• Latest News

    May 19, 2014

    தமிழகத்தில் மட்டும் மோடிக்கு பதிலாக ‘லேடி’ அலை வீசியது ஏன்.. காரணங்கள் இவைதான்!

    சென்னை: மோடி அலையில் இருந்து தப்பித்து தமிழகத்தில் ஜெயலலிதா அலை வீச காரணம் என்ன என்று அரசியல் விமர்சகர்கள் மண்டையை பிய்த்துக்கொண்டுள்ளனர். அந்த காரணங்கள் தமிழக மக்களுக்கே உரிய தனித்துவமானவை. ஜெயலலிதா அரசு 3 ஆண்டுகளை முடித்து நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்க உள்ளது.
    அதாவது மற்றொரு வகையில் கூறினால், மூன்றாண்டு கால ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையை அதிமுக சம்பாதித்திருக்க வேண்டும். இதையே வேறுவகையில் பார்த்தால், அடுத்த இரண்டாண்டில் திமுக கையில் ஆட்சியை ஒப்படைக்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

    ஏனெனில் ஆட்சியை இவ்விரு கட்சிகளிடமும் மாறி மாறி ஒப்படைப்பதுதான் தமிழக மக்களின் வழக்கம். இப்படியொரு சூழ்நிலையில் அதிமுக தனித்து போட்டியிட்டு பெற்றுள்ள அபார வெற்றி வட இந்திய விமர்சகர்களை வாயடைக்க செய்கிறது. ஆனால் தமிழர்களுக்கே உரித்தான சில காரணங்கள் இந்த வெற்றியின் பின்னணியில் உள்ளன.
    அந்த முத்தான முக்கிய காரணங்கள் இவைதான்:

    ஆளும் கட்சிக்கே ஓட்டு..
    தமிழக மக்கள் எப்போதுமே யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பார்கள். இடைத்தேர்தல்கள் நடந்தாலும் இதுதான் நிலை. ஆனால் இந்தியாவின் பிற மாநிலங்களில் இதுபோன்ற டிரெண்ட் கிடையாது. இடைத் தேர்தலிலேயே டெபாசிட் இழந்த ஆளும் கட்சிகள் எல்லாம் பிற மாநிலங்களில் உள்ளன. எனவே இப்போதும் மக்கள் தங்கள் கடமையை செவ்வனே செய்துள்ளதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
    சட்டம் ஒழுங்கு சூப்பர்..
    மின்சார தட்டுப்பாடு பிரச்னையை தவிர பெரிய அளவில் ஆட்சிக்கு எதிரான கோப அலை எதுவும் தமிழகத்தில் இல்லை. அதுபோல சட்டம் ஒழுங்கு வட மாநிலங்களைப்போல கெட்டு ப்போகவும் இல்லை. தமிழக உளவுப்பிரிவு போலீசார் பல தீவிரவாத தாக்குதல்களை முன்கூட்டியே தடுத்து சாதித்துள்ளனர்.
    சலுகைகள் நின்றுவிடுமே..
    சட்டசபை தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் பலவும் நிறைவேற்றப்பட்டுள்ளன, சில நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இப்போது வேறு கட்சிக்கு வாக்களித்தால் அந்த சலுகைகளை அரசு அளிக்காமல் நிறுத்தவும் வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்திருக்கலாம்.
    தெளிவான நிலை…
    பாஜக, திமுக கூட்டணிகளைப்போல வழவழ இழுவையோ அதிமுகவில் இல்லை. “இவர்தான் வேட்பாளர், இரட்டை இலையில் ஓட்டைப் போடுங்கள்” இந்த இரண்டு வாக்கியங்களும் ஜெயலலிதாவுக்கு போதுமானவையாக இருந்தன.
    திமுக, தேமுதிக மீதான வெறுப்பு… திமுகவில் அழகிரியால் ஏற்பட்ட குழப்பத்தையும், திமுக மீதான இன்னும் மறையாத 2ஜி ஊழல் விவகாரத்தையும், தேமுதிக தலைவர் விஜய்காந்த் நடத்திய கூட்டணி பேரம்- பிரச்சாரத்தில் நடந்து கொண்ட முறையால் எரிச்சலில் இருந்த மக்களின் மன ஓட்டத்தையும், பாமக, தேமுதிக இடையேயான ஒத்துழையாமையும் அதிமுக நன்கு பயன்படுத்திக் கொண்டது. இவை தான் ஜெயலலிதாவின் இந்த தேர்தல் வெற்றிக்கான முக்கிய காரணங்களாக தமிழக அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழகத்தில் மட்டும் மோடிக்கு பதிலாக ‘லேடி’ அலை வீசியது ஏன்.. காரணங்கள் இவைதான்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top