• Latest News

    December 23, 2013

    யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சுகாதார தொண்டர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.

     யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சுகாதார தொண்டர்களால் கடந்த 12 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

    யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் (23) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களுடன் நேரில் கலந்துரையாடி நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.
    கடந்த சுமார் 6 வருடங்களாக போதனா வைத்தியசாலையில் பரியோவான் முதலுதவிப் படை மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொண்டர்களாக பணியாற்றி வந்தனர்.

    இந்நிலையில் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 12 நாட்களாக குறித்த தொண்டர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொண்டதன் மூலம் வைத்தியசாலை நிர்வாகத்தினரும், சிகிச்சைக்காக வரும் நோயாளர்களும் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வந்தனர்.

    இந்நிலையில், இப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக இன்றைய தினம் (23) வைத்தியசாலைக்கு சென்ற அமைச்சர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர்களுடன் கலந்துரையாடியது மட்டுமல்லாது வைத்தியசாலை நிர்வாகத்தினதும், பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினதும், சுகாதார அமைச்சினதும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுக்கு எடுத்து விளக்கினார்.

    இதன்பிரகாரம் வைத்தியசாலையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முதற்கட்டமாக 68 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் ஏனையோரது நியமனங்கள் தொடர்பாக ஜனவரி 2ஆம் திகதி அமைச்சரவையில் கலந்துரையாடி சாதகமாக பரிசிலிக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன் அதுவரையில் போராட்டத்தை கைவிட்டு வைத்தியசாலையினதும் நோயாளர்களினதும் நலன்களை கருத்தில் கொண்டு தொண்டர்கள் பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

    அதனொரு அங்கமாக பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக தொண்டர்களுக்கு பானம் வழங்கிவைத்தார்.

    இந்நிலையில் 168 பேருக்கு எதிர்வரும் வியாழக்கிழமை நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதுடன், ஏனையோருக்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடியும் சிறப்பு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தும் அவர்களை தற்காலிகமாக பணிக்கு அமர்த்துவது தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்படுமென்றும் தற்காலிகமாக இத் தொண்டர்கள் பணியாற்றும் போது மூன்று வருட அவகாசம் வழங்கப்பட்டு அதற்குள் இவர்கள் தங்களது கல்வித் தகைமையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

    இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி பவானி பசுபதிராஜா, வைத்தியசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் இரா.செல்வவடிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சுகாதார தொண்டர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top