படுத்தல் வேண்டும். அத்தோடு, இரவு வேளைகளில் பொலிஸார் தொடரான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும், பொலிஸாரைத் தவிர வேறு எந்த பாதுகாப்புத் தரப்பினரும் இரவில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவும் மாட்டார்கள், சிவில் உடையில் வரவும் மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டன.
    இம்முடிவுகளுக்கு அமைவாக 17.11.2013 அன்று இரவு நிந்தவூர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் ஒலி பெருக்கி மூலமாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அன்று இரவு 09 மணிக்கு பிறகு நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக இருந்த பொது மக்களின் நடமாட்டங்கள் வெகுவாகக் குறைவடைந்து காணப்பட்டன.
    அத்தோடு, ஞாயற்றுக்கிழமை(17.11.2013) இரவு வழமைக்கு மாறாக பொலிஸாரின் நடமாட்டங்கள் அதிகமாகவும் இருந்தன. இதனால், பொது மக்கள் ஓரவிற்கு நிம்மதி அடைந்ததுடன் பொலிஸாhரின் மீது சுமாரான நம்பிக்கையும் ஏற்படத் தொடங்கியது. என்ற போதிலும், நிந்தவூர் பிரதேச மக்கள் தங்களின் பாதுகாப்பு, அமைதியான வாழ்க்கை போன்றவற்றிக்கு பொலிஸாரை மட்டும் நம்பியிருக்கவில்லை. அவர்களும் வீடுகளில் விழிப்பாகவும் தயாராகவும் இருந்தார்கள். அத்தோடு, நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள் ஆகியோர்களுடன் ஒவ்வொருத்தரும் ஒருவகையான வலைப்பின்னலையும் கொண்டிருந்தார்கள். இதனால், நிந்தவூரின் எந்தப் பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தாலும் மறுகனம் நிந்தவூர் பிரதேசத்தின் முழுவதற்கும் அது தெரியக் கூடியதாகவும் இருந்தது.
    இந்நிலையில், 17.11.2013 அன்று இரவு (10 மணிக்கு பின்னர் என்று தெரிவிக்கப்படுகின்றன) நிந்தவூர் கடற்கரைப் பூங்காவினை அண்மித்த இடத்தில் ஒரு குழுவினர் நடமாடுவதனை அப்பிரதேச மக்கள் அவதானித்துள்ளார்கள். இதனையடுத்து, இத்தகவலை அறிந்தவர்கள் தங்களுக்குரிய வலைப்பின்னலுடன் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினார்கள்.
    இந்தப் பின்னணில் கடற்கரையில் வைத்து, மர்மக் குழுவினர் உடைமாற்றிக் கொண்டிருப்பதனை அவதானித்த பொது மக்களில் சிலர் அவர்களை சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுடன் கதைத்த போது, அவர்கள் சிங்களத்தினால் கதைத்துள்ளார்கள். இவர்கள் ஏற்கனவே அணிந்து இருந்த உடையை கழற்றிவிட்டு, விசேட அதிரடிப் படையினர் அணிந்து கொள்ளும் உடையை மாற்றிக் கொண்டிருந்துள்ளார்கள். உடையை அடையாளப்படுத்திக் கொண்ட பொது மக்களுக்கு விசேட அதிரடிப்படையினர் என்று முடிவு செய்து கொள்வதற்கு சிரமங்கள் ஏற்படவில்லை.
    இதற்குள், நிந்தவூர் பிரதேசத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்புள்ளதென்ற முடிவுக்கு பொது மக்கள் வந்தார்கள். நடைபெற்ற நிகழ்வுகள் அவ்வாறானதொரு முடிவுக்கு வர வேண்டிய நிலையை பொது மக்களுக்கு ஏற்படுத்தியது. இதனால், பொது மக்கள் இவர்களைப் பற்றி பொலிஸாருக்கு அறிவித்துவிட்டு, சீருடை மாற்றிக் கொண்டிருந்தவர்களை மடக்கிப் பிடிப்பதற்கு முயற்சிகளை எடுத்துள்ளார்கள்.
    பொது மக்களின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக குறிப்பிட்ட குழுவினர் வானை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை தீர்த்தார்கள். இவர்களின் இந்நடவடிக்கையினை அடுத்து, நிந்தவூர் பெரியபள்ளிவாசலில் பொது மக்கள் அனைவரும் கடற்கரைக்குச் செல்லுமாறு அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டன.
    இதனையடுத்து பொது மக்களும் பெருமளவில் கடற்கரைப் பிரதேசத்தினை அடைந்தார்கள். இதே வேளை, சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார்களும் வருகை தந்திருந்தார்கள். இந்நிலையில், பொது மக்களுக்கும், விசேட அதிரடிப்படையினருக்கும் இடையே பலத்த முறுகல்நிலை ஏற்பட்டது. பொலிஸார் நிந்தவூரின் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொது மக்களினால் சொல்லப்படுகின்ற அதிரடிப்டையினரை கைது செய்வதா அல்லது பொது மக்களை கலைப்பதா என்ற முடிவுக்கு வர முடியாத நிலையில் நின்று கொண்டிருந்தார்கள்.
    இந்நிலையில் வானை நோக்கி வேட்டுக்களை தீர்த்துக் கொண்ட படையினரில் ஒருவர் நிலத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை மேற் கொண்டுள்ளார். இந்நிலையில் அவ்விடத்திற்கு ஏற்கனவே வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் ஆகியோர்களும் நின்றுள்ளார்கள். பொது மக்களுக்கு விபரீதங்கள் ஏற்பட்டுவிடுமென்ற எண்ணத்தில் நிலத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்துக் கொண்டிருந்த படைத் தரப்பினரின் காலைப் பிடித்து சுட வேண்டாமென்று தவிசாளர் கேட்டுள்ளார். இதன் போது, படையினர் தவிசாளரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
    இவ்வாறு, நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கையில், படைத் தரப்பினரின் மற்றுமொரு பிரிவினர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து, வேட்டுக்களும் முன்பை விடவும் அதிகமாக தீர்க்கப்பட்டு, பொது மக்களினால் சுற்றி வளைக்கப்பட்ட படையினர், அங்கிருந்து பாதுகாப்பாக மீட்டுச் செல்லப்பட்டார்கள். சுமார் ஒரு மணித்தியாளங்களாக வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுன்றன.
    மேற்படி சம்பவத்தினால் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் இல்யாஸ் என்று அழைக்கப்படுகின்றவரும்; கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். இன்னும் சில பொது மக்கள் சிறுசிறு காயங்களுக்குள்ளானார்கள்.
    இதனைத் தொடர்ந்து, நிந்தவூர் பிரதேசத்தில் ஒரு கலவரமானதொரு சூழல் காணப்பட்டது. பொது மக்கள் இரவோடு, இரவாக கல்முனை – அக்கரைப்பற்று வீதியின் குறுக்கே போக்குவரத்தினை தடை செய்யும் வகையில் தடைகளை ஏற்படுத்தினார்கள்.
    மறுநாள் 18.11.2013 திங்கட் கிழமை நிந்தவூர் பிரதேசத்தில் பூரணமான ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியினுடனான போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.
    இதனையடுத்து, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சிரேஸ்ட பொலிஸ் பிரதிமா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது. இதில் அம்பாரை மாவட்டத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள், பைசால் காசிம் எம்.பி. நிந்தவூர் பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இதன் போது, சம்பவத்தில் தொடர்புடையவர்ளாக கருதப்படுகின்ற விசேட அதிரடிப் படையினர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடு;க்கப்படுமென்று பொலிஸாரினால் கூறப்பட்டது. இதே வேளை, பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேச சபையின் தவிசாளருடனும் பேச்சுக்களை மேற்கொண்டார்கள்.
    இதற்கமைய நிந்தவூர் பெரியபள்ளிவாசலின் ஒலி பெருக்கி மூலமாக பொது மக்கள் அனைவரும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
    ஆயினும், ஒரு தரப்பினர் தொடர்ந்தும் வீதித் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். பொலிஸாருக்கும், பொது மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே எடுக்கப்பட்ட முடிவுகள் தோல்வியில் முடிவடைந்ததனை அடுத்து 19.11.2013 செவ்வாயக்கிழமை காலை 08.30 மணியளவில் அம்பாரை மாவட்ட சிரேஸ்ட டிஐஜி இந்திரன் தலைமையிலான சுமார் 300இற்கும் மேற்ப்பட்ட பொலிஸார் நிந்தவூர் பிரதேசத்திற்குள் காரைதீவு வழியாக பிரவேசித்தார்கள். இதே வேளை, மற்றுமொரு பொலிஸ் பிரிவினர் அக்கரைப்பற்றில் இருந்து நிந்தவூருக்குள் பிரவேசித்தது.
    பொது மக்கள் கலைந்து செல்லுமாறும், வீதித் தடைகளை அகற்றுமாறும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலமாக பொது மக்களை கேட்டுக் கொண்ட போதிலும், பொது மக்கள் கலைந்து செல்லவில்லை. பொது மக்களில் சிலர் பொலிஸாரை நோக்கி கற்களை வீசினார்கள். இதனைத் தொடர்ந்து பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளைச் சுட்டு பொது மக்களை கலைத்தார்கள். நிந்தவூரில் இயல்பு நிலையும் திரும்பியது.
    இத்தோடு, பிரச்சினை முடிவடைந்து விட்டதென்று இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் குறிப்பாக பொலிஸார் இருந்து விட முடியாது. நிந்தவூர் பிரதேசத்தில் இப்பத்தி எழுதிக் கொண்டிருக்கும் வரைக்கும் பதற்றமான சூழலே காணப்பட்டன.
    19.11.2013 இரவு கூட நிந்தவூர் பிரதேசத்தின் சில இடங்களில் பொது மக்களை அச்சத்திற்கு உட்படுத்திய மர்ம நபர்களின் நடமாட்டங்களை பொது மக்கள் அவதானித்ததாக தெரிவிக்கின்றார்கள். அதிரடிப்டையினரில் ஒரு குழுவினர்தான் மேற்படி சம்பவங்களைச் செய்தார்கள் என்ற பொது மக்களின் கருத்துக்களை வைத்துப் பார்க்கின்ற போது, குறிப்பிட்ட அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் முழுமையாக நிந்தவூர் பிரதேசத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும், பொது மக்களை அச்சுறுத்துமு; வகையிலான நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளதென்றால், நிந்தவூரில் இடம் பெற்ற சம்பவங்களை மேற்கொண்டவர்கள் யார்?
    நிந்தவூரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இச்சம்பவங்களுடன்; தொடர்புடையவர்களை கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவது பொலிஸாரின் பொறுப்பாகும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்புத் தரப்பினர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறுமாயின் பாதுகாப்புத் தரப்பினரின் மீது பொது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மேலும், இழக்கப்பட்டுப் போய்விடும்.
    இதே வேளை, தங்களின் மீது தொடுக்கப்படுகின்ற தொந்தரவுகள், பிரச்சினைகளையிட்டு தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கு பொது மக்களுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால். அதனை ஒரு வரம்புக்கு உட்பட்ட வகையில் மிகவும் நாகரிகமாக காட்டுதல் வேண்டும். அத்தோடு, பொதுப் பிரச்சினை ஒன்றுக்கு தமது எதிர்ப்பைக் காட்டும் போது, ஒரு தலைமைத்துவத்தின் கட்டுப்பாட்டில் செய்ய வேண்டும். ஒவ்வெர்ருவரும் தாங்கள் நினத்த மாதிரி எதிர்ப்புக்களை காட்டும் போது. அவை, எதிர்பார்க்கின்ற வெற்றியைக் கொடுக்காது. பல்வேறுபட்ட துன்பங்களையே ஏற்படுத்துவதாக இருக்கும்.
    நன்றி:விடிவெள்ளி

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரை ஆட்டங்காண வைத்த மர்ம மனிதர்களின் அட்டகாசம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top