• Latest News

    November 01, 2013

    சிராஸின் பேராசைக்கு முஸ்லிம் காங்கிரஸால் தீனி போட முடியாது! அவர் இனி மேயராக இருக்கவும் முடியாது; ரவூப் ஹக்கிம் காட்டம்


     சிராஸ் மீராசாஹிப் கல்முனை மாநகரசபை மேயராக பதவியில் இருப்பதை நவம்பர் 1ம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கிகரிக்க மாட்டாது. அவர் இத்தினத்திலிருந்து அந்தப் பதவியில் சட்டவிரோதமாகவே இருக்கிறார் என மிகவும் காட்டமாக தனது முடிவை அறிவித்த கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதை தாம் எந்த நெகிழ்வு தன்மையும் இல்லாமல் மிகவும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் குறிப்பிடுவதாகவும் சொன்னார். 

    அத்துடன்  அவருக்கு ஆதரவளிக்க முன்வரும் கல்முனை மாநகரசபையின் எந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருக்கும் எதிராக கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

    வெள்ளிக்கிழமை (நவம்பர் 1ம் திகதி)  கண்டியில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். அக்குரணை பிரதேச சபையில் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர், மூஹ்சீன் ஹாஜீயாரின் மறைவையடுத்து, அந்த  வெற்றிடத்துக்கு எஸ்.எம். மிஹ்லார் என்பவர் தலைவர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்த நிகழ்வின் போதே அமைச்சர் ஹக்கீம் மிகவும் ஆவேசத்துடன் இவ்வாறு கூறினார்.

    அங்கு கூடியிருந்த கட்சி ஆதரவளார்கள் மத்தியில் உரையாற்றும் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் மேலும் கூறியதாவது: கட்சிக்கு கட்டுப்படுவது, கட்சியின் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பது சம்பந்தமான பிரச்சினை இப்பொழுது உக்கிரமடைந்து உள்ளது. கட்சிக்கு யாரும் வாக்குறுதி வழங்கினால், அது நிறைவேற்றப்படவேண்டும். அதை விடுத்து தேவையில்லாமல் ஊர்வாதம், பிரதேச வாதம் பேசும் எவருக்கும் இந்தக் கட்சியில் அறவே இடம் கிடையாது.

    யார், எங்கு, எந்தபிரகடனத்தை செய்தாலும் இந்த தலைமைத்துவமும் இந்தக் கட்சியும் அதற்கு மசியப்பபோவதில்லை. எவரது பதவி பேராசைக்கும் நாங்கள் தீனி போட முடியாது. அவர் இன்றிலிருந்து கட்சியின் ஊடாக பெற்ற மேயர் பதவியில் இருப்பதற்கு அவருக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

    தான்  ஊருக்கு போய் தனது உறவினர்களிடம்  கேட்டபின் இறுதி அமர்வையும் மாநகரசபையில் ராஜினாமாக் கடிதத்தை ஒப்படைப்பதாக சொல்லிவிட்டு போனார். ஆனால், அவர் அங்கு சென்று நடாத்திய கலாட்டாவைப் பாருங்கள்.  முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய உறுப்பினர்களில் ஒத்துழைப்பும் ஆதரவும் இன்றி, அவர் கல்முனை மாநகரசபையில் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்ப்போம்.

    சிராஸ் மீராசாஹிபுடைய பேச்சு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பேசும் பேச்சல்ல. இவ்வாறு இந்தக் கட்சியில் கட்டுப்பாட்டை மீறி நடந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் எத்தனையோ பேர் இப்போது இவருக்கு ஒத்தாசையாக இருக்கலாம். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறனவற்றை இனியும் அனுமதிக்காது.

    சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஜவாப்தாரி. ஆனால் தனிமனிதர்களுடைய பதவி ஆசைக்கு நாங்கள் ஜவாப்தாரியாக இருக்க முடியாது.  முடிவு என்றால் அது ஒரே முடிவுதான். அதில் நாம் மிகவும் தெளிவாக இருக்கிறோம். இந்த விடயத்தில் நாம் உச்சக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம். 

    வெளியில் இருந்து கொண்டு கல்முனை மாநகர எல்லையில் பிரச்சினையை தோற்றுவிக்க யாருக்கும் இடமளிக்க முடியாது என்று எச்சரிக்கிறேன். அக்குரணை பிரதேசசபையின் முகா. உறுப்பினரின் சத்தியப்பிரமாண நிகழ்வில் மத்திய மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.எம். உவைஸ் அக்குரணை பிரதேச சபை புதிய உறுப்பினர் எஸ்.எம். மிஹ்லாரும் உரையாற்றினர். மத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம். நயீமுல்லாஹ்வும் கலந்து கொண்டார்.


    SLMC ஊடகப் பிரிவு-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிராஸின் பேராசைக்கு முஸ்லிம் காங்கிரஸால் தீனி போட முடியாது! அவர் இனி மேயராக இருக்கவும் முடியாது; ரவூப் ஹக்கிம் காட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top