• Latest News

    November 29, 2013

    நிந்தவூர் மர்ம நபர்கள் எங்கே?

    எஸ்.றிபான்-
    அம்பாரை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் அசாதாரண நிலையினை தோற்றி வைத்துள்ள மர்ம குழுவினரின் நடமாட்டங்கள் இப்பத்தி எழுதும் வரை இருந்து கொண்டிருக்கின்றன. மர்ம நபர்களின் நடமாட்டங்கள் தொடர்பில் ஏற்பட்ட குழப்ப நிலையினை அடுத்து நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த 18.11.2013 திங்கட் கிழமை;தில் பூரண ஹர்;த்தால் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஹர்த்தால் மறுநாள் 19.11.2013 அன்று தொடர்ந்ததனால் பொலிஸார் மேற் கொண்ட நடவடிக்கையில் பொது சொத்துக்களை  சேதப்படுத்தியமை, ஆர்ப்பாட்டம் செய்து போக்குவரத்திற்கு தடையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 21 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
    இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இரண்டு கட்டங்களாக ரூபா 50 ஆயிரம் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். இதே வேளைஈ 17.11.2013 அன்று இரவு சந்தேகத்தின் பேரில் பொது மக்களினால் சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்புத் தரப்பினரை இது வரை (இப்பத்தி எழுதும் வரை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவில்லை.
    நிந்தவூர் பிரதேசத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் சம்பங்களை யார் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதில் இன்னமும் மர்மங்களே இருந்து கொண்டிருக்கின்றன. அண்மைக் காலமாக நிந்தவூரில் திருட்டு, வீடுகளுக்கு கற்களை எறிதல், கதவுகளை தட்டுதல் போன்ற சம்பங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
    ஆனால், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கின்ற போது, மக்களின் இயல்பு வாழ்க்கையை இரவு வேளைகளில் குழப்புவதனைக் நோக்கமாகக் கொண்டதாகவே இருக்கின்றன. இவர்களின் பிரதான நோக்கம் திருடுவதல்ல. மேலும், நிந்தவூரில் இடம் பெற்ற திருட்டுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும். அதன் படி பார்க்கின்ற போது, மக்களை அச்ச மூட்டுவதனை நோக்காகக் கொண்ட இக்குழுவினர் ஏதோவொரு திட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவே இருக்கின்றன.
    திருட வருகின்றவர்கள் திருடப் போகின்ற இடத்தில் உள்ளவர்கள் தூங்கும் வரைக்கும் ஒழித்துக் காத்துக் கொண்டிருப்பான். அல்லது, தூங்கியதன் பின்னரே வருகை தருவான். ஆனால், நிந்தவூரில் மர்ம நபர்கள் தூங்குகின்றவர்களை தூக்கத்தில் இருந்து கலைப்பதற்காகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
    கடந்த 18.11.2013 ஆம் திகதியில் இருந்து நிந்தவூரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களுடன் தொடர்புடைய மர்மக் குழுவினரை பிடிக்க வேண்டுமென்ற நோக்கில் பெருமளவில் பொலிஸார் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால், மர்ம நபர்களை பிடிக்க முடியாதுள்ள அதே வேளை, மர்ம நபர்களின் நடவடிக்கைகளும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
    நிந்தவூரில் இவ்வாறு சம்பவங்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்தாலும், இது வரைக்கும் எவரும் தங்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை. மக்கள் பெரிய பள்ளிவாசலிலேயே முறைப்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். பள்ளிhவசல் நிர்வாகமே பொலிஸிற்கு தெரிவிக்கின்றன. பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு சிலர் கேட்டுக் கொண்டாலும், மக்கள் அதற்கு ஆர்வம் காட்டுவதாகயில்லை. பொலிஸில் முறைப்பாடு செய்து என்ன பயன் என்ற மனோ நிலை மக்களிடையே காணப்படுகின்றன.
    நிந்தவூரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை பாதுகாப்புத் தரப்பினர்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றதொரு எண்ணம் மக்களிடையே பரவலாக இருந்து கொண்டிருப்பதும் பொலிஸில் முறைப்பாடு செய்து கொள்ளாதிருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும். மேலும், நிந்தவூரில் ஒரு பொலிஸ் நிலையத்தினை ஏற்படுத்துவதற்காகவும், அதற்கானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தவுமே இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் நிந்தவூர் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள். நிந்தவூரில் பொது மக்களினால் சந்தேகத்தின் பேரில் சுற்றி வளைக்கப்பட்டவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தாமை, அவர்கள் ஏன் நிந்தவூருக்கு வருகை தந்தார்கள் என்பதில் தெளிவு இன்மை, போன்றன மக்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகங்களை வலுப் பெறச் செய்வதாகவே இருக்கின்றன.
    கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வடக்கு. கிழக்கு மாகாணங்களில் இடம் பெற்ற கிறீஸ் மனிதர்களின் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று இன்னமும் பாதுகாப்புத் தரப்பினர் கண்டு பிடிக்கவில்லை. ஆனால், சம்பவங்கள் நடைபெற்ற வேளைகளில். அச்சம்பவங்களை கள்ளக் காதலர்களின் நடவடிக்கையாகவே பாதுகாப்புத் தரப்பினர் சித்தரித்தனர். கிறீஸ் மனிதர்களின் நடவடிக்கைகள் பெண்களை அச்சமூட்டுவதாக இருந்தன. சில இடங்களில் பொது மக்களினால் துரத்தப்பட்ட கிறீஸ் மனிதர்கள் என்று கருதப்பட்டவர்கள் இராணுவ முகாம்களுக்குள் தஞ்மடைந்தும் கொண்டார்கள்.
    ஆகவே, நிந்தவூரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் மர்ம நபர்களின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். அல்லது அரசாங்கத்திற்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் செய்வதாக இருக்க வேண்டும் என்றே எண்ண வேண்டியுள்ளன.
    நிந்தவூரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களை வைத்துக் கொண்டு, பாதுகாப்புத் தரப்பினர்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற முடிவுக்கு கண் மூடித்தனமாக வரவும் கூடாது. நிந்தவூரில் ஒரு பொலிஸ் நிலையத்தினை அமைக்க வேண்டுமாக இருந்தால், அதற்கு சம்பவங்கள் தேவையில்லை. நாட்டில் பல இடங்களில் இராணுவ முகாம்களும், பொலிஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு யாருடைய சம்மதங்களும், சம்பவங்களும் அரசாங்கத்திற்கு தேவைப்படவில்லை. அதே போன்று, நிந்தவூரிலும் செய்வதற்கு அரசாங்கத்திற்கு தன்னதிகாரம் இருக்கின்றது.
    இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்பு நிந்தவூரில் கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டன. சில திருட்டுக்கள் பொலிஸார் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த வேளைகளிலும், பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளைகளிலும் இடம் பெற்றுள்ளன. இவற்றை வைத்துக் கொண்டு, பொலிஸார் மீதே மக்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டன.
    இந்நிலையில், சம்மாந்துறைப் பொலிஸார் விசேட திட்டமொன்றினை வகுத்து, நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, மிகவும் திட்டமிட்ட வகையில், பொலிஸாரின் மீது மக்களுக்கு சந்தேகங்கள் ஏற்படும் வகையில் தமது திருட்டுக்களை மேற்கொண்டவர்களை பொலிஸார் கைது செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆயினும், தற்போது நிந்தவூரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கண்டு பிடிப்பது பாதுகாப்புத் தரப்பினரின் கடமையாகும். அவர்களுக்கான முழு ஒத்துழைப்பையும் மக்கள்  வழங்குதல் வேண்டும். ஆனால், கிறீஸ் மனிதர்கள் யார் என்று இற்றைவரைக்கும் தெரியமால் இருப்பதனைப் போன்று, மர்ம நபர்களின் விடயமும் இருந்து விடக் கூடாதென்பதே எமது எண்ணமாகும்.
    Vidivelli-

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் மர்ம நபர்கள் எங்கே? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top