சஹாப்தீன் ;
சுழற்சி முறை இணக்கப்பாட்டையும், கட்சியின் தீர்மானத்தையும் மீறியுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிவு நம்பவர் முதலாம் திகதியிலிருந்து மேயராக செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கிம் உத்தரவிட்டுள்ளார்.
இதனையும் மீறி அவர் மேயராக செயற்பட முற்பட்டால் அவர் மீத சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.
சுழற்சி முறை இணக்கப்பாட்டின் பிரகாரம் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று தான் பணித்ததுடன் அதற்கு ஒக்டோபர் 31 வரை காலக்கெடு விதித்திருந்ததாகவும் ரவூப் ஹக்கிம் சுட்டிக் காட்டியுள்ளார்.
இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கிம் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் ' கட்சியின் கட்டுக் கோப்பையும் மீறி தனது பதவியை தக்க வைத்துக் கொள்ளவதற்காக சாய்ந்தமருதில் பிரதேச வாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் சிராஸ் மீராசாஹிவு தீவிரமாக ஈடுபட்டு;ள்ளார்.
இதன் மூலம் கல்முனை மாநகர எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களுள் முரண்பாடுகளையும் ஏற்படுத்த அவர் முனைந்துள்ளார். ஆகையினால், முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் தத்துணிவு, அதிகாரத்தின் பேரில் கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் என்பவர் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது எனப் பிரகடனம் செய்கிறேன். அத்துடன், கல்முனை மாநகர சபையின் எமது கட்சி சார்பான ஏனைய பத்து உறுப்பினர்களும் அவருக்கு எவ்வித்திலும் ஒத்துழைப்பு வழங்க முடியாது எனவும், அதனை மீறி அவருடன் ஒத்துர்ழைக்கும் உறுப்பினர்கள் மீது எமது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்றும் கண்டிப்பான உத்தரவைவிடுகிறேன் என் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கிம் தனது விசேட அறிவித்தலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் கேட்டுப் பெற்றுக் கொண்ட சிராஸ் மீராசாஹிவு கடந்த (30.10.2013) புதன் கிழமை இரவு சாய்ந்தமருதில் பள்;ளிவாசல் தலைவர், உலமாக்கள், பௌத்த தேரர் ஒருவர் மற்றும் பொது மக்கள் பலரையும் அழைத்து தான் முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமா என்பதனை நீங்களே தீர்மானிக்க வேண்டும். உங்களின் எண்ணம் போல் நடப்பேன் என்று சிராஸ் மீராசாஹிவு அங்கு குழுமி இருந்தவர்களிடம் சொன்னார். இறுதியில் கல்முனை மாநகர சபையின் முதல்வராக பதவிக்கான ஆயுட் காலம் வரைக்கும் சிராஸ் மீராசாஹிவு இருக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் பிரகாரம் சிராஸ் மீராசாஹிவு முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்யவாரா? என்பது அடுத்து எழும் கேள்வி. தான் முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்ய விருப்பங் கொண்டுள்ளேன். ஆனால், வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக என்னால் முடிவு எடுக்க முடியாதென்று கூறியுள்ளார். நான் விரும்பாது என்னை எவரும் முதல்வர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார். இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸூம், அதன் தலைமையும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளன.
இதே வேளை, சிராஸ் மீராசாஹிவு உலமாக்களுக்கு முன் செய்து கொண்ட பைஅத்திற்கு (உடன்படிக்கை) அமைவாக முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி தெரிவித்துள்ளார்.
ஆனால், தான் இரண்டு வருடங்களின் பின்னர் முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்வேன் என்று எந்த எழுத்து மூல ஆவணங்களிலும் கைச்சாத்திட்டு உடன்படிக்கை செய்யவில்லை என்று சிராஸ் மீராசாஹிவு கூறுகின்றார். முதல்வர் பதவியில் ஏற்பட்ட சர்ச்சையை சமாளித்துக் கொள்வதற்காக இரண்டு வருடங்களின் பின்னர் இராஜினாமாச் செய்வதற்கு ஏற்றுக் கொள்ளுங்கள், அதனை பின்னர் பார்த்துக் கொள்ளலாமென்று தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார். அது பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான ஒரு உபாயமேயன்றி, இரண்டு வருடங்களின் பின்னர் முதல்வவர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்ற உறுதி மொழியல்ல என்றும் சிராஸ் மீராசாஹிவு கூறுகின்றார். இதில் எது உண்மை என்பதே நமக்கு இருக்கின்ற தெரிவாகும். உண்மைகளை தெரியப்படுத்த வேண்டியது முஸ்லிம் காங்கிரஸின் பொறுப்பாகும்.
இதே வேளை, முதல்வர் பதவி சாய்ந்தமருதிற்குரியதென்ற விவாதம் முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளர் எம்.ஐ.பிர்தௌஸ், சிராஸ் மீராசாஹிவு மற்றும் சிலரினால் மிகவும் அழுத்தமாக தெரிவிக்கப்படுகின்றன. முதல்வர் பதவி சாய்ந்தமருதிற்குரியதென்ற விவாதத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது. முதல்வர் பதவி கட்சிக்குரியதாகும். முதல்வர் பதவி சாய்ந்தமருதிற்கு வழங்க வேண்டுமென்று சொல்லுவதனை விடவும், தேர்தலில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்ற சிராஸ் மீராசாஹிவுக்கு வழங்க வேண்டுமென்று வேண்டுவதும், விவாதிப்பதுமே பொருத்தமானதாக இருக்கும்.
முதல்வர் பதவி சாய்ந்தமருதிற்குரியது என்றால், ஏனைய கிராமத்து மக்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கும், சிராஸ் மீராசாஹிவுக்கும் வாக்களிக்கவில்லையா என்ற கேள்விகள் எழுவதனை தவிர்க்க முடியாது. சாய்ந்தமருது மக்கள் சிராஸ் மீராசாஹிவு முதல்வராக வர வேண்டுமென்று வாக்களித்தார்கள் என்பது உண்மையாகும். ஆனால், கல்முனை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட ஏனைய பிரதேச வாக்காளர்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்காது விட்டிருந்தால், சிராஸ் மீராசாஹிவால் முதல்வராக வர முடியாது என்ற உண்மையையும் சிராஸ் மீராசாஹிவுவின் அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் இங்கு கல்முனை மாநகர சபைக்கு யார் முதல்வராக வர வெண்டுமென்று கூற வரவில்லை. ஆனால், யார் முதல்வர் பதவியை வேண்டி நின்றாலும், யாருக்கு வழங்க வேண்டுமென்று முடிவுகளை எடுத்துக் கொண்டாலும் பருவாயில்லை. ஆனால், நமது வார்த்தைகளும், விவாதங்களும் பிரதேச வாதங்களையும், பிரிவுகளையும் எற்படுத்தி விடக் கூடாது. இதனால்தான், சாய்ந்தமருதிற்கான முதல்வர் பதவியை தாருங்கள் என்று கருத்துக்களை முன் வைக்காது, அதிக விருப்புவாக்குகளைப் பெற்றவருக்கு முழுமையாக முதல்வராக இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் வழங்குங்கள் என்று கேட்பதே சிறந்ததென்று சொல்ல வருகின்றோம்.
ஆனால், ரவூப் ஹக்கிம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் சிராஸ் மீராசாஹிவு முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்றே கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளராக அதிக விருப்புவாக்குகளைப் பெற்றுக் கொண்ட இஸ்மாயில் நைஸர் இரண்டு வருடங்கள் இருந்த நிலையில், அவர் கடந்த வாரத்திற்கு முந்திய வாரம் ரவூப் ஹக்கிம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். இறக்காமாம் பிரதேச சபைத் தேர்தலின் பின்னர் தவிசாளர் பதவியில் கல்முனை மாநகர சபையைப் போன்று பிரச்சினைகள் ஏற்பட்டன. இதன் போது, இரண்டு வருடங்களுக்கு வரிப்பத்தான்சேனையை சேர்ந்த நைஸரும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு இறக்காமத்தைச் சேர்ந்த உமர்கத்தா ஜாபிர் என்பவரும் இருக்குமாறு கூறியிருந்தார். இதற்கு அமைவாகவே நைஸர் பதவி துறக்கும் கடிதத்தினை வழங்கியுள்ளார்.
இந்தப் பின்னணியில், சிராஸ் மீராசாஹிவு முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்யா விட்டால், ரவூப் ஹக்கிம் நைஸருக்கு அநியாயம் செய்தவராகவே கருதப்படுவார். அத்தோடு, சிராஸ் மீராசாஹிவு முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்யாது அடம்பிடித்துக் கொண்டு நிற்கும் போது, அவரின் முடிவு முஸ்லிம் காங்கிரஸிற்கு புதியதொரு தலையிடியாக தோற்றம் பெறும்.
முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக நாடாளுமன்றம் சென்றவர்கள், ஏதோவொரு காரணத்திற்காக கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி செயற்பட்டுக் கொண்டார்கள். அவர்களை நாடாளுமன்ற பதவியிலிருந்து நீக்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துக் கொண்ட அனைத்து பிரயத்தனங்களும் தோல்வியை தழுவிக் கொண்டன. அதனால், கட்சிக்கு வீழ்ச்சி ஏற்பட்டன.
இந்நிலையில், கல்முனை முதல்வர் பதவி விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வரிந்து கட்டிக் கொண்டு, முதல்வர் பதவியில் இருந்து சிராஸை அகற்ற வேண்டுமென்று முயற்சிகளை எடுத்து, அதில் தோல்வியை சந்தித்தால், முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கும், கட்சிக்கும் இருக்கின்ற மீதமான மதிப்பும் மரியாதையும் குறைந்துவிடும். கட்சியின் தலைமையை பொம்மையாகவே கருதிக் கொள்வர். ஆதலால், ரவூப் ஹக்கிம் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.
மறுபுறத்தில், கட்சியினதும், தலைமையினதும் கட்டுப்பாட்டை மீறி, முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்யாது இருந்தால், கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையின் மூலமாக சிராஸிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதில் கட்சி வெற்றி பெற்றால் சிராஸ் மீராசாஹிவுவின் அரசியல் முற்றும் சூனியமாக மாறிவிடலாம். இதனால், அவர் மாற்றுக் கட்சிகளை நாட வேண்டியேற்படலாம்.
கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி, எல்லா வகையிலும் வெற்றி பெற்று, கல்முனை மாநகர சபையின் முதல்வராக தொடர்ந்தும் சிராஸ் மீராசாஹிவு இருந்தாலும், மாநகர சபையினை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்க் கட்சிகளின் தயவிலேயே முழுமையாக தங்கியிருக்க வேண்டும். எதிர்கட்சியினர்; பொருத்த வரை சிராஸ் மீராசாஹிவு முதல்வராக இருக்க வேண்டுமென்ற அன்பினால், அவரின் கரங்களை பலப்படுத்த மாட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸில் குழப்பங்கள் ஏற்பட்டு, அக்கட்சி இன்னமும் சீரழிவுகளை சந்திப்பதனையே விரும்புவார்கள். அதற்காக சிராஸ் மீராசாஹிவுவை ஆதரித்து நிற்கின்ற இன்றைய சூழலில், நாளை முதல்வரை எதிர்த்தால்தான் முஸ்லிம் காங்கிரஸிற்குள் குழப்பம் எற்படும், சீரழிவுகள் ஏற்படுமென்றால் அதனையும் செய்வார்கள்.
அரசியலில் தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் அறிந்து கொள்ளாது போனால், நிலைத்திருக்க முடியாது. அந்த வகையில், சிராஸ் மீராசாஹிவு மீது அரசியல் காழ்ப்பணர்ச்சி கொண்டவர்கள் முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள், மாநகர சபையின் முதல்வர் பதவியின் கால எல்லை பற்றி செய்து கொள்ளப்பட்டதாக பேசப்படுகின்ற கனவான் ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி சிராஸ் மீராசாஹிவுவின் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய சூழலில் அவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டு வருவதாகவே எமது கணிப்பீடு இருக்கின்றது.
சிராஸ் மீராசாஹிவு முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்யமாட்டார் என்ற எடுகோளின் அடிப்படையிலேயே, சிராஸ் மீராசாஹிவுக்கு எதிரான நகர்வுகளை மேற்கொண்டார்கள். சிராஸ் மீராசாஹிவு கல்முனையின் முதல்வராக நான்கு வருடங்களுக்கு இருந்தாலும், பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வரக் கூடாதென்பதே அவர்களின் திட்டமாகும். இதற்கு, கல்முனை மாநகர எல்லைக்கு அப்பால், கட்சியின் கட்டுப்பாட்டையும், தலைமையின் சொல்லையும் ஏற்றுக் கொள்ளாதவர் என்று காட்ட வேண்டும். தலைமையின் கோபத்தையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிராஸ் மீராசாஹிவு முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்யமாட்டேன் என்று சொல்ல வேண்டும். அதுதான் இப்போது நடந்துள்ளது.
ஆனால், சிராஸ் மீராசாஹிவுவின் திறமை போன்றவற்றிலும், அவர் கட்சியில் இருக்க வேண்டுமென்றும் ரவூப் ஹக்கிம் அதிகம் விரும்பினார். அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டவராக இருந்தார். ரவூப் ஹக்கிம் கட்சிக்குள் புதியவர்களை உள்வாங்கி தன்னை அதிகாரமிக்க தலைமைத்துவமாக பரிநாமித்துக் கொள்வதற்கு திட்டமிட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
ஆதலால், சிராஸ் மீராசாஹிவு தமது அரசியல் எதிரிகளின் எண்ணங்களை தவிடுபொடியாக்குவதற்கு ரவூப் ஹக்கிம் கேட்டுக் கொண்டதனைப் போன்று நைஸரைப் போன்று உடனடியாக முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து இருந்தால், அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களிடையே இப்போதுள்ள மக்கள் பிரதிநிதிகள் எல்லோரையும் விடவும் அதிக செல்வாக்குப் பெற்றவராக உருப் பெருத்திருப்பார்.
முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் பதவிகளுக்காக கட்சியினை அடமானம் வைப்பதற்கு கடைகளைத் தேடிக் கொண்டு, ஓடிக் கொண்டிருக்கின்ற இன்றைய அரசியல் சூழலில், கட்சிக்காக பதவியை தூக்கி வீசியவர் என்ற மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டிருக்கும். இந்நிலையில் பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சிராஸ் மீராசாஹிவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியாக வேண்டும். அவ்வாறு, வாய்ப்பு வழங்காது, முஸ்லிம் காங்கிரஸ் சதி செய்தாலும், அவர் மாற்றுக் கட்சியில் போட்டியிட்டும் போது, முஸ்லிம் காங்கிரஸிற்கு சவாலாகவே இருக்கும். சிராஸ் மீருhசாஹிவு மீது அனுதாபம் ஏற்படவும், முஸ்லிம் காங்கிரஸின் மீது கோபமும் ஏற்படவும் செய்துவிடும். ஆனால், ரவூப் ஹக்கிம் அடுத்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸை அம்பாரை மாவட்டத்தில் மரச்சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு புது முகங்களை இப்போதே தேர்வு செய்து வைத்துள்ளார். அதில் ஒருவர்தான் சிராஸ் மீராசாஹிவு. இதனை ரவூப் ஹக்கிம் வெளிப்படையாக சொல்லவும் முடியாது. அதனை அரசியலாக கருதவும் முடியாது.
இந்தப் பின்னணிகள் இருக்கின்ற நிலையில் சிராஸ் மீராசாஹிவு முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்வதில்லை என்ற முடிவினை அறிவித்துவிட்டு, பின்னர் இராஜினாமாச் செய்தாலும், கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் எதிர் பார்க்கும் அன்பை பெற முடியாது.

0 comments:
Post a Comment